மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இப்படிக்கு வயிறு! - 21

இப்படிக்கு வயிறு! - 21

இப்படிக்கு வயிறு! - 21
##~##

னக்குள் நடக்கும் இயக்கங்களைப் பற்றி நான் ஓவர் பில்ட் அப் கொடுப்பதாக நினைக்க வேண்டாம். படிப்படியாக நடக்கும் பணிகளைச் சொன்னால், 'இது வயிறா... இல்லை தனி உயிரா?’ என்கிற ஆச்சரியமே உங்களுக்கு உருவாகும். 

சிறுகுடலின் உட்சவ்வில் உட்புறமாக, வளைந்து வளைந்து அடுக்கடுக்காகச் செல்லும் வளைவுகள் உள்ளன. வில்லை எனப்படும் இந்தத் தசைச் சுவர்களின் வெளிப்புறமாய் நிறைய உயிரணுக்கள் உள்ளன. இந்த வளைவுகளில் 'என்ட்ரோசைட்’ ((Enterocyte)  என்னும் உயிரணு உள்ளது.

அடுத்து, 'சளி’ போன்ற திரவத்தைக் கொடுக்கக்கூடிய 'காப்லெட்’ (Coblet) உயிரணுக்கள் உள்ளன. இவைதான் மியூகோஸாவில் வழுவழுப்பான தன்மையைக் கொடுக்கிறது. பிறகு, எண்டோக்ரைய்ன் (Endocrine)  என்னும் செல்கள் இருக்கின்றன. இதில் 'டி’ உயிரணு என்று ஒரு வகையும், 'எல்’ உயிரணு என்று ஒரு வகையும் உள்ளன. டி உயிரணு, சொமொட்டோஸ்டேடின் (Somatostatin) என்ற ஹார்மோனைச் சுரக்கிறது. எல் உயிரணு,

இப்படிக்கு வயிறு! - 21

'குளுக்கோகான்’ ((Glucogan) என்ற ஹார்மோனைச் சுரக்கிறது. இவை தவிர, 'பேனத்’ (Paneth)உயிரணுக்களும் இருக்கின்றன. இதில் உள்ள 'லைசோசைம்ஸ்’ (Lysozymes) என்னும் நொதிப்பொருள் பாக்டீரியாக்களை அழிக்கும் ஒரு கிருமிநாசினியாகச் செயல்படுகிறது.

புரியாத பெயர்களைச் சொல்லி உங்களைக் குழப்புவதாக நினைக்க வேண்டாம். நீங்கள் உண்ணும் உணவு படிப்படியாக எத்தனை நிலைகளைக் கடக்கிறது, அதற்கு உடலுக்குள் உள்ள அமைப்புகள் எப்படி உதவுகின்றன என்பதை உரிய பெயர்களோடு சொல்ல வேண்டியது என் கடமை. வளைந்த அடுக்குகளில் இருக்கும் உயிரணுக்களின் அமைப்பைப் பார்க்கும்போது குருஷேத்திரத்தில் வியூகம் அமைத்துப் போர் தொடுக்கத் தயாராக நின்ற படைகளின் தோற்றம்தான் நினைவுக்கு வரும்.

சிறுகுடல், தன்னிடம் உள்ள குடல் உறிஞ்சிகள் மூலம் உணவில் உள்ள சத்துப் பொருட்களை உறிஞ்சிக்கொள்கின்றன. இதன் பின் நடக்கும் சிறுகுடல் செயல்பாடுகள்தான் முக்கியமானவை. சிறுகுடலும், பெருங்குடலும் புகைவண்டி மாதிரி பல பகுதிகளைக்கொண்டவை. இங்கே ஒவ்வொரு பகுதியும் ஆறு இஞ்ச்  நீளத்துக்கு இருக்கும். உங்கள் இரைப்பையில் இருந்து சிறுகுடலுக்கு வரும் உணவு ஒரு பகுதியில் இருந்து அடுத்த பகுதிக்குப் பயணிப்பது எப்படி தெரியுமா? உணவு இருக்கும் பகுதி தானாகவே அழுத்தி, சுருங்கி, உணவை அடுத்த பகுதிக்குத் தள்ளும். அப்போது அடுத்தப் பகுதி தனது உணவை உள்வாங்கிக்கொள்ள, தானாகவே லேசாக விரியும்.

இப்படி உணவு சிறுகுடலில் இருந்து பெருங்குடல் போய்ச் சேர ஒன்று முதல் 6 மணி நேரம் வரை ஆகும். இதே உணவு, வாயில் இருந்து பெருங்குடல் போய்ச் சேர 12 மணி நேரமாகும். ஒரு நாளைக்குச் சராசரியாக 8 முதல் 10 லிட்டர் வரை திரவ உணவைச் சிறுகுடல் உள்வாங்குகிறது. இந்தத் திரவ உணவு என்பது நாம் சாப்பிடும் உணவு, தண்ணீர், பித்தப்பையில் இருந்து வரும் பித்தநீர், கணையத்தில் இருந்துவரும் கணைய நீர், உள்ளே விழுங்கப்படும் எச்சில், குடலிலேயே சுரக்கும் நீர் எல்லாம் அடங்கியவை. இவை சிறுகுடலை ஆக்கிரமிக்கும்போது, இந்தத் திரவ உணவின் முக்கால்வாசிப் பகுதியை முன் சிறுகுடலிலும், நடுச் சிறுகுடலிலுமாக உறிஞ்சுகின்றன.

மீதம் உள்ள திரவப் பொருட்களைக் கடைச் சிறுகுடலும், பெருங்குடலும் உறிஞ்சிக்கொள் கின்றன. கடைசியாக மலமாகி, குடலில் இருந்து வெளியேற்றப் படும்போது, வெளியேறும் திரவத்தின் அளவு வெறும் 200 மி.லி. தான் இருக்கும்.

சிறுகுடலின் உள்ளே இருக்கும் திரவ உணவின் மொத்த அளவு ஒரு நாளைக்குச் சராசரியாக 9 லிட்டர் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

1. குடிதண்ணீர்  2 லிட்டர்

2. உமிழ் நீர்  1.5 லிட்டர்

3. இரைப்பை நீர்  2.5 லிட்டர்

4. பித்த நீர்  0.5 லிட்டர்

5. கணைய நீர்  1.5 லிட்டர்

6. குடலின் நீர் 1 லிட்டர்

என்ற விகிதப்படி சேர்ந்திருக்கும்.

நம் கிராமங்களில் மருதாணி அரைக்கும் நிகழ்வைப் பார்த்து இருக்கிறீர்களா? மடி நிறைய மருதாணி பறித்து அதை அம்மியில் அரைத்து, நீர் சேர்த்து இன்னும் நைஸாக அரைத்துக் கடைசியில் உள்ளங்கை அளவுக்கு வந்துவிடும். அதேபோல்தான் 9 லிட்டர் திரவ உணவு படிப்படியாகச் சுருங்கி 200 மில்லியாகிவிடுகிறது. சிறுகுடலுக்குத் தண்ணீரை உறிஞ்சும் ஆற்றல் அதிகம். செரிமானத்தின் போது சிறுகுடல் உணவில் உள்ள சத்துப் பொருட்களை உறிஞ்சிக் கொள்ளத் தண்ணீர்தான் உதவுகிறது.

இந்த இடத்தில்தான் மிக முக்கியமான விஷயம் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். 'காலரா’ மாதிரியான நோய்கள் உங்களைத் தாக்கும்போது, கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்படுகிறதே... அது ஏன் தெரியுமா? காலரா மாதிரியான வியாதிகள் தாக்கும்போது குடலில் ஒரு லிட்டர் அளவுக்கு மாறாக 10 லிட்டர் முதல் 20 லிட்டர் வரை குடல் நீர் உற்பத்தியாகும். இதனால்தான் அந்த மாதிரியான நேரங்களில் 'நிற்காத’ அளவுக்கு பின்னால் பிடுங்கிக் கொண்டு போகும்... சிறுகுடலில் தண்ணீர், சோடியம், தாது உப்புக் கள் ஆகியவை உறிஞ்சப்படுகின்றன. ரத்தத்தில் உள்ள தாது உப்புகளின் அளவைச் சரிவிகிதத்தில் வைத்துக்கொள்ள, சிறுகுடல் துணைபுரிகிறது. சிறுகுடலின் இந்தச் சத்து உறிஞ்சும் வேலைகளுக்குத் தண்ணீர்தான் மிக முக்கியத் துணை. 75 சதவீதம் சோடியம் உப்பைச் சிறுகுடல் உறிஞ்சிக்கொள்கிறது. சிறுகுடலின் ஒரு பகுதியான நடுச் சிறுகுடலில் பொட்டாசியம் உப்புகள் அதிக அளவு உறிஞ்சப்படுகின்றன. சிறுகுடல் மற்றும் பெருங்குடல் பகுதியில் உணவு சிதைக்கப்படும்போது, அங்கே பல ரசாயன மாற்றங்கள் நடக்கின்றன. இந்த மாற்றங்களால்தான் 'ஸ்...’ பிரச்னை ஏற்படுகிறது... அதாங்க வாயுக் கோளாறு!

மெல்வேன்... சொல்வேன்...