Published:Updated:

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 01

கருவாய்... உருவாய்... அருள்வாய்...
News
கருவாய்... உருவாய்... அருள்வாய்... ( கருவாய்... உருவாய்... அருள்வாய்... )

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 01

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 01

தாய்மை என்பது தவம். ஒரு பெண்ணுக்குத் திருமணமான மறு மாதம் முதல், உற்றார் உறவுகளின் எதிர்பார்ப்பும் அண்டை வீட்டாரின் விசாரணையுமே... பெண்ணின் மனதில் ஏக்கத்தைத் தோற்றுவிக்கும். ஆறு மாதங்கள் ஓடினால், அவ்வளவுதான். 'என்ன... வயித்துல ஒரு புழு பூச்சியக் காணோம்?’ என்பன போன்ற வார்த்தைகள் மனதை நோகடிக்கத் தொடங்கிவிடும். இதெல்லாம் அந்தக் காலம். இன்றோ, எல்லாமே தலைகீழ். நல்ல வேலையில் சேர்ந்து கை நிறையச் சம்பாதித்த பிறகே, திருமணம் செய்துகொள்வது, குழந்தைக்கான எதிர்காலத் தேவைகளுக்காகத் தயார்படுத்திக்கொண்ட பிறகே, குழந்தை பெற்றுக்கொள்வது என முடிவெடுப்பதுதான் இன்றைய இளைய தலைமுறையின் பாணி.      

எதுவானாலும், உரிய நேரத்தில், உரிய வயதில் நடந்தால்தான்... அது ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும் என்கிறது மருத்துவ உலகம்.

இன்றைய உணவுப்பழக்கத்தால் உடல் பருமன், சுற்றுச் சூழல் சீர்கேடு,  அதிகப்படியான வேலையால் மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் பிள்ளைபேறு தள்ளிப்போகிறது.  

தவமாய்த் தவமிருந்து பெறும் தன்னிகரில்லாத் தாய்மையின் பத்து மாத பந்தத்தைப் பற்றிய இந்த வழிகாட்டித் தொடர், பிள்ளைப் பேற்றை அடைய விரும்பும் தம்பதிகளின் வயிற்றில் நிச்சயம் 'வாரிசு’ வார்க்கும்.    

திட்டமிடுதலே... தெவிட்டாத இன்பம்!

''திருமணமான உடன் குழந்தை பெற முடிவெடுக்கும் தம்பதிகள், உடல் மற்றும் மனரீதியான பரிசோதனைகளுக்கு உட்பட வேண்டியது அவசியம். ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஒழுங்காக வருகிறதா என்பது மிகவும் முக்கியம். மாதவிடாய்ச் சுழற்சி சரியாக இருந்தாலே கர்ப்பம் தரிப்பதில் பிரச்னைகள் மிக மிகக் குறைவாக இருக்கும். கருத்தரிப்பதற்கு முன்பாக இருந்த எடை, அதாவது உயரத்திற்கு ஏற்ப எடை சரியாக இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். அதிக எடை இருந்தால், உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் எடையைக் குறைக்க வேண்டும்.

சிலருக்கு உடல்ரீதியான பிரச்னைகளால் தொடர்ந்து பாதிப்புகள் இருக்கும். இதய நோய், மன அழுத்தம், வலிப்பு நோய், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்னை, தைராய்டு, மற்ற ஹார்மோன் பிரச்னைகள் போன்ற பாதிப்புகள் ஏதேனும் இருந்திருக்கலாம். அதற்கான சிகிச்சைகளை எடுத்திருக்கலாம். குடல்வால் அறுவைச் சிகிச்சை, சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளில் அறுவைச் சிகிச்சை செய்திருக்கலாம். இது போன்ற ஏதேனும் பாதிப்புகள், நோய்கள் இருந்து அதற்கான மருந்துகளைச் சாப்பிடுபவராக இருந்தால் உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். கருதரிப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லாதவாறு, மருத்துவர்கள் மாத்திரைகளை மாற்றித் தருவார்கள்.  

