மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இப்படிக்கு வயிறு! - 22

இப்படிக்கு வயிறு! - 22

இப்படிக்கு வயிறு! - 22
##~##

''நாலு பேருக்கு மத்தியில டமால்னு ஒரு குண்டைப் போட்டுட்டு சைலண்டா நகர்ந்திடுவாங்க. கொலை செஞ்சதைக்கூட ஏத்துக்குவாங்க. ஆனா, 'ஸ்’ போட்டதை ஏத்துக்க மாட்டாங்க...'' - 'பிதாமகன்’ படத்தில் வாயுக் கோளாறு பற்றி சூர்யா இப்படி ஒரு காமெடி வசனம் பேசுவார். வாயுக்கோளாறு இன்றைய காலகட்டத்தில் பலரையும் வருத்தி எடுக்கும் பிரச்னையாக இருக்கிறது. 

'காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த  பையடா’ என்றார் பட்டினத்தார். ஆசை வெறிபிடித்து அலையும் வாழ்க்கை நிலையற்றது என்பதைச் சொல்ல உடலை காற்று அடைக்கப்பட்ட பையுடன் ஒப்பிட்டார் பட்டினத்தார். ஆனால், நம் உடலில் காற்றை யாரும் பிடித்து அடக்கி வைக்கவில்லை. அப்படி அடைக்கவும் முடியாது. 'அப்படி என்றால் உடம்புக்குள் காற்று இல்லவே இல்லையா?’ என்று கேள்வி எழும்?

நமது உடம்பில் சுவாசப்பை, உணவுப்பாதை (தொண்டையில் இருந்து ஆரம்பித்து ஆசனவாய் வரை) என இரண்டு இடங்களில் மட்டும்தான் காற்று இருக்கிறது. இந்த இரு இடங்களையும் தாண்டி காற்று

இப்படிக்கு வயிறு! - 22

உடம்பின் மற்ற பாகங்களுக்குப் போகாது. சுவாசப் பையையோ, உணவுப் பாதையையோ மீறி ஒட்டை போட்டுக்கொண்டு காற்று கசிந்தால், உடம்பை விட்டு வெளியே போக அதற்கு வேறு வழி கிடையாது.

கசிந்து வரும் காற்று இதயம், சுவாசப்பை என்று உள்ளே இருக்கும் உறுப்புகளைத்தான் அழுத்த ஆரம்பிக்கும். இப்படி நடந்தால் இது மரணத்தில் கூட முடிந்துவிடும். ஆனால், பெரும்பாலும் இப்படி நடப்பது கிடையாது. குண்டடிப்படுதல் போன்ற அசாதாரணமான விபத்துகளால் மட்டுமே இதுமாதிரி உண்டாகும். நாம் சுவாசிக்கும் காற்று சுவாசப்பைக்குள் போகிறது. இது தனி வழி. இதற்கும் வயிறாகிய எனக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், உணவுப் பாதைக்குள் காற்று எப்படி வருகிறது என்பதுதான் முக்கியமான கேள்வி. இதற்கு இரண்டு காரணங்கள்... நீங்கள் சாப்பிடும்போது உணவோடு சேர்ந்தே, காற்றும் உணவுப் பாதைக்குள் செல்கிறது. இரண்டாவதாக, நாம் முன்பே பார்த்த மாதிரி இரைப்பைக்குள் போய் விழும் உணவை அமிலங்கள் தாக்கும்போது அங்கே பல ரசாயன மாற்றங்கள் நடந்து ஹைட்ரஜன், சல்பைட், மீத்தேன், கரியமில வாயு என பலதரப்பட்ட வாயுக்கள் உண்டாகின்றன. இவை இரைப்பையைத் தாண்டி சிறுகுடல், பெருங்குடல் பகுதிகளைக் கடந்து ஆசனவாய் வழியே 'வாயு’வாக வெளியேறுகின்றன. வாயுக்கோளாறு ஏற்படுவது இப்படித்தான்!

ஆசனவாய் வழியாக வெளியேறும் வாயுவை நம்மால் தடுக்க முடியாது. அடிக்கடி வாயு வெளியேறுவது தவறே இல்லை. அப்படி வெளியேறுவது உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய நிகழ்வுதான். (யார் உடலுக்கு எனக் கேட்டுச் சிரிக்காதீர்கள்!) வாயு வெளியேறாமல் இருந்தால்தான் உடலுக்குப் பிரச்னை.  

இரைப்பையில் இருந்து 'வாயு’ வெளியேற வேண்டுமானால் ஆசனவாய் வழியாக மட்டுமே அது முடியும். காரணம், இரைப்பையும், உணவுக் குழாயும் தொட்டுக்கொள்ளும் இடத்தில் ஒரு தடுப்புச் சுவர் மாதிரியான உறுப்பு இருக்கிறது. இதை மீறிக்கொண்டு இரைப்பையில் இருந்து 'வாயு’ வாய் வழியாக வெளியே வருவது ரொம்பவே கடினம். 'அப்படி என்றால் ஏப்பம் எப்படி வருகிறது??’ எனக் கேட்கிறீர்களா? ஏப்பம் விடும்போது 'வாயு’ வாய் வழியாக வெளியேறுவதுபோல் தெரிந்தாலும், உண்மையில் அப்போது வாயு உள்ளேதான் போகிறது.

சாதாரணமாக அதிக  உணவு சாப்பிட்ட உடன் ஏப்பம் வருவது இயற்கைதான். ஆனால், அடிக்கடி ஏப்பம் வந்தால் குடல் அடைப்பு, பித்தப்பைக் கற்கள், குடல் புண், கணையக் கோளாறு, இரைப்பை மந்தமாகச் சுருங்கி விரிவதால் ஏற்படும் மாற்றம் ஆகியவை அதற்குக் காரணங்களாக இருக்கக்கூடும். இவைதவிர, ஏப்பம் வருவதற்கு மனமும் ஒரு காரணம். மன உளைச்சலால் அவதிப்படுபவர்கள் தங்களை அறியாமலேயே காற்றை உட்கொண்டு அதை ஏப்பமாகப் பெரிய சத்தத்துடன் வெளியேற்றுவார்கள். இப்படியான ஏப்பம் அடிக்கடி வந்தால் ஸ்கேன், எண்டாஸ்கோப்பி, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் செய்து உரிய சிகிச்சை எடுப்பது நல்லது.

குடற்பகுதி முழுவதும், சாதாரணமாக 100.மி.லி வரைதான் 'வாயு’ இருக்கக்கூடும். இதில் 99 சதவீதம் நைட்ரஜன், ஆக்சிஜன், கரியமில வாயு, ஹைட்ரஜன், மீத்தேன் போன்ற வாயுக்கள் கலந்திருக்கும். உணவில் உள்ள மாவுச் சத்தும், புரதச் சத்தும் நொதிவடையும்போது ஹைட்ரஜன் உருவாகிறது. வயிறாகிய எனக்குள் உள்ள அமிலம் சமப்படும்போதும், பாக்டீரியாக்கள் நொதிவடையும் போதும் கரியமில வாயு... அதாவது கார்பன் டை ஆக்ஸைடு உருவாகிறது. அதுதான் 'பாம்’, 'வெடிகுண்டு’, 'டுமீல்’ என பக்கத்தில் இருப்பவர்களை அலற வைக்கிறது!

- மெல்வேன்... சொல்வேன்...