குட் நைட்!

##~## |
ஹாலிவுட்டில் 1996-ல் 'கிராஜுவேட்’ என்கிற படம் வந்தது. பள்ளி மாணவன் ஒருவனுக்கும் அவனுடைய வகுப்பு ஆசிரியைக்கும் இடையில் ஏற்படும் காதல் உறவுதான் படத்தின் கதை. 'தில் சாக்தா ஹை’ என்று ஓர் இந்திப் படம். அதில் மூன்று கதாநாயகர்கள். அதில் ஒருவன் தன்னைவிட வயதான பெண்ணின் மீது ஆசைப்படுவான். இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இப்போது சகஜமாகிவிட்டன. சமீபத்தில்கூட சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு பள்ளியில், ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவனும் அவனுடைய ஆசிரியையும் வீட்டைவிட்டு வெளியேறியதை நாளிதழ்களில் படித்து அதிர்ந்தோம். இந்த மாதிரியான உறவுக்கு ஆங்கிலத்தில் 'மே - டிசம்பர் ரிலேசன்ஷிப்’ என்று பெயர். கடந்த வாரம் என்னைப் பார்க்க வந்த இளைஞர் மனோகரனின் பிரச்னை இந்த ரகம்.
''என்னைவிட எட்டு வயது அதிகமான பெண்ணை சந்தர்ப்பச் சூழல் காரணமாகத் திருமணம் செய்துகொண்டேன். இல்லறத்துக்கான அடையாளமாக எங்களுக்குக் குழந்தைகளும் இருக்கிறார்கள். ஆனால், என்னைவிட வயது குறைவான பெண்ணைக் கல்யாணம் செய்திருந்தால், மண வாழ்க்கை மேலும் இனிமையாக இருந்திருக்கும் என்கிற எண்ணம் என்னை அடிக்கடி துரத்துகிறது. நான் நினைப்பது சரியா?'' - இதுதான் மனோகரனின் பிரச்னை.

பொதுவாக, மனமுவந்து வயது வித்தியாசம் பார்க்காமல் இருவர் திருமணம் செய்துகொள்வது என்பது விமர்சனத்துக்கு உரியது அல்ல. அது அவர்களின் உரிமை, அவர்களின் விருப்பம்.
இந்த உறவில் பாலியல்ரீதியில் இருவருக்கும் சில அனுசரிப்புகள் தேவைப்படும். அவற்றைப் புரிந்துகொண்டு, அனுசரித்துக்கொண்டால், இந்த உறவு தித்திக்கவே செய்யும். வயதான பெண்ணுக்கு - உடல் உறவு சமயத்தில் பிறப்புறுப்பில் ஊறும் மதன நீர் தாமதமாகத்தான் சுரக்கும். இதற்கேற்ப இந்தப் பெண்ணுடன் உறவில் ஈடுபடும் இளைஞன் பொறுமையாகக் கலவியில் ஈடுபட வேண்டும். முன்விளையாட்டுகளில் (Fore play) நிறைய ஈடுபட வேண்டும். இதேபோல, இள வயது ஆண் பதற்றத்தோடு அணுகும்போது, விந்து முந்துவது போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடலாம். அவருக்கு ஏற்ற பக்குவம் வரும் வரை பெண் இடம் அளிக்க வேண்டும். உடல் சார்ந்து இத்தகைய முன்தயாரிப்புகள் வேண்டும் என்றால், மனம் சார்ந்து இன்னும் நிறைய முன்தயாரிப்புகள் தேவைப்படும்.
வயது அதிகமான பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளும்போது சமூகரீதியாக சில விமர்சனங்கள், கண்டனங்கள் வரலாம். இதனைப் புறம்தள்ள இவர்களுக்கு தைரியம் வேண்டும். ஆணாதிக்கச் சமூகமாக இருப்பதால் வயதான ஆணுடன் ஓர் இளம் பெண் நெருக்கமாவதை எதிர்க்காத சமூகம், வயதான பெண்ணுடன் ஓர் இளம் ஆண் நெருக்கமாவதைக் கேவலமாகப் பார்க்கும் நிலை உள்ளது. இந்த விஷயத்தில் வயதான ஆணைப் பார்த்து 'ஆம்பளடா’ இந்த வயதிலும் 'ஜம்னு... இருக்கார் பார்’ என்று கை தட்டுகிற சமூகம்... இதே வயதான பெண் இளம் ஆணுடன் கூடினால், 'காமவெறி பிடிச்சு அலையறாடா’ என்று விமர்சன வெடி வைக்கும். இவற்றை எல்லாம் கடந்து வரும் மனோபலம் இருவருக்கும் வேண்டும்.

இப்படி இருவரும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொண்டு உறவாடினால், அதில் எந்தப் பிரச்னையும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால், மனோகரனைப் போன்றவர்களுக்கு உருவாகும் பிரச்னை கவனிக்க வேண்டியது. அதாவது, வாழ்க்கைத் துணைக்கு இளமை இருக்கும் வரை அதைச் சுரண்டிவிட்டு, இளமை போனவுடன் அடுத்த ஆளைத் தேடுவது ஆபத்தானது!
இந்த இடத்தில் ஆண் - பெண் இருபாலருமே இரண்டு விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். இளசு இளசுதான்; முற்றல் முற்றல்தான். காய்-கனிகளுக்கு மட்டும் அல்ல; மனிதர்களுக்கும் இது பொருந்தும். இளவயதுக்காரர்களுடன் பாலுறவுகொள்வது இனிக்கவே செய்யும். ஆனால், எல்லோருக்குமே ஒரு நாள் வயதாகும்... இல்லையா? இது முதல் விஷயம். இரண்டாவது விஷயம், பாலுறவு என்பது இரு உடல்களின் சேர்க்கை மட்டும் அல்ல; மனங்களும் சங்கமிக்கும் கூடல் அது. தவிர, தாம்பத்தியம் என்பது வெறும் பாலுறவுக்கான உறவு மட்டும் அல்ல. ஆகையால், இள வயதுக்காரர்கள் மீதான தகாத வேட்கைக்கு நியாயங்களைத் தேடுவது அநியாயம். இப்படிப்பட்ட பிரச்னைகளை எதிர்கொள்பவர்கள் தங்களைத் தாங்களே ஒரே ஒரு கேள்வி கேட்டுக்கொண்டால் போதும், விடை கிடைத்துவிடும்: குற்ற உணர்வுடன் யாராவது வாழ்க்கையைக் கொண்டாட முடியுமா?
- இடைவேளை...