இப்படிக்கு வயிறு! - 24

##~## |
காலையில் நல்ல சாப்பாடு, அலுவலகப் பணி, நண்பர்களோடு அரட்டை... என மிக இனிதாக உங்களின் நிமிடங்கள் நகரும். ஆனால், எவ்வித அறிகுறியும் இல்லாமல் திடீரென வயிற்று வலி ஏற்படும். ''அய்யோ... திடீர்னு வயிறு வலிக்குதே...!'' என அலறுவீர்கள். ''காலையிலக்கூட நல்லாப் பேசிட்டு இருந்தாரே... திடீர்னு எப்படி வலி வந்துச்சு?'' என உங்களைச் சுற்றி இருப்பவர்கள் 'உச்’ கொட்டுவார்கள்.
எப்போதாவது சிறுகுடலில் உணவு செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டால் தாங்கமுடியாத வலி ஏற்படும். கூடவே வாந்தியும்! திடீர் வயிற்று வலி என்பது சிறுகுடலில் அடைப்பு மட்டும் அல்லாது வேறு காரணங்களாலும் ஏற்படலாம். திடீர் வயிற்றுவலியை 'தீவிர வயிற்றுவலி’ என்றும் ((Acute Abdomen) என்றும் சொல்வார்கள்.

திடீர் வயிற்று வலி வரும்போது பலவிதமான குழப்பங்களும் கும்மியடிக்கும். 'சாப்பாடு சரியில்லையோ?, 'வயிற்றில் அடிப்பட்டிருக்குமோ?’, 'உடம்பு சூடோ?’ எனப் பலவிதமான அனுமானங்களும் மனதுக்குள் படை எடுக்கும். வயிற்று வலிக்கும் திடீர் வயிற்று வலிக்கும் வித்தியாசம் இருக்கிறது. வயிற்று வலி என்பது பக்கத்து வீட்டில் தீப்பிடித்த மாதிரி.
திடீர் வயிற்று வலி நம் வீட்டில் தீப்பிடித்த மாதிரி. திடீர் வயிற்று வலியின் அபாயம் புரியாமல் சிலர் கஷாயம் வைத்துக் குடிப்பார்கள். சிலர் அவர்களே மருத்துவர்களாக மாறி இஷ்டத்துக்கு ஏதாவது ஒரு மாத்திரையின் பெயரைச் சொல்லி வாங்கிச் சாப்பிடுவார்கள். என்ன செய்தும் குணமாகவில்லை என்கிறபோதுதான் மருத்துவரிடம் ஓடுவார்கள். 'வயிற்று வலிக்கு முன் சிறுகுடலில் புண் ஏற்பட்டு ஓட்டை விழுந்திருப்பதுதான் காரணம்’ என மருத்துவர் சொல்லும்போதுதான் வலியின் உண்மை புரியும்.
இன்னும் சிலருக்கு திடீர் வயிற்று வலியோடு வாந்தியும் பாடாய்ப்படுத்தும். வாந்தியில் பித்த நீர் கலந்து மஞ்சள் நிறத்தில் தெரிந்தால், 'பித்தம் தலைக்கேறிப் போச்சு’ என்று கண்டுபிடிப்பார்கள் சில அறிவுஜீவிகள். 'எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ எனத் தேடித் தேடி எதையாவது தின்று தீர்ப்பார்கள். ஒருகட்டத்தில் வாந்தி, ரத்த வாந்தியாக மாறும். வாந்தியில் ரத்தத்தைப் பார்த்ததும்தான் அலறி அடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்து நிற்பார்கள். பரிசோதனைக்குப் பிறகு, சம்பந்தப்பட்டவருக்கு வயிற்றில் புண் (இரைப்பைப் புண்) இருப்பது தெரியவரும். (இந்த மாதிரியான வயிற்றுப் புண்கள் திடீரென்றுகூட ஏற்படக்கூடும்), சுய மருத்துவம் மற்றும் வலி நீக்கி மாத்திரைகளால் இரைப்பை முழுவதும் இந்தப் புண்கள் பரவி, ரத்தக் குழாயில் வெடிப்பு உண்டாகி இருப்பதும் தெரியவரும். இழந்த ரத்தத்தை ஈடுசெய்ய புது ரத்தம் ஏற்றப்பட்டு மறு பிறவி எடுத்ததுபோல சம்பந்தப்பட்டவர் வீடு திரும்புவார்.
அறைகுறையாய் - செவி வழி மருத்துவமாய் - அடுத்தவர்களுக்கு ஏற்பட்ட நோய்க் காரணங்களைக் காட்டி அறியாமையில் இருப்பவர்களிடம் கொஞ்சமும் பொறுப்பு இல்லாமல் மருத்துவச் செய்திகளை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் இலவச வியாபாரம் செய்வதால்தான் இத்தனை சிக்கலும். உடல் கோளாறின் ஆபத்தைத் தெரிவிக்கும் ஒரு முக்கியக் கருவிதான் வலி. அதற்கானத் தீர்வை வலி நிவாரணிகளைப் பயன்படுத்துவதாலும், விளம்பரங்களை நம்பி சுய சிகிச்சையில் ஈடுபடுவதாலும் கொடுக்க முடியாது என்பதை உணர்வது அவசியம்.
ஒரே மருந்து பல வியாதிகளுக்குப் பயன்படலாம். ஆனால், முதலில் நமக்கு உள்ள வியாதிக்கு அது பயன்படுமா என்று தெரிந்துகொள்ள வேண்டும். இந்த மாதிரியான மருந்துகள், குணமாக்குவதைவிடத் தொல்லைகளையும், பக்க விளைவுகளையும் உண்டாக்கிவிடும் என்பதுதான் உண்மை. எல்லோரும் கையில் கடிகாரம் கட்டி இருந்தாலும், ஒவ்வொரு கடிகாரமும் ஒவ்வொரு நேரத்தைக் காட்டுவதைப்போல் ஒரே நோய், பல அறிகுறிகளைக் காட்டும் வாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட அறிகுறியை வைத்துக்கொண்டு இந்த நோய்தான் என்று முடிவு கட்டி, சிகிச்சை செய்வது தவறு.
தீவிர வயிற்று வலி வந்தால் சில நேரங்களில் அறுவைசிகிச்சை செய்கிற அளவுக்குக்கூடப் போய்விடும். பொதுவாக, இந்தத் தீவிர வயிற்றுவலி பகல் நேரத்திலேயே வந்தாலும், யாரும் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து விடுவதில்லை. காரணம், 'வயிற்றுவலிதானே!’ என்கிற அலட்சியம்.
ஒரு நாள் ஒருவர் வயிற்றின் வலது பக்கம் மேற்புறமாக வலி என்று சொல்லிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றிருந்தார். பரிசோதனை செய்ததில் பித்தப் பையில் கற்கள் இருப்பதும், பித்தப்பை வீங்கியிருப்பதும், மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பதும் தெரிந்தது. அவரிடம் உடனடியாக அறுவைசிகிச்சை செய்து கொள்ள வேண்டிய அவசியத்தை மருத்துவர் சொல்லி இருக்கிறார். ஆனால், அந்த நபரோ, 'ஒரு வாரம் கழித்து வந்து அறுவை சிகிச்சை செய்து கொள்கிறேன்’ எனச் சொல்லிக் கிளம்பிவிட்டார். காரணம், 'சாதாரண வயிற்றுவலிதானே... இதற்கு டாக்டர் ஏதேதோ காரணம் சொல்கிறாரே... ஒரு வாரம் வலியைப் பொறுத்துக்கொண்டால் எல்லாம் சரியாகிவிடும்’ என்கிற எண்ணம்தான்.
சொன்னது போலவே ஒரு வாரம் கழித்து அவர் மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார். ஒரு சின்ன வித்தியாசம்... சென்ற வாரம் தானாக வந்தவர், இந்த வாரம நான்கு பேர் துணையோடு அழைத்து வரப்பட்டிருந்தார். அதிகமான வயிற்று வலி, கடுமையான காய்ச்சல், வயிறு வீக்கம் எனப் பல பிரச்னைகள். பித்தப்பை வீங்கி ஒரு கட்டி மாதிரி இருந்தது. கூடவே, அது சீழ்பிடித்து, அழுகிப்போயும் இருந்தது. சீழை அகற்றிய பிறகு 'வடிகுழாய்’ வைக்கப்பட வேண்டிய நிலையானது. மூன்று நாட்களில் குணமாகி வீட்டுக்குச் சென்றிருக்க வேண்டியவர், இரு வாரங்களுக்கும் மேலாக சிகிச்சையில் அல்லாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
வயிற்று வலிக்கான காரணங்களையும், நாம் பின்பற்ற வேண்டிய எச்சரிக்கைகளையும் பற்றி அடுத்த இதழில்...
- மெல்வேன்... சொல்வேன்...