மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இப்படிக்கு வயிறு! - 25

இப்படிக்கு வயிறு! - 25

இப்படிக்கு வயிறு! - 25

யிறாகிய நான் எப்போதாவதுதான் வலி மூலமாக என் சிரமத்தை வெளிப்படுத்துகிறேன். ஆனால், அப்போதும்கூட, 'இது அதுவாக இருக்குமோ... இதுவாக இருக்குமோ?’ எனத் தாங்களே கற்பனை செய்துகொண்டு சுய மருத்துவம் செய்கிறவர்கள்தான் அதிகம். இத்தகைய சிகிச்சைகள் அப்போதைக்கு என் வலியைச் சரியாக்கினாலும், அதன் பின்னால் எனக்கு ஏற்படுத்தும் விளைவுகள் எக்கச்சக்கம். என்னுடைய உள் உறுப்புகளான மண்ணீரல், கல்லீரல் போன்றவற்றில் உண்டாகும் பிரச்னைகளைக் கண்டறிய ஸ்கேன் செய்வது நல்லது. கர்ப்பப்பைக் கோளாறுகளுக்கும் ஸ்கேன் செய்து பார்ப்பதுதான் சிறந்தது.

ஒரு பெண்ணுக்குக் கடுமையான வயிற்று வலி. ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோதுதான் கருக்குழாயில்  கரு கலைந்திருந்திருக்கும் அபாயம் தெரிந்தது. உடனடியாக அந்தப் பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை. ஆனால், கடுமையான வயிற்று வலியையும் பொறுத்துக்கொண்டு அந்தப் பெண் சொன்னார்: 'இரண்டு நாட்கள் கழித்து நான் அறுவைச் சிகிச்சை செய்துகொள்கிறேன்’ என்று. என்ன காரணம் எனக் கேட்டால், 'எனக்கு இரண்டு நாட்கள் சந்திராஷ்டமம். அது முடிந்த பிறகு எதையும் செய்தால்த£ன் சரிப்படும்!’ என்றார் வலியோடு. இந்த மாதிரியான அரைவேக்காட்டுத்தனத்தால் வயிறாகிய நான் காட்டும் வலியை நீங்கள் அலட்சியப்படுத்தும்போது பாதிப்புகள் பன்மடங்காகப் பெருகிவிடுகின்றன.

இப்படிக்கு வயிறு! - 25

அறுவைச் சிகிச்சையைத் தாமதப்படுத்திய அந்தப் பெண்ணுக்குப் பிறகு நேர்ந்தது என்ன தெரியுமா? தாமதமான அறுவைச் சிகிச்சையின்போது கருக்குழாய் வெடித்து, ஒரு லிட்டர் அளவுக்கு ரத்தம் பரவி இருந்தது தெரிந்தது. வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் சிகிச்சை செய்யப்பட்டு, பெரும் போராட்டத்துக்குப் பிறகுதான் அந்தப் பெண் காப்பாற்றப்பட்டார். இதைச் சொல்வதற்கும் காரணம் இருக்கிறது. அவசர நிலையில் மேற்கொள்ளும் இந்த மாதிரியான அறுவைச் சிகிச்சைகள் ஆபத்து நிறைந்தவை. நோய்க்கான சிகிச்சையைத் தாமதப்படுத்துவது, எந்த வகையிலும் நமக்கு உதவி செய்யாது. 'எரிகிற நெருப்பின் மேல் துணியைப் போட்டு மறைப்பது’ மாதிரி நோயின் தீவிரம் தெரியாமல் அதற்கான சிகிச்சையைத் தாமதப்படுத்துவதோ, முறையான பரிசோதனை இல்லாமல் ஏதோ சில மருந்துகள் மூலம் சுயமாக சிகிச்சையை மேற்கொள்வதோ கூடவே கூடாது. இத்தகைய செயல்கள் சம்பந்தப்பட்ட நோயின் தன்மையை மாற்றிவிடுவதற்கும், அதைத் தீவிரமாக்கி விடுவதற்கும் காரணமாகிவிடும்!

திடீர் வயிற்று வலியை நாம் ஒருபோதும் அசட்டையாக அணுகிவிடக் கூடாது. வலி ஏற்படும் பகுதி மற்றும் அதற்கான அறிகுறிகள்பற்றிச் சொல்கிறேன். குடல்வால் அழற்சி ஏற்படும்போது ஆரம்பத்தில் தொப்புளைச் சுற்றியும் பிறகு வயிற்றுக் கீழ்ப் பகுதியில் ஆரம்பத்தில் பரவலாகவும், பிறகு ஒரிடத்தில் மட்டும் குத்துவதுபோலவும் வலி ஏற்படும். வயிற்றின் கீழ் வலது புறத்தில் இந்த வலி பரவும். சுமாராகத் தாங்கக் கூடிய வலியாக இருக்கும். பித்தப்பை அழற்சியின்போது கடுமையான வலி ஏற்படும். வலது பக்க மேல்புறம் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இறுக்கிப் பிடிப்பது மாதிரியான வலி ஏற்படும். வலது முதுகின் பின்புறம் சுமாராகத் தாங்கக் கூடிய வலி உண்டாகும்.

கணைய அழற்சியின்போது நெஞ்சுக்குழி மற்றும் முதுகுக்குப் பின்புறம் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் குடைதல் போன்ற வலி ஏற்படும். முதுகின் நடுவில் சுமாராகவோ கடுமையாகவோ வலி இருக்கலாம். வயிற்றுப்புண் அல்லது அல்சர் ஒட்டையின்போது திடீர் வலி ஏற்படும். நெஞ்சுக்குழியில் எரிச்சலான வலியானது, ஆரம்பத்தில் ஓரிடமாகவும் பிறகு பரவலாகவும் ஏற்படும். இந்த வலி கடுமையான வலியாக இருக்கும்.

சிறுகுடல் அடைப்பின்போது சீராகத் தொப்புளைச் சுற்றித் தசைப்பிடிப்பு போன்ற வலி ஏற்படும். வயிற்றுப்போக்குப் பாதிப்பு ஏற்படும்போது தொப்புளைச் சுற்றிப் பரவலாக வலி ஏற்படும். சில நேரங்களில் மிதமானது முதல் சீரான வலியாக இருக்கும். கருக்குழாயில் வெடிப்பு ஏற்படும்போது திடீர் வலி உருவாகும். கீழ் வயிறு, இடப்பக்கக் கீழ் வயிறு, நடுக் கீழ் வயிறு ஆகிய இடங்களில் மந்தமான வலி ஏற்படும். கட்டிபோல் இருந்தால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்ப்பது சிறந்தது. மார்புப் பகுதியை எக்ஸ்-ரே செய்து பார்க்கும்போது உதரவிதானத்துக்குக் கீழ் காற்று தங்கி இருப்பது தெரியும். சரி, திடீர் வயிற்று வலி எப்படி எல்லாம் வரலாம்? அடுத்த இதழில்...

- மெல்வேன்... சொல்வேன்...