இப்படிக்கு வயிறு! - 23

##~## |
இந்த இதழிலும் 'ஸ்’ மேட்டரைப் பற்றித்தான் பேசப் போகிறேன். என்ன, சட்டென மூக்கைப் பிடிக்கிறீர்களா? இது மூக்கைப் பிடிக்கிற விஷயம்தான்... ஆனால், நீங்கள் அனைவரும் அறிய வேண்டிய முக்கியமான விஷயமும்கூட! கணவனின் 'டர்’ தொல்லைத் தாங்காமல் மனைவி விவகாரத்துக் கேட்டு கோர்ட்டுக்குப் போன கதைகளை எல்லாம் நீங்கள் படித்திருப்பீர்கள். வாயு வெளியேறுவது உடலுக்கு நன்மை பயக்கிற விஷயம். ஆனால், கெட்ட வாடை கொண்ட வாயு வெளியேறினால், உடலுக்குள் சிக்கல் இருப்பதாகவே அர்த்தம். எதனால் வாயு வெளியேறும்போது கெட்ட வாடை உருவாகிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம்.
சாதாரணமாகவே சிறுகுடலிலும், பெருங்குடலிலும் பாக்டீரியா இருக்கும். இவை உணவு செரிமானம் ஆக உதவி செய்கின்றன. மீத்தேன் என்ற வாயு, பெருங்குடலில் உருவாகிறது. இது சிறுகுடலில் உற்பத்தியாவது இல்லை. மனித வர்க்கத்தில் மூன்றில் இரண்டு பகுதி மக்களுக்கு மீத்தேன் என்ற வாயு உருவாவது கிடையாது. அதே சமயம் சிலருக்குப் பெருங்குடலில் இருக்கும் பாக்டீரியா அளவு அதிகமாகும்போது அடிக்கடி ஆசனவாய் வழியாக 'வாயு’ வெளியேறிக்கொண்டே இருக்கும். இதுதான் பலரையும் படுத்தி எடுக்கிறது.
சாதாரணமாகக் குடலில் காற்று உண்டாகும்போது (வாயு உருவாகும்போது) துர்நாற்றம் இருக்காது. மேலே சொன்ன வாயுக்களான ஹைட்ரஜன், கரியமில வாயு, மீத்தேன், பிராண வாயு போன்ற வாயுக்களைத் தவிர்த்து, அமோனியா, ஹைட்ரஜன் சல்ஃபேட், மெர்கார்ப்டேன் போன்ற வாயுக்கள் குறைந்த அளவில் உற்பத்தியாகி ஆசனவாய் வழியாக வெளியேறும்போதுதான் அக்கம் பக்கம் இருப்பவர்கள் மூக்கைப் பிடிக்கிற நிலை உருவாகிவிடுகிறது.

கரியமில வாயு என்ற 'வாயு’ குடலின் மேற்பகுதியில்தான் அதிகம் உருவாகிறது. இது அப்படியே அங்கேயே நின்றுவிட்டால் வயிறாகிய என் நிலை அம்போதான். அத்தகைய நிலையில் வயிறாகிய நான் வெடித்தாலும் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. அப்படி அபாயமாக ஏதும் நடந்துவிடாமல் இருக்கத்தான் இந்த 'வாயு’ ரத்தக்குழாய் வழியாக வேகமாக உள்ளே உறிஞ்சப்பட்டு வருகிறது. என் மீதான ஆபத்து இப்படித்தான் தடுக்கப்படுகிறது.
'வாயு’ மூலமாகச் சில பிரச்னைகள் வருவது உண்டு. முன்பு குறிப்பிட்டதுபோல சிறுகுடலும், பெருங்குடலும் பல பகுதிகளைக் கொண்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். உணவு இருக்கும் முதல் பகுதி சுருங்கி, உணவை அடுத்தடுத்துத் தள்ளும்போது, அடுத்த பகுதி ஏதாவது சிக்கல் காரணமாக அந்த உணவை உள்வாங்கிக்கொள்ள விரியாவிட்டால், இரண்டு பகுதிகளுக்கும் இடையே ஒரு வீக்கம் ஏற்படும். வீக்கம் ஏற்பட்ட இந்தக் குடலுக்குள் 'வாயு’ போய் மாட்டிக்கொண்டால் குடல் இயக்க மாறுதல்கள் (Motility Disturbance) என்ற பிரச்னை ஏற்படும். இந்தச் சிக்கல் வந்தால், உணவுப்பாதை தடைபட்டு மலச்சிக்கலும் ஏற்படும்.
காசநோய் போன்ற வியாதிகள் குடலைத் தாக்கினால், அங்கே உணவுப் பாதையில் அடைப்பு ஏற்படும். இதுமாதிரி நடந்தால் 'வாயு’ வெளியே வராத நிலை உருவாகும். சிலர், 'வாயுப் பிடிப்பு’ எனப் புலம்பி அழுவதைப் பார்த்திருப்பீர்கள். உண்மையில் 'வாயுப் பிடிப்பு’ என்று சொல்வதெல்லாம் பொய். அது தசைப் பிடிப்புகளின் காரணமாக உண்டாகும் வலி தான்!
சிலர் ஆசனவாய் வழியாக வாயு வெளியேறாமல் இருப்பதைத் தங்களின் ஆரோக்கியத்தின் அடையாளமாகத் தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். தற்போது வெளிவரும் பல திரைப்படங்களில் வாயு வெளியேறுவதைக் காமெடிக் காட்சிகளாகச் சித்தரித்துச் சிரிக்க வைக்கிறார்கள். உண்மையில் வாயு வெளியேறாமல் இருப்பதுதான் ஆபத்தானது. சிலருக்கு அறுவை சிகிச்சை செய்து வாயுவை வெளியேற்ற வேண்டிய அளவுக்கு இந்தப் பிரச்னை பெரிதாகிவிடும். வாயு வெளியேறாமல் இருக்கும் பிரச்னைகளுக்கு இப்போது மருந்து மாத்திரைகளே வந்துவிட்டன. உடம்பில் சர்க்கரை, உப்பு, ரத்த அழுத்தம் போன்றவை எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதை அறியப் பல பரிசோதனைகளை மருத்துவ உலகம் நிர்ணயம் செய்து வைத்திருக்கிறது. ஆனால், உணவுப் பாதையில் 'வாயு’ எந்த அளவு இருக்கலாம் என்பதை இன்று வரை மருத்துவ நிபுணர்களால் வரையறை செய்ய முடியவில்லை.
இந்த வாயுத் தொந்தரவு வயதானவர்களுக்குத்தான் அடிக்கடி சங்கடத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். உடற்பயிற்சி இன்மை, அன்றாட வேலைகளில் சரிவர இயங்காமல் முடங்கிக் கிடப்பது போன்ற காரணங்களால்தான் வாயுத் தொந்தரவு அதிகரிக்கிறது. 'வாயு’ அதுவாக வெளியேறினால்தான் உண்டு. நாமாக எவ்வளவு மெனக்கெட்டாலும் 'வாயு’வை வெளியேற்ற முடியாது.
'வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்’ எனச் சொல்வார்களே... அது எந்தளவுக்கு உண்மையோ... அதுபோல், 'வாயு விட்டுச் சிரித்தாலும் நோய் விட்டுப் போவது’ நிச்சயம்!
- மெல்வேன்... சொல்வேன்...