
கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 02

சாதனை நேரம்
##~## |
மாதவிடாய் உரிய நேரத்தில் வராமல் இருப்பதுதான் கரு உருவானதன் முக்கிய அறிகுறி. ஒவ்வொரு மாதமும் சரியாக சீராக மாதவிடாய் வந்து அது தள்ளிப்போனால் 'கர்ப்பமாக இருக்குமோ?’ என்ற சந்தேகம் எழும். பூப்பெய்தியது முதல் ஒழுங்கற்ற மாதவிடாய்ப் பிரச்னை இருப்பவர்களுக்கு கரு உருவாகி இருக்கிறதா என்பதே தெரியாது. அப்படிப்பட்டவர்கள், 45 நாட்கள் கழித்தும் 'தூரம்தான் தள்ளிப் போயிருக்குபோல’ என்று சாதாரணமாக விட்டுவிடுவார்கள். இந்த மாதவிடாய்ச் சுழற்சி தள்ளிப்போவதுடன் வாந்தி, சோர்வு, அதிகத் தூக்கம், களைப்பு, குமட்டல் போன்ற அறிகுறிகளும் சேர்ந்தே இருந்தால், கருவுற்றிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கும்.
சிறுநீர்ப் பரிசோதனை மூலம் கர்ப்பம் தரித்திருப்பதை உறுதிசெய்யலாம். ஆனால், இப்போது, ஸ்கேன் பரிசோதனையையும் சிலருக்கு செய்யச் சொல்கிறோம். ஏன்? கர்ப்பம் கருப்பையில் உண்டாகியிருக்கிறதா? அந்த வாரத்திற்கு ஏற்ற அளவில் வளர்ச்சி இருக்கிறதா? கருப்பையில் இல்லாமல் வெளியில் எங்கேனும் (ஃபெலோப்பியன் குழாயிலும்) கர்ப்பம் தரித்திருக்கிறதா என்பதை கண்டறியவே சிறுநீர் பரிசோதனைக்குப் பிறகும் ஸ்கேன் செய்து பார்க்கச் சொல்கிறோம்.
ரத்தத்தின் ரத்தமே...
கர்ப்பம் என்று உறுதிப்படுத்திய பிறகு, ரத்த வகை (Group, Rh type), ஹீமோகுளோபின் அளவு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, தைராய்டு அளவு சரியாக இருக்கிறதா என்ற பரிசோதனை முக்கியம். அடுத்து ஹெச்.ஐ.வி. மற்றும் மஞ்சள் காமாலை போன்ற தொற்று நோய்ப் பரிசோதனை (Infection test) எல்லோருக்கும் செய்யப்படுகிறது. இதில், ஏதேனும் நோய் இருப்பது தெரிந்தால், கர்ப்பக் காலத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உதவும். சிறுநீர், ரத்தப் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எனப் பரிசோதனைகள் முடிந்ததும் சிகிச்சைகள் தொடங்கப்படும். ஃபோலிக் ஆசிட், வைட்டமின்கள், ஊட்டச்சத்து உணவு ஆலோசனைகளும் கொடுக்கப்படும்.

மயக்கவைக்கும் மசக்கை
எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மசக்கை வாந்தி வரலாம். சிலருக்கு வாந்தி வராமலும் இருக்கலாம். ஆனால், வாந்தி இருந்தாலே கரு வளர்ச்சி அருமையாக இருக்கிறது என்று அர்த்தம். எதைச் சாப்பிட்டாலும் வாந்தி வரும். குறிப்பாக, தாளிக்கும்போது வருகிற எண்ணெய் வாசனை மற்றும் மசாலாப் பொருட்கள். இவற்றைப் பார்த்தாலே வயிறு குமட்டும். மசக்கை வந்தால் ருசியாக விரும்பிச் சாப்பிடக்கூடிய விஷயம் என்று தோன்றுவது மாங்காய் போன்ற புளிப்புச் சுவை உள்ள ஆகாரங்கள் மட்டுமே.
இந்த மசக்கை ஏன் ஏற்படுகிறது? கர்ப்பக் காலத்தில் உடலில் கரு உருவானவுடன் ஹார்மோன்கள் மாறுதல் நடக்கும். இதன் ஒரு விளைவுதான் மசக்கