உலகம் முழுக்க மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவரும் கொரோனா பாதிப்பு, தற்போது இந்தியாவிலும் மிகத்தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் கேரளாவில் மூன்று பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருந்த போதிலும், பின்வந்த நாள்களில் கேரள சுகாதாரத்துறையின் தீவிர நடவடிக்கை காரணமாக சம்பந்தப்பட்ட மூவரும் முழுமையாகக் குணமாகி வீடுதிரும்பினர். கேரளாவில் நோய்த் தாக்குதல் சந்தேகத்தின் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டவர்கள், நோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு மீக்கப்பட்டவர்கள் என அனைவரும் வீடு திரும்பி ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், இந்தியாவில் வேறு யாருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம், டெல்லியைச் சேர்ந்த ஒருவர், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர், ராஜஸ்தான் வந்துள்ள இத்தாலி நாட்டுப் பயணி ஆகிய மூவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இவர்கள் மூவருக்கும் மிகச்சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார். மேலும், இந்த மூவருடன் தொடர்புடைய மற்ற நபர்களுக்கும் கொரோனாவுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்தப் பரிசோதனைகளின் முடிவில், இவர்களோடு பழகிய இன்னும் 22 பேருக்குக் கொரோனாவின் தாக்கம் இருப்பது இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இத்தாலியப் பயணியோடு தொடர்புடைய 15 பேர், வட இந்தியாவின் வாகன ஓட்டுநர் ஒருவர், நேற்று முன்தினம் உறுதிசெய்யப்பட்ட டெல்லி நபரின் குடும்பத்தைச் சேர்ந்த 6 நபர்கள் என மொத்தம் 22 பேருக்குப் புதிதாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் உறுதிசெய்யப்பட்ட மூவரோடு சேர்த்துப் பார்க்கும்போது, இப்போதைக்கு இந்தியாவில் 25 பேருக்குக் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 22 பேருக்குப் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருக்கும் அறிக்கை, மக்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை உண்டாக்கியுள்ளதென்றே சொல்லவேண்டியுள்ளது.

இந்தியாவில் நோய் பரவியமைக்கான காரணமாக அதிகாரிகள் குறிப்பிட்டுச் சொல்வது, இத்தாலியப் பயணிகளில் ஒருவரைத்தான். இந்தியாவைப் பொறுத்தவரை, பயணிகள் அனைவருமே விமான நிலையங்களில் கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இருந்தும், இந்த ஒரு பயணி கண்காணிப்பிலிருந்து எப்படி விடுபட்டார் என்பது பலருக்கும் கேள்விக்குறியாக இருந்தது.
இது குறித்துப் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், "எல்லா நாடுகளைச் சேர்ந்தவர்களும் கொரோனாவுக்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள். கொரோனா தாக்கம் உள்ள நாட்டிலிருந்து பயணப்படுபவர்கள் மட்டுமே, பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். அந்த வகையில், இத்தாலியிலிருந்து வந்திருந்த அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இப்போது பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருக்கும் அந்த நபர், இத்தாலியிலிருந்து நேரடியாக இந்தியா பயணப்பட்டவர் அல்லர் என்பதுதான், அவர் கண்காணிப்பில் விடுபட்டதற்குக் காரணம். அவர், இத்தாலியிலிருந்து ஆஸ்திரியா பயணப்பட்டு, அங்கிருந்து இங்கு வந்து, இங்கு இந்தக் குழுவோடு இணைந்திருக்கிறார்.
ஆஸ்திரியா, கொரோனா தாக்கம் இல்லாத நாடு என்பதால், இந்தியா வந்திருந்தபோது அவர் கண்காணிப்புக்குள் வராமல் இருந்துவிட்டார். இதுவே இப்போது நமக்குச் சிக்கலாவிட்டது" எனக் கூறியுள்ளார்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், யாருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக விமான வழிப் பயணிகள் அனைவரும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் பத்திரிகையாளர் மத்தியில் தெரிவித்துள்ளார்.