மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இப்படிக்கு வயிறு! - 26

இப்படிக்கு வயிறு! - 26

இப்படிக்கு வயிறு! - 26
##~##

யிற்று வலிக்கும் திடீர் வயிற்று வலிக்கும் நிறைய வித்தியாசங்கள். வயிறாகிய எனக்குள் ஓட்டை விழுந்திருந்தாலும், என்னுடைய உட்புறச் சவ்வு பாதிக்கப்பட்டு இருந்தாலும், திடீரென்று ரத்தப் போக்கு ஏற்பட்டாலும் திடீர் வயிற்று வலி உருவாகும். ரத்தப்போக்கு ஏற்படுவதற்குப் பல காரணங்கள். புண் காரணமாகவோ, பெண்களுக்குக் கருக்குழாயில் தரித்த கரு, கலைந்து போனதன் காரணமாகவோ ரத்தப்போக்கு ஏற்படலாம். இதனால் திடீர் வயிற்று வலி உண்டாகும். 

சாதாரணமாகக் குடல் தன் இயல்புக்கு மீறி விரிந்தால், அதில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு வலி ஏற்படும். குடல் இயல்புக்கு மீறி விரிவதற்குக் குடலில் ஏற்படும் அடைப்புதான் முக்கியக் காரணம். இந்தக் குடல் அடைப்பின் விளைவாக, நரம்புகள் தூண்டப்பட்டு திடீர் வலியை உண்டாக்கும். இந்த வலி, வயிறு முழுக்க இருக்கிறது என்று சொன்னாலும் வலி எப்போது - எங்கே - எப்படிப் பரவியது

இப்படிக்கு வயிறு! - 26

என்பதை நோயாளி விளக்கமாகச் சொல்ல வேண்டும். காரணம், வயிறாகிய எனக்குள் எண்ணிலடங்காப் பகுதிகள் உள்ளடங்கி இருக்கின்றன. வலி ஏற்படும்போது அது எப்படித் தொடங்கியது என்பதில் இருந்து  மருத்துவரைச் சந்திக்கும் தருணம் வரையிலான அத்தனை நிகழ்வுகளையும் விளக்கிச் சொல்ல வேண்டும். வலி எங்கிருந்து ஆரம்பித்தது என்பதை வைத்து வயிற்றின் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை முடிந்த மட்டும் சொல்லிவிடலாம்.

சில நேரங்களில், 'பழி ஓரிடம் பாவம் ஓரிடம்’ என்பதுபோல், வலி ஓரிடம் வியாதி ஓரிடமாகவும் மாறிவிட வாய்ப்பு இருக்கிறது. அதாவது, நோயாளி, வலியைக் கீழ் வயிற்றின் வலப்பக்கமாக இருப்பதாகத் தொட்டு காட்டிச் சொல்வார். சோதனை செய்து பார்க்கும்போது சிறுகுடலில் ஓட்டை விழுந்திருப்பது தெரியும். ஓட்டை மேலே இருக்க வலியைக் கீழ் வயிற்றில் காட்ட வேண்டிய நிலை ஏன் என்றால், சிறுகுடலின் ஓட்டை வழியாக நீர்க் கசிந்து வயிற்றின் வலது கீழ்ப் பக்கத்தில் ஒன்று சேர்வதுதான்.

இப்படிக்கு வயிறு! - 26

அதே மாதிரி குடல் வால் கெட்டுப்போய் அதில் உள்ள திரவம் கல்லீரலின் கீழ்ப் பகுதியில் சேரும்போது திடீர் வயிற்று வலி, வலது பக்க மேல் வயிற்றில்  ஏற்படும். அந்த அறிகுறியை வைத்துக் கல்லீரலில் ஏதோ பிரச்னை என நாம் நினைத்துவிடுவோம். குடல் வால் அழற்சியின் காரணமாகப் பெரியவர்களுக்குத் திடீர் வயிற்று வலி தொப்புளைச் சுற்றி ஆரம்பிக்கும். குழந்தைகளுக்கு மேல் வயிற்றின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கும். சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த வலி கீழ் வயிற்றுப் பகுதியில் தெரிய ஆரம்பிக்கும்.

