குட் நைட்!

என்னைத் தேடி வந்த அந்த வாலிபனுக்கு 25 வயது இருக்கலாம். ஓர் அழகான பெண்ணைத் திருமணம் செய்து வைத்திருந்தார்கள். அந்தப் பெண்ணின் மீது அவன் சொன்ன புகார் விசித்திரமாக இருந்தது. ''உணர்ச்சி நிலை, நடை, உடை, பாவனைகள், வெளிப்புறத் தோற்றம் எல்லாமே பெண்மையின் லட்சணங்களுடன்தான் இருக்கின்றன. ஆனால், பல சமயங்கள் அவளுடைய செயல்பாடுகளில் ஆண் தன்மை இருக்கிறது. இதனால் 'அந்த’ நேரங்களில் நான் அப்செட் ஆகிவிடுகிறேன்'' என்கிற புகார்தான் அது.
அண்மையில் - பிரபல தடகள வீராங்கனை பிங்கி பிராம்னிக் மீது ஒரு சர்ச்சை உருவானது. அவருக்கு ஆண்களுக்கு உரிய குரோமோசோம்கள் அதிகம் இருக்கின்றன என்கிற சர்ச்சைதான் அது.
பொது அடையாளம் என்பது ஒரு மனிதன் பிறந்து, வளரும் மூன்றாவது வயதில் நிலைபெற்று விடும். அதன் பிறகு அந்த அடையாளம் மாறாது. முதன்முதலில் ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்தப் பிரசவ அறையில் இருப்பவர் சொல்வதுதான் அடையாளம். அடுத்து, பெற்றோரும் உறவினர்களும் குழந்தையின் ஜனன உறுப்பை வைத்துப் பொது அடையாளத்தை நிர்ணயிப்பார்கள். மூன்றாவது - வளர்கிற நிலையில் அந்தக் குழந்தையை அடையாளப்படுத்துவது. ஆண் குழந்தைக்கு பேன்ட், சட்டை, குளிர் கண்ணாடி, தொப்பி போன்றவற்றை வாங்கித் தருவதில் இருந்தும், பெண் குழந்தைக்கு வளையல், ரிப்பன், ஜிமிக்கி, ஃப்ராக் வாங்கித் தருவதில் இருந்தும் உறுதி செய்யலாம். இவை எல்லாவற்றையும் மீறி ஒரு குழந்தை தன்னை எப்படி உணர்கிறது என்பது மிக மிக முக்கியம்.

உடல்ரீதியாக ஒரு மனிதனை ஆண் என்றும் பெண் என்றும் மருத்துவ விஞ்ஞானத்தின் அடிப்படையில் எப்படி உறுதி செய்யலாம்?

ஒரு மனிதனின் உடம்பில் எக்ஸ் எக்ஸ் (XX)குரோமோசோம்கள் இருந்தால் அவரை பெண் என்றும், எக்ஸ் ஒய் (XY) குரோமோசோம்கள் இருந்தால் அவரை ஆண் என்றும் உறுதி செய்யலாம்.

பாலினம் சார்ந்த செக்ஸ் ஹார்மோன்கள் அடிப்படையில்... ஒரு மனிதனுக்கு அவருடைய உடம்பில் டெஸ்டோஸ்டீரோன் அதிகம் சுரந்தால் அவரை ஆண் என்றும், ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரந்தால் அவர் பெண் என்றும் அடையாளப்படுத்தலாம்.

செகண்ட்ரி செக்ஸுவல் கேரக்டர்ஸ்டிக்ஸ் என்கிற அடிப்படையில்... ஆணுக்கு முகத்தில் மீசை, தாடி வளர்வதையும், பெண்ணுக்கு மார்பக வளர்ச்சி இருப்பதில் இருந்தும் ஆண், பெண் அடையாளம் காணலாம்.

கண்ணுக்குத் தெரிகிற வெளிப்படையான ஜனன உறுப்புகளை வைத்தும் பாலின அடையாளம் காணலாம்.

உடலுக்கு உள்ளே இருக்கும் பாலினம் தொடர்பான பகுதிகளை 'இனடர்னல் செக்ஸுவல் ஸ்ட்ரக்சர்ஸ்’ என்போம். உடலுக்குள் உள்ளே இருப்பதை வைத்துப் பாலின அடையாளம் காண்பதும் ஆண், பெண் வேறுபாட்டை அறிய உதவும். அதாவது, ஆணுக்கு உடம்பின் உள்ளே புராஸ்டேட் சுரப்பி, விந்துச் சுரப்பி, விந்து நாளம் போன்ற உடம்புக்கு உள்ளிருக்கும் அமைப்புகளை எல்லாம் வைத்து அந்த மனிதனை ஆண் என்று பாலின அடையாளம் காணலாம்.

ஓவரீஸ் எனப்படுகிற கருமுட்டைப் பைகள், கருக் குழாய், கர்ப்பப்பை, கர்ப்பப் பையின் நுழைவாயில், பெண்ணின் பிறப்புறுப்பின் உட்பகுதிகள் போன்ற வெளிப்படையாகக் கண்ணுக்குத் தெரியாத அமைப்புகளை எல்லாம் வைத்து பெண் என்று பாலின அடையாளம் காணலாம்.

மஸ்குலேச்சர்(Musculature) எனப்படுகிற உடம்பில் இருக்கும் தசைகளின் வடிவமைப்பை வைத்தும் ஒரு மனிதனின் பாலின அடையாளத்தை உறுதி செய்யலாம்.

ஒருவருடைய மூளையின் அமைப்பையும், அதன் வடிவத்தையும், அளவையும் வைத்துக்கொண்டு ஆண், பெண் என்று பாலின அடையாளம் காண முடியாது. ஆனால், அந்த மூளையின் செயல்பாட்டை வைத்து அவர் ஆணா, பெண்ணா என்று அடையாளப்படுத்தலாம்.
இவற்றை எல்லாம் விஞ்ஞானரீதியாக விளக்கமாகக் குறிப்பிடக் காரணம் - ஒரே ஓர் அமைப்பை மட்டும் வைத்து ஒருவரை ஆண் என்றும் பெண் என்றும் பாலின அடையாளப்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான்.
இதை எல்லாம் அறியாமல், மேலோட்டமாக ஒரு பெண்ணை - ஆண் மாதிரி இருக்கிறார் என்றும், ஓர் ஆணைப் பெண் மாதிரி இருக்கிறார் என்றும் சொல்வது தவறாகும்.
- இடைவேளை