குட் நைட்

ஆணுறுப்பு விறைப்புத் தன்மைக் குறைபாடு என்கிற பாதிப்பு உலகம் முழுவதும் பல லட்சம் ஆண்களை வறுத்து எடுக்கிறது.
##~## |
ஆணுறுப்பில் எழுச்சி நிலை இருந்தால்தான், மனைவியுடன் ஒருவர் சந்தோஷமாக உடலுறவுகொள்ள முடியும். திருப்திகரமான உடலுறவுதான் பாலுறவின் ஆதாரமாகும். ஆணுறுப்பு எழுச்சியற்ற நிலையில்... தன்னுடைய மனைவியைத் திருப்திபடுத்த முடியாத குற்ற உணர்வு, ஒரு குழந்தைக்குத் தந்தையாக முடியாத துயரம், சமூகம் தன்னை அவலமாக மதிப்பிடுமே என்கிற மனசைக் குடையும் வருத்தம் எல்லாம் சேர்ந்துகொண்டு அந்த ஆண் மகனை அல்லாட வைக்கும். 'எத்தத் தின்னால் பித்தம் தெளியும்’ என்கிற நிலையில் இருக்கிற அந்த ஆண் மகனின் கோணத்தில் பார்த்தால்தான் இது எவ்வளவு பெரிய சிக்கல் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
விறைப்புத்தன்மைக் குறைபாட்டுக்கு என்ன காரணம் என்று அறிய 'பினைல் ஹேமோடைனமிக்’ (Penile Hemodynamic) என்ற பரிசோதனை மிக அவசியம் என்று சென்ற வாரம் சொல்லியிருந்தேன். விறைப்புத் தன்மைக் குறைபாடு உள்ள ஆணுக்கு ஏன் இந்தப் பரிசோதனை அவசியம் என்று சொல்லப்படுகிறது தெரியுமா?

''எல்லா டெஸ்ட்டுகளும் எடுத்து பார்த்தாச்சு, உங்களின் விறைப்புத் தன்மைக் கோளாறுக்கு என்ன காரணம் என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை'' என்று மருத்துவர்களால் கைவிடப்பட்ட ஆட்களிடம்கூட இந்தப் பரிசோதனை வேலை செய்கிறது. அவர்களின் விறைப்புத் தன்மைக்குறைபாட்டுக்கு என்ன காரணம் என்பதை இந்தப் பரிசோதனையின் மூலம் துல்லியமாகக் கண்டறிய முடிகிறது.
சமீப காலத்தில்தான் இந்தப் பரிசோதனை நவீன செக்ஸாலஜி துறையில் புகுத்தப்பட்டு உள்ளது. மருத்துவர்களிலேயேகூட பலருக்கு இப்படி ஒரு பரிசோதனை இருப்பது தெரியாது. எதிர்காலத்தில் செக்ஸாலஜி துறையில் முக்கிய இடத்தை இந்தப் பரிசோதனை பிடிக்கும் என்று நம்பலாம்!
இதேபோன்ற, இன்னொரு முக்கியமான பரிசோதனை 'நெர்வ் கண்டக்ஷன் ஸ்டடீஸ்’ (Nerve conduction studies).

ஒரு மனிதன் செக்ஸ் உணர்வுக்கு ஆட்படுகிறபோது அவனுடைய மனமும் உடலும் பரவச நிலைக்கு உள்ளாகும். அப்போது அவனுடைய உடம்பில் உள்ள நரம்புகளின் வழியாகத் தூண்டுதல் நிகழ்ந்து, அதனால் அதிக ரத்தமானது வேகமாக ஆணுறுப்புக்குப் பாய்ந்து, ஆணுறுப்பை விறைப்பு நிலைக்கு மாறும். இந்த 'நெர்வ் கண்டக்ஷன் ஸ்டடீஸ்’ பரிசோதனை மூலம்... சம்பந்தப்பட்ட ஆணுக்கு மிகச் சரியான முறையில் நரம்புகளின் மூலம் தூண்டுதல் நிகழ்கிறதா? அவ்வாறு தூண்டுதல் நிகழும்போது போதிய அளவில் ரத்தமானது ஆணுறுப்புக்குப் பாய்கிறதா என்றெல்லாம் பரிசோதிக்கப்படும்.
ஒருவேளை இந்தப் பரிசோதனையின் மூலம் ஆணுறுப்பு எழுச்சி குறைபாட்டுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய முடியாவிட்டால் அடுத்து அல்ட்ராசோன் ஸ்கேன் (Ultrasone Scan) செய்ய வேண்டி இருக்கும். இந்த ஸ்கேனின் மூலம் அந்த ஆணுக்கு அடிவயிற்றில் உள்ள புராஸ்டேட் சுரப்பியில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா? அதன் காரணமாக ஆணுறுப்பு எழுச்சி பாதிப்படைந்து உள்ளதா என்பதைத் துல்லியமாக கண்டறிந்துவிடலாம். இது தவிர, விதைப் பையிலோ, விதைகளிலோ ஏதேனும் குறைபாடு இருக்கிறதா என்பதையும் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ப சிகிச்சையும் மருந்துகளும் கொடுத்து விறைப்புத் தன்மை பாதிப்பைச் சரிசெய்யலாம்.
அடுத்த முக்கியமான பரிசோதனை - 'ரிஜிஸ்கேன் டெஸ்ட்’ (Rigiscan Test). ஒரு மனிதன் மனதில் எந்தப் பதற்றமும் இல்லாமல், அமைதியுடன் உறங்கும்போது அவனுடைய பிறப்பு உறுப்பு எழுச்சி அடையலாம். இதைப் பதிவுசெய்து, ஆய்வு செய்வதே இந்தப் பரிசோதனையின் அடிப்படை. ஒருவேளை சம்பந்தப்பட்ட அந்த மனிதருக்கு தூக்கத்தில் ஆணுறுப்பு எழுச்சி அடையவில்லை எனில், அதற்கு அந்த மனிதரின் உடம்பு காரணம் அல்ல; அந்த மனிதரின் மனம்தான் காரணம் என்கிற முடிவுக்கு வரலாம்.
ஒரு மனிதரின் ஆணுறுப்பு எழுச்சி அடையாத பாதிப்புக்கு மனப்பிரச்னைதான் காரணம் என்று சந்தேகிக்கப்பட்டால், அந்த மனிதரை மன நல மருத்துவரிடம் அனுப்பிவைத்து, 'சைக்கோமெட்ரிக் டெஸ்ட் ’( Psychometric test) என்கிற பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும். அந்த மனிதரின் மனநிலை எந்த நிலையில் உள்ளது என்பதை இதன் மூலம் கண்டறிய முடியும். இதற்குப் பிறகுதான் ஒருவரின் ஆணுறுப்பு விறைப்பு அடையாத செக்ஸ் பிரச்னைக்குக் காரணம் மனரீதியானதா அல்லது உடல்ரீதியானதா அல்லது இரண்டும் சேர்ந்ததா என்கிற முடிவுக்கு நவீன செக்ஸாலஜி மருத்துவம் வரும். இதன் அடிப்படையில்தான் மேற்கொண்டு அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
- இடைவேளை...