வெறுமனே, 'வயிறு என்பது ஓர் உறுப்பு’ என என்னைப் பற்றி நீங்கள் மதிப்பிட்டு வைத்திருந்தாலும், ஒரு விஞ்ஞானக் கூடத்தில் நிகழ்கிற எண்ணிலடங்கா மாற்றங்களையும் விளைவுகளையும்போலத்தான் எனக்குள்ளும் நிகழ்கின்றன. அதனால், குறிப்பிட்ட இடத்தில் வலி ஏற்படும்போது, 'இதுதான் வலிக்கான காரணமாக இருக்கும்’ எனத் தோராயமாகச் சொல்லலாமே தவிர, அதுதான் காரணம் என அடித்துச் சொல்ல முடியாது. அனுபவம் பெற்ற மருத்துவர்கள் பலதரப்பட்டவர்களின் வலியையையும் அறிந்தவர்களாக இருப்பதால், பல சோதனைகளுக்கு ஆட்படுத்தாமல் ஒரே பரிசோதனையில் வலிக்கான காரணத்தைக் கண்டறிந்துவிடுவார்கள். கிராமப்புறங்களில், 'குடலேத்தம் தெரியாம கோடி ரூபாய் செலவாச்சாம்’னு ஒரு பழமொழி சொல்வார்கள். நிறைய நேரங்களில் வயிறாகிய எனக்குள் ஏற்படும் வலிக்கு இத்தகைய சூழல்தான் காரணமாக அமைந்துவிடுகிறது.

குழந்தைகள் வாந்தி எடுக்கும்போது, 'ஏதோ பித்த வாந்தி’ என்பதுபோல் நம் ஆட்கள் சர்வசாதாரணமாகக் கடந்துவிடுவார்கள். அந்த வாந்தி பித்த வாந்தியா இல்லையா என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்? மஞ்சள் நிறத்தில் இருந்தால் பித்தம் என்கிற ஆராய்ச்சி விவரத்தை வேறு சொல்வார்கள். வாந்தி என்றாலே நம் உடலுக்கு ஆகாத ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். பித்தம் அல்லாத வாந்தியாக இருந்தால் குழந்தைகளுக்கு ஆபத்து என்பதை அறிவது அவசியம். வாந்தி விஷயத்தில் நாம் காட்டும் மெத்தனம் அறுவைசிகிச்சை அளவுக்குக் கொண்டுபோய் விட்டுவிடும். இரைப்பையில் அடைப்பு இருக்கும்போது இந்த மாதிரி பித்தம் இல்லாத வாந்தி வெளிப்படும்.

குடலில் எங்கு அடைப்பு இருந்தாலும் வாந்தி வரும். வயிறாகிய எனக்குள் ஓட்டை விழுந்திருந்தாலும், கணைய அழற்சியினாலும், பித்தப்பை அழற்சியினாலும் வாந்தி வரும். வாந்தியின் அளவை வைத்து, குடலின் அடைப்பை, அந்த அடைப்பு உருவாகி இருக்கும் இடத்தை அறிய முடியும். அதாவது, குறைவாக வாந்தி இருந்தால் மேற்குடல் பகுதியிலும், அதிகமான வாந்தி இருந்தால் கீழ்க்குடல் பகுதியிலும் அடைப்பு இருக்கிறது என அறியலாம்.

சாதாரணமாக வாந்தியில் செரிக்காத உணவு, பித்தநீர் ஆகியவையும் இருக்கலாம். ஆனால், வாந்தி மலத்துடன் கலந்த மாதிரி வெளிவந்தால் சிறுகுடல் அடைப்பு என்று அர்த்தம். இது மிகவும் ஆபத்தான அறிகுறி. அதேபோல், குழந்தைகளுக்கு வலியுடன், கருஞ்சிவப்பு நிறத்தில் வயிற்றுப்போக்கு இருந்தால் குடலுக்குள் குடல் செருகி இருக்கிறது என்று அர்த்தம். அதற்குரிய சிகிச்சையை உடனடியாக எடுப்பது நல்லது.

மருத்துவத்தில் வயிறாகிய என்னை ஒன்பது பாகங்களாகப் பிரிக்கிறார்கள். எந்த இடத்தில் வலி வந்தால் வயிற்றில் எங்கு பாதிப்பு என்பதைக் கண்டறியத்தான் இந்த வகைப்பாடு. அவை குறித்து...

- மெல்வேன்... சொல்வேன்...