மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இப்படிக்கு வயிறு! - 19

இப்படிக்கு வயிறு! - 19

இப்படிக்கு வயிறு! - 19
##~##

மக்கு வந்திருப்பது வயிற்றுப் புண்தான் என்பதை நீங்கள் சில அறிகுறிகளை வைத்தே அறிந்துவிட முடியாது. காரணம், வயிற்றுப் புண்ணால் உண்டாகும் அத்தனை வெளிப்பாடுகளும் அறிகுறிகளும் பித்தப்பைக் கற்கள் இருந்தாலும் உண்டாகலாம். 'வலிக்கான காரணம் வயிற்றுப் புண்ணா அல்லது பித்தப்பைக் கற்களா?’ என்பதை மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துத் தெரிந்துகொள்வதே நல்லது. ஸ்கேன் மூலமாக இதைச் சுலபமாக அறியலாம். பேரியம் கொடுத்து எடுக்கப்படும் எக்ஸ் ரே படங்கள் (Barium Meal Xrays)  மூலமாக வயிற்றுப் புண்ணா, பித்தப்பைக் கற்களா என்பதை எளிதாக அறிய முடியும். வயிற்றுப் புண்ணுடன் கூடிய குடல் அடைப்பு அல்லது இரைப்பையில் உள்ள புற்று நோய் வயிற்றுப் புண்ணைப் போன்ற வெளிப்பாடுகளுடன் இருக்கும்போது, பேரியம் மாவு கொடுத்து எடுக்கப்படும் எக்ஸ் ரே படங்கள் வியாதியின் தன்மையை அறிய உதவுகின்றன. 

வயிற்றுப் புண்ணால் துவாரம் ஏற்பட்டு, வயிறு வீங்கி நோயாளி ஆபத்தான நிலைமையில் இருக்கும்போது, வயிற்று எக்ஸ்ரே (Plain Xray abdomen)  அல்லது வயிற்று சி.டி. ஸ்கேன் மூலமாக பாதிப்பைத் துல்லியமாக அறியலாம். உணவுக் குழாய் மற்றும் இரைப்பையின் உட்புறத்தைத் தெளிவாகப் பார்க்க உதவும் எண்டாஸ்கோப்பி பரிசோதனை முறைதான் வயிற்றுப் புண்ணுக்காகச் செய்யப்படும் பரிசோதனை முறைகளில் சிறந்தது; எளிதானதும்கூட! வெளி நோயாளியாகவே இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ளலாம். இந்தப் பரிசோதனைக்கு முதல் நாள் இரவு எளிய உணவு உண்ண வேண்டும். சோதனைக்கு முன் 6 மணி முதல் 8 மணி நேரம் வரை எதுவும் சாப்பிடக் கூடாது. முதலில் பரிசோதனைக்கூடத்தில் தொண்டைப் பகுதியை உணர்வு இழக்கச் செய்ய வாய் வழியாக மரத்துப்போகச் செய்யும் மருந்தினை மருத்துவர் திரவமாகவோ அல்லது ஸ்பிரே மூலமாகவோ அளிப்பார். பிறகு, எண்டாஸ்கோப்பி கருவி வாய் வழியாகச் செலுத்தப்பட்டு உணவுக் குழாய், இரைப்பை போன்ற பாகங்கள் பரிசோதிக்கப்படும்.

இப்படிக்கு வயிறு! - 19

ஒவ்வொரு பாகத்திலும் அந்தந்தப் பகுதியின் அமைப்பு, அடைப்பு, கட்டிகள், புண் ஏதேனும் இருக்கிறதா, மேற்கண்ட பாகங்களின் சுருங்கி விரியும் தன்மை சரியாக இருக்கிறதா என்பன போன்ற அனைத்து விஷயங்களும் பரிசோதிக்கப்படும். முக்கியமாக இரைப்பையின் முடிவுப் பகுதியில் உள்ள திசுவை எடுத்து 'எச்.பைலோரி’ உள்ளதா என்ற பரிசோதனையைச் செய்ய எண்டாஸ்கோப்பி உதவுகிறது. இதை 'எச்.பைலோரி யூரியேஸ் கிட் டெஸ்ட்’ (H.Pylori Urease Kit Test)  மூலமாகவோ அல்லது 'எச்.பைலோரி திசுப் பரிசோதனை’ (H.Pylori Biopsy Test) மூலமாகவோ கண்டறியலாம். 'எச்.பைலோரி’யை மூச்சுக்காற்றில் கண்டறியும் சோதனை முறையும் இருக்கிறது.

எண்டாஸ்கோப்பியின் புது வரவான என்.பி.ஐ. (Narrow Band Endoscopy) உணவுக் குழாய் முடிவு (OG Junction)  இரைப்பைப் பெருங்குடல் போன்ற பகுதிகளில் உள்ள ஆரம்ப நிலைப் புற்றுநோயைத் தெளிவாகக் காட்டுகிறது. இரைப்பைப் புண், வயிற்று வலிப் புண் உள்ளவர்கள் திடீரென்று ரத்த வாந்தி எடுத்தால்... எண்டாஸ்கோப்பி மூலம் ரத்தம் வரும் இடத்தை சரியாகக் கண்டுபிடித்து 'எலக்ட்ரோகாட்டரி’ எனப்படும் கருவியின் மூலமாகவோ அல்லது லேசர் சிகிச்சை மூலமாகவோ ரத்தக் கசிவை நிறுத்த முடியும். ரத்தத்தை உறையவைக்கும் மருந்துகளை ஊசி மூலம் 'எலக்ட்ரோகாட்டரி’ கருவி வழியாகக் கொடுத்தோ அல்லது நவீன கிளிப் மூலமாகவோ ரத்தக் கசிவை நிறுத்தும் சிகிச்சைகளும் உள்ளன. மொத்தத்தில் எண்டோஸ்கோப்பி சிகிச்சை, இந்த நூற்றாண்டின் வரப்பிரசாதம்!

இரைப்பை, சிறுகுடல் புண்களால் அவதிப்படுபவர்களுக்குப் படிப்படியான முறைகளில் சிகிச்சை வழங்க வேண்டும். வயிற்று வலி, வாந்தி, குமட்டல் போன்ற தொந்தரவுகளில் இருந்து நோயாளியை முதலில் விடுவிப்பது, புண்ணை ஆற்றுவது, பின் அது மீண்டும் வராமல் தடுப்பது போன்ற மூன்று நிலைகளைக் கடந்துதான் நோயாளி பூரண குணம் பெற முடியும். குடும்பப் பிரச்னைகளில் இருந்தும் மற்ற எல்லாவிதக் கவலைகளில் இருந்தும் விடுபட்டு நோயாளி ஒய்வெடுக்க வேண்டும். வயிற்றுப் புண் குணமாக மனரீதியான நிம்மதியும் ஓய்வும் முக்கியம். மனதுக்கும் வயிறாகிய எனக்கும் சம்பந்தம் உண்டு என்பதைத் தொடர்ந்து நான் உங்களிடத்தில் சொல்லிவருகிறேன்.

வயிற்றுப் புண் பாதிப்புக்கு ஆளானவர்கள் அடிக்கடி சிறிது சிறிதாக உணவை உண்ணச் செய்து இரைப்பைக்கு ஓரளவு ஓய்வு கொடுக்க வேண்டும். காரம், மசாலாக்கள் அதிகம் இருக்கும் உணவுகளை நீக்கி, மிதமான புரதச் சத்து உள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். மாவுப் பதார்த்தங்களைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரைப் பொருட்களையும் புளிப்புப் பொருட்களையும் நீக்க வேண்டும். சோளம், கம்பு, கேழ்வரகு இவற்றைத் தவிர்ப்பது நல்லது. புகைபிடித்தலும், மது அருந்துதலும் குடற்புண்ணை அதிகப்படுத்தும்.

காய்கறிகளை வேகவைத்து உண்ண வேண்டும். வேகாத பொருட்களையும் வறுவல்களையும் அறவே நீக்க வேண்டும். கீரை வகைகளில் மணத்தக்காளி, காய்கறிகளில் முட்டைக்கோஸ் ஆகியன வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தச் சிறந்தவை. உணவில் மட்டும் அல்ல... மனதளவிலும் சில சிகிச்சைகள் வயிற்றுப்புண்ணுக்குத் தேவை. நோயாளியின் நியாயமான ஆசைகளைப் பூர்த்திசெய்வதும் அவரது சுயமரியாதைக்குப் பாதகம் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்வதும் மனப் போராட்டங்களை வெளிப்படுத்த வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதும் அவருக்கு விருப்பமான வேலைகளில் ஈடுபடுமாறு ஊக்குவிப்பதும் வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்த உதவும். மனசு நன்றாக இருந்தால் எல்லாமே நன்றாக இருக்கும்!

மெல்வேன்... சொல்வேன்...