Published:Updated:

குட் நைட்

குட் நைட்

குட் நைட்
##~##

னதளவில் அமைதியாக இருக்க முதலில் பழக வேண்டும். பரபரப்பான வாழ்க்கை முறையால் உந்தப்பட்ட மனம், அமைதி இழந்து தவிக்கலாம். இதனால்கூட விறைப்புத் தன்மை பாதிக்கப்படலாம். குடிப்பழக்கம், மஞ்சள் காமாலை, இளம் வயதில் ஏற்பட்ட ஈரல் பாதிப்பு போன்றவையும் விறைப்புத்தன்மைக் குறைபாட்டை ஏற்படுத்தலாம். இதுபோன்ற பாதிப்புகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெறுவது அவசியம். 

சிலருக்குப் பிறப்பிலேயே விதைப் பையில் விதை வளராமல் இருக்கலாம். பருவ வயதில் 'புட்டாலம்மை’(Mumps)  ஏற்பட்டு இருப்பது, விதைப்பையில் அடிப்பட்டுவிடுவது, பால்வினை நோய் ஏற்பட்டு அதற்குச் சரியான சிகிச்சை பெறாதது போன்றவற்றாலும் ஆணுறுப்பு விறைப்பு அடைவதில் பாதிப்பு ஏற்படலாம்.

என்ன காரணம் என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்தால்தான் முறையான சிகிச்சை அளிக்க முடியும். இது மாதிரியான பிரச்னைகள் ஏதாவது இருந்தால் டாக்டரிடம், கணவன்-மனைவி இருவரும் சேர்ந்துதான் போக வேண்டும். நவீன செக்ஸாலஜி மருத்துவம் ஒரு தம்பதியை ஒரு யூனிட் ஆகத்தான் பார்க்கும். என்ன காரணத்தால் இந்தப் பிரச்னை ஏற்பட்டது என்பதைக் கண்டறிய நான்கு நிலைகள் உள்ளன.

கணவன் - மனைவி இருவரிடமும் செக்ஸுவல் ஹிஸ்டரிபற்றி அறிந்துகொள்வதுதான் முதல் நிலை. அது தெரிந்தால்தான் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு என்னவெல்லாம் கிடைக்கவில்லை

குட் நைட்

என்பது தெரியும். இந்த செக்ஸுவல் ஹிஸ்டரியில் குடும்பத்தைப் பற்றிய உண்மைகளும் தனி மனித குண நலன்களும் வெளிவரும். உதாரணமாக, பிரச்னை என்று வருகிற அந்த மனிதனுக்குப் புகைக்கும் பழக்கம் உண்டா மதுப் பழக்கம் உள்ளதா, கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவரா அல்லது தனிக்குடித்தனமா, ஒருவேளை கூட்டுக் குடும்பஸ்தராக இருந்தால், கணவனும் மனைவியும் மனம்விட்டுப் பேசிக்கொள்ளத் தனிமைக் கிடைக்குமா குடும்பத்துக்குள் தம்பதிக்கு இடையே சண்டைச் சச்சரவு உண்டா என்பன போன்ற கேள்விகளுக்கு அவர்களிடம் இருந்து என்ன பதில் வருகிறது என்று பார்க்கப்படும். கணவனிடம் மனைவிக்கு எந்த குணம் பிடிக்கும், மனைவியிடம் கணவனுக்கு எந்த குணம் பிடிக்கும் என்பனவும் தெரிந்துகொள்ளப்படும்.

சார்... விறைப்புக் குறைபாடு உள்ள ஒரு மனிதனிடம் ஏன் இவ்வளவு  கேள்விகளைக் கேட்டுத் தோண்டி துருவுகிறீர்கள் என்று கேட்கலாம்.

உண்மையில் செக்ஸ் என்பது இரண்டு சதைகளின் உரசல் கிடையாது. இரண்டு மனசுகளின் இன்ப இணக்கம். எனவே, செக்ஸில் மனம் முக்கிய பங்கு வகிப்பதால், உண்மையாகவே விறைப்புக் குறைபாட்டுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய வேண்டியது அவசியம் ஆகிறது.

அடுத்தது உடல் பரிசோதனை. உடல்ரீதியில், பிறவிக் குறைபாடு ஏதேனும் உண்டா ஆணுறுப்பின் முன் தோல் பின்னால் தள்ள முடியாத 'ஃபைமோசிஸ்’(Phimosis) எனப்படுகிற  பிரச்னை உள்ளதா என்றும் பரிசோதிக்க வேண்டும். சிலருக்கு இரண்டு விதைகளில் ஒரு விதை மட்டும் வளர்ச்சி அடையாமல் இருக்கலாம். அல்லது இரண்டு விதைகளில் ஒரு விதை மட்டும் கீழிறங்காமல், அடிவயிற்றுப் பகுதியிலேயே தங்கிவிடலாம். இது போன்ற காரணங்களால் விறைப்புக் குறைபாடு உள்ளதா என்று தெரிந்துகொள்ள உடல் பரிசோதனை அவசியமாகிறது.

கணவனின் விறைப்புக் குறைபாட்டுக்காக டாக்டரிடம் போகும்போது கணவன் மனைவி இருவரும் போக வேண்டும் என்பதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. அதாவது, மனைவியின் பெண் உறுப்பு வளர்ச்சி அடையாமல் இருக்கலாம். அல்லது பய உணர்ச்சியில் மனைவியின் பிறப்புறுப்பு, உடல்உறவு சமயத்தில் இறுக்கமாகிவிடலாம். இத்தகைய பிரச்னைக்கு 'வெஜினிஸ்மஸ்’ (Vaginismus) என்று பெயர். இதன் காரணமாக ஆணின் உறுப்பு பெண்ணின் உறுப்புக்குள் நுழைவதில் சிக்கல் ஏற்படலாம். தவறுதலாக இதனை விறைப்புத் தன்மைக் குறைபாடு என்று நினைத்துக்கொண்டும் இருக்கலாம்.

இவற்றின் மூலம் எல்லாம் விறைப்பு கோளாறுக்குக் காரணத்தைக் கண்டறிய முடியாத நிலையில் சோதனைச்சாலைப் பரிசோதனைகள் தேவைப்படும். ரத்தத்தில் சர்க்கரை அதிகமாக உள்ளதா, ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக உள்ளதா, ஆண் ஹார்மோன் ஆன 'டெஸ்டெஸ்டிரோன்’ தேவையான அளவில் உள்ளதா என்பன போன்றவற்றிற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்தக் குறைபாடுகளாலும் விறைப்புக் குறைபாடு வரலாம்.

பரிசோதனைகள் மூலமும் விறைப்புத் தன்மைக் குறைபாட்டுக்கான காரணத்தைக் கண்டறிய முடியாவிட்டால், மேலும் சில பரிசோதனைகள் தேவைப்படும். 'பினைல் ஹிமோடைனமிக்’(Penile Hemodynamic)  என்னும் சோதனையின் மூலம், ஆண் உறுப்பில் ரத்த ஓட்டம் சரியாக உள்ளதா, அடைப்பு ஏதேனும் இருக்கிறதா, செக்ஸ் உணர்ச்சிக்கு ஆட்படுகிறபோது ஆணுறுப்புக்குள் விரைந்து செல்கிற ரத்தம் அங்கேயே தங்கியிருக்காமல் பின்பக்கமாக வெளியேறிக்கொண்டு இருக்கிறதா என்று சோதிப்பார்கள்.

இவை மட்டும் அல்லாமல் வேறு பல சோதனைகளும் உள்ளன. அவை அடுத்த இதழில்...

- இடைவேளை...