Published:Updated:

குட் நைட்!

குட் நைட்!

குட் நைட்!
##~##

போன வாரம் என்னிடம் ஒரு தண்ணி பார்ட்டி வந்தார். 32 வயசுதான் இருக்கும். தகவல் தொழில்நுட்பத் துறை ஆசாமி. பசையான வேலை. அவர் வந்து  உட்காரும்போதே ஏதோ பெயர் தெரியாத பழத்தின் வாசனை மூக்கில் அறைந்தது.

வந்த அதே வேகத்தில்... ''சார் இப்பல்லாம் என்னால் செக்ஸ்ல முழுமையா ஈடுபட முடியலை. அதான் உங்கக் கிட்டே வந்தேன்'' என்றார்.

நானும் எடுத்த எடுப்பிலேயே, ''உங்களுக்கு எப்படி போதைப் பழக்கம் வந்தது'' என்று கேட்டேன். கொஞ்சம்போல அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துக்கு உள்ளானவர் நிதானமாய்ப் பேச ஆரம்பித்தார்.

''போதையில் ரொம்ப நேரம் என்ஜாய் பண்ணலாம்னு என் நண்பன் ஒருத்தன் கல்யாணம் ஆன புதுசுல சொன்னான். அப்ப ஏற்பட்ட பழக்கம். இப்போ அது இல்லாம முடியலை சார்'' என்றார்.

எல்லாம் உள்ளதும் போச்சடா நொள்ளக்கண்ணா கதைதான்!

இன்று செக்ஸுக்கு நெருக்கமான விஷயமாகப் பலரும் போதைப் பொருட்களைத்தான் நாடுகின்றனர். தன்னுடைய உணர்வுகளைத் தணித்துக்கொள்ள நினைக்கும் பலர் பெண்ணை நாடுவதற்கு முன்பு தேடுவது போதை வஸ்துகளைத்தான். மும்பை போன்ற பெருநகரங்களில் இப்போது எல்லாம் 'ரேவ் பார்ட்டிகள்’ என்கிற சட்டத்துக்குப் புறம்பான கொண்டாட்டங்கள் சகஜமாகிவிட்டன. இத்தகைய

குட் நைட்!

பார்டிகளின் சிறப்பம்சம் என்ன தெரியுமா? சரளமாகப் புரண்டோடும் போதை வஸ்துகள்!

இன்றைய தலைமுறை இளைஞர்கள் இத்தகைய பார்ட்டிகளுக்குச் சொல்லும் காரணம். ''வேலைப் பளு சார். ஓவர் ஸ்ட்ரெஸ்... சும்மா ரிலாக்சேஷனுக்காகத்தான்...'' இன்னும் பலர் சமூகத்துடனான விசாலமானத் தொடர்புகளுக்கு இதுபோன்ற பார்ட்டிகள் மிகப் பெரிய வாசலாக அமைகின்றன என்றும் சொல்கிறார்கள். எப்படி எல்லாம் பேசுகின்றன நாக்குகள்? மனிதனுக்குக் காரணம் சொல்லக் கற்றுக்கொடுக்கவா வேண்டும்?

உண்மையில், போதைச் சமாச்சாரங்களை உட்கொண்டால் அதிக நேரம் உறவுகொள்ள முடியும் என்பது ஒரு மூட நம்பிக்கை. போதைப் பொருட்களை உட்கொள்வது உடலுறவுத் திறனை எந்த விதத்திலும் அதிகரிக்காது. அதே சமயம் தன்னுடைய இணையிடம் வரம்பு மீறி நடந்துகொள்ளத் தூண்டும். தன் மீது உயிரையே வைத்திருக்கிறவள் என்கிற நல்லெண்ணத்தை எல்லாம் துடைத்து,  வக்கிரப் புத்தியைக் கொடுக்கும். அது மட்டும் அல்ல; நாளடைவில் செக்ஸ் மீது உள்ள ஆர்வத்தையே அது துண்டித்துவிடும். அடுத்து ஆண்களுக்கு விறைப்புத் தன்மையில் பிரச்னையை ஏற்படுத்தும். கூடவே ஹார்மோன் குறைபாட்டையும் உருவாக்கும். குடிக்கு அடிமையான பல ஆண்களுக்கு, ஆரோக்கியம் பாதிக்கப்பட்ட உயிரணுக்களே விந்தில் இருக்கும். போதைப் பழக்கம் உள்ள பெண்ணாக இருந்தால் மாதவிடாய்ச் சுழற்சியில் சிக்கலும் கருமுட்டை வெளியாவதில் பாதிப்பும் ஏற்படும்.

பொதுவாக, போதைக்கு அடிமையாவதை ஒரு நோயாகத்தான் குடும்பத்தினர் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் இந்தத் தொடரில் நான் பாலியல் கல்வியை வலியுறுத்தக் காரணமே... செக்ஸ்பற்றிய தவறான புரிதலையும் தகவல் பிழைகளையும் தவிர்க்கலாம் என்பதற்காகத்தான்.

நண்பர்களே, உறவுக்கும் மனிதர்களுக்கும்  இடையில் உணர்வுதான் இருக்க வேண்டுமே தவிர ஒருபோதும் போதைப் பொருள் இருக்கக் கூடாது. போதைக்கு அடிமையானவர்கள் ஒரு நிமிஷம் யோசித்துப் பாருங்கள்... உங்களையே நம்பி ஆசை ஆசையாக அன்பை அள்ளித் தரும் உங்கள் மனைவியின் ஆசை மொழிகளையும் அழகு விழிகளையும் தாண்டி அப்படி என்ன இருக்கிறது போதை வஸ்துவில்?

- இடைவேளை