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 01

தம்பதிகளுக்குள் மரபணு தொடர்பான நோய்கள் ஏதேனும் இருந்தால், நெருங்கிய உறவினர்கள் யாருக்கேனும் உடல்ரீதியான பிரச்னை உள்ள குழந்தைகள் பிறந்திருந்தால், மருத்துவரிடம் தெரிவித்து, மரபணு ஆலோசனை (Genetic Counciling) பெற வேண்டும்.

உடலைப் பராமரித்தால் கருவைச் சுமக்கலாம்

குழந்தைப்பேறுக்குத் தயாராவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே டாக்டரின் ஆலோசனைப் பெற்று ஃபோலிக் அமிலம் சத்து மாத்திரை சாப்பிட ஆரம்பிக்கலாம். கரு நல்லபடியாக வளருவதற்கும், கருச்சிதைவை தடுப்பதற்கும், பிறக்கப்போகும் குழந்தை எந்தக் குறையும் இல்லாமல் இருக்கவும் ஃபோலிக் அமிலம் மிகவும் அவசியம்.

தந்தையாகப் போகும் ஆணும் ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.  உடல்ரீதியான பிரச்னைகள், நோய்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதைப் பரிசோதித்துக்கொண்டு, மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடக்க வேண்டும். புகைப்பிடித்தல், மதுப்

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 01

பழக்கம் போன்றவற்றைக் கைவிட்டு, நல்ல ஆரோக்கியமான மனநிலைக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உணவும் மருந்தாகலாம்

கருவுற்றப் பெண் சாப்பிடும்  உணவைப் பொருத்துத்தான் தாய், சேய் இருவரின் நலமும் இருக்கிறது. சமச்சீரான உணவு மிகவும் அவசியம்.  

அதிக அளவு புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள்,  தாது உப்புக்கள், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், பருப்புவகைகள், தானியங்கள், இரும்புச்சத்து நிறைந்த  கீரை வகைகள், பேரீச்சை என உணவுகளில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம், உடலை ஊட்டமாக வைத்திருக்கலாம்.  

கொழுப்பு நிறைந்த உணவு, எண்ணெய் உணவுகள், உலர்ந்த பழங்கள், நொறுக்குத்தீனி மற்றும் துரித உணவுகளைத் தவிர்க்கலாம்.

மாத விலக்கிற்குப் பிறகு விலக வேண்டாம்

28 முதல் 30 நாட்கள்தான் என்பது வழக்கமான சுழற்சி. மாத விலக்கு ஆன நாளில் இருந்து சுமார் 14 அல்லது 15-வது நாள்தான் மிக முக்கியமான கட்டம். இந்த நாட்களில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் கருத்தரிக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம். மாதத்துக்கு ஒரு முறை வெளிவரும் ஒரு சினை முட்டைக்குக் குறுகிய ஆயுட்காலம்தான். அது வெடித்து வெளிவந்த பிறகு 24 மணி நேரம் வரைதான் உயிரோடு இருக்கும். அதற்குள் தாம்பத்திய உறவு நடந்தால்தான் பெண் கருத்தரிக்க அதிக வாய்ப்பு உண்டு.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு

இன்றைய சூழலில் கணவன் - மனைவி இருவருக்குமே மன அழுத்தம் அதிகம். கோபம், சின்னச்சின்ன நெருடல்கள், சிக்கலான வாக்குவாதங்கள் போன்ற காரணங்களால், மனதுடன் உடலும் ஒன்றாக இணையத் தயங்கி விலகி நிற்கின்றன. இந்த மன அழுத்தம் இல்லாத நிலைதான் தாய்மைக்கான முதல் படி.

கணவன் - மனைவி இருவரும் அன்பு, பாசம், காதல் போன்ற மெல்லிய உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதை அனுபவபூர்வமாக வெளிப்படுத்த வேண்டும். திருமணமான ஒரிரு வருடத்திற்குள் கருத்தரிக்கும் பெண்கள் நல்ல உற்சாக மனநிலையுடன் இருப்பார்கள். ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் வாய்ப்பும் அதிகம். 25 வயதுக்குள் திருமணம், 30 வயதுக்குள் பிள்ளைப்பேறு என இருந்தால் குடும்ப வாழ்வு குதூகலமாக இருக்கும்.  

கரு வளரும்...