மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இப்படிக்கு வயிறு! - 20

இப்படிக்கு வயிறு! - 20

இப்படிக்கு வயிறு! - 20
##~##

ன்றைக்கு 'அல்சர்’ அச்சப்படுத்தும் பிரச்னை இல்லை என்றால், அதற்குக் காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் மருத்துவர்கள் மார்மூல், வாரன் இருவரும்தான். இன்றைய நிலையில், மருத்துவரின் ஆலோசனையின்படி உரிய மருந்துகளை எடுத்துக்கொண்டாலே அல்சர் பறந்தோடிவிடும். அதனால் அல்சரைக் கண்டு அஞ்ச வேண்டிய நிலை இப்போது இல்லை. 

அடுத்தபடியாய்ப் பலருக்கும் இருக்கும் மிக முக்கியப் பிரச்னை குறித்துச் சொல்லப்போகிறேன். 'பிதாமகன்’ படத்தில் வாயு கோளாறு பற்றி சூர்யா வாய் நீள வசனம் பேசுவாரே... ஆமாம்... அதே வாயுக் கோளாறைப்பற்றித்தான் நான் பேசப்போகிறேன். வயிறாகிய எனக்குள் உள்ள மிக நீளமான உறுப்பு சிறுகுடல். அங்கேதான் வாயுக் கோளாறு ஆரம்பிக்கிறது. இரைப்பையின் பைலோரஸ் வாய்க்கால் பகுதி முடிந்து, அதில் இருந்து ஆரம்பிக்கும் சிறுகுடல், பெருங்குடல் ஆரம்பப் பகுதியான இலியோ சீக்கல் (Ileo Caecal) வரையிலும் நம் உடல் பகுதியின் முக்கியமான செரிமான மண்டலமாக அமைந்து இருக்கிறது. இதன் மொத்த நீளம் 5-7 மீட்டர்.

இப்படிக்கு வயிறு! - 20

இதில் முன் சிறுகுடல் எனும் டியோடினம் 2030 செ.மீ நீளமும், கடைச் சிறுகுடல் 2.5 மீட்டர் நீளமும், இலியம் எனப்படும் இடைச் சிறுகுடல் 3.5 மீட்டர் நீளமும் கொண்டதாக இருக்கிறது. இந்தச் சிறுகுடலின் சவ்வுப்படலம் (Mucosa) கடல்போல் விரிந்துகிடக்கிறது. பெண்கள் சேலை கட்டும்போது வைத்துக்கொள்ளும் கொசுவம்போல, மடிப்பு மடிப்பாக சிறுகுடலின் உட்புறமாய் இது பரந்து இருக்கும். சின்ன உருளைக்குள் அடைந்துகிடக்கும் இந்த மடிப்புகள் நீண்டு இருந்தால் 5000-6000 செ.மீ வரை போகும். சிறுகுடலின் உட்புறச் சுவர்ப் பகுதியில் நுண்ணிய இழைகள், விரல்களை நீட்டிக்கொண்டு இருப்பது போன்ற அமைப்பு இருக்கிறது. இதற்கு வில்லை ((Villai) என்று பெயர். இந்த 'வில்லை’தான் உணவில் மிச்சம் இருக்கும் சக்தியையும் கழிவையும் பிரித்து எடுக்கிறது. அதோடு, இதுதான் கழிவுப் பொருட்களைப் பெருங்குடலுக்கும், உணவில் இருந்து எடுக்கப்பட்ட கொழுப்புச் சக்தியை ரத்தக் குழாய்களுக்கும் அனுப்புகிறது.

சிறுகுடலில் உட்பரப்பை உற்றுநோக்கினால் மலைகளும் பள்ளங்களுமாக இருப்பதுபோல் தோற்றம் அளிக்கும். அதெல்லாம் வில்லையின் அமைப்புதான். அதன் உள்ளே வில்லையின் வழியாகத்தான் செல்ல வேண்டி இருக்கும். ஒவ்வொரு வில்லையில் மடிப்புகளையும், பள்ளங்களையும் நீட்டி சம தரைபோல் ஆக்கினால் அதனுடைய அளவு ஐந்து டேபிள் டென்னிஸ் மேசைகளின் பரப்பின் அளவுக்குச் சமமாக இருக்கும்.

நீட்டிக்கொண்டு இருக்கும் விரல்கள் போன்ற அமைப்பில் இருந்து, நுண்ணிய இழைகள் அதன் மேற்பரப்பு முழுவதும் நிறைந்து இருக்கிறது. இதற்கு 'மைக்ரோ வில்லை’ (Micro Villai)என்று பெயர். இந்த நுண்ணிய இழைகளின் மீது மெழுகிவைத்தது போன்ற பூச்சு இருக்கின்றது. இந்தப் பூச்சுக்கு ஃபஸ் (Fuzz)  என்று பெயர். இது கிளைகோ கேலிக்ஸ் (Glycocalyx) என்ற பொருளினால் ஆனது. சிறுகுடலில் செரிமானமான உணவுக் கூழ் பெருங்குடலுக்கு எப்படி அனுப்பிவைக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? வயிறாகிய எனக்குள் நடக்கும் வியப்பூட்டும் அந்த நிகழ்ச்சிகளைக் கீழே படியுங்கள்.

சிறுகுடலில் செரிமானம் ஆன உணவைப் பெருங்குடலுக்கு அனுப்பிவைக்கக் குடலின் சுருங்கி விரியும் தன்மை உதவுகிறது. சுருங்கி விரியும் தன்மையினால், பல இணைப்புகளாக அமைந்த சிறுகுடலின் ஒவ்வொரு பாகத்தில் இருந்தும் உணவு கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே தள்ளப்படுகிறது. குடல் சுருங்கி விரிதலில் 50 நிமிடங்கள் சலனம் இல்லாமல் அமைதியாக இருக்கும். பிறகு 30 நிமிடங்கள் ஒழுங்கற்ற முறையில் சுருங்கி விரியும். பிறகு ஐந்து நிமிடங்கள் வரை முறையாகச் சுருங்கி விரியும். இப்படிச் சுருங்கி விரிவதால் ஏற்படும் அழுத்தத்தினால் உணவு கீழே இறங்கும். பெருங்குடலிலும் இதேபோல் பல இணைப்புகளைத் தாண்டித்தான் உணவு போக வேண்டும். இப்படி, சிறுகுடலில் உள்ள பொருட்கள் வயிறு நெடுகிலும் நகர்ந்து செல்லும் வகையில் குடலில் ஏற்படும் அசைவியக்கம், ஒரு தசைத் தளர்வு அலையைத் தொடர்ந்து, இந்த அசைவு அலை தோன்றுகிறது. இந்த அலைகள் உணவு உருண்டை எளிதாகக் கீழிறங்கிச் செல்வதற்கு ஏற்றபடி, உணர்வற்ற தன்னியக்கத் தசைச் சுருக்க அலைகளாகும். இதை, குடல் தசை அலைவியக்கம் (Peristalisis) என்பார்கள்.

முன் சிறுகுடல் 'சி’ போன்று வளைந்த பகுதியாக இருக்கும். இது சிறுகுடலின் ஆரம்பப் பாகம் ஆகும். இந்த முன் சிறுகுடலில் இருந்து உணவு நடுச் சிறுகுடல், கடைச் சிறுகுடல், ஆகிய பகுதிகளுக்கு வரும். முன் சிறுகுடலைத் தவிர்த்து மீதம் இருக்கும் பாகத்தை ஐந்தாகப் பிரிக்கலாம். இதில் முதல் இரண்டு பாகங்களைத்தான் நடுச் சிறுகுடல் என்கிறோம். அடுத்து உள்ள மூன்று பாகங்களை கடைச் சிறுகுடல் என்கிறோம். இந்தப் பகுதிகளில்தான் உணவில் இருக்கும் புரதச் சத்து அமினோ அமிலமாகவும், மாவுச் சத்து சர்க்கரையாகவும், கொழுப்பு,  கொழுப்பு அமிலமாகவும் மாற்றப்படுகிறது.

அடுத்தடுத்து நடக்கும் மாற்றங்களையும் அதற்காக குடலுறுப்புகள் செய்யும் பணிகளையும் பார்த்தால், வயிறாகிய எனக்குள் இத்தனை இயக்கங்களா என நீங்கள் அசந்துபோவீர்கள்!

- மெல்வேன்... சொல்வேன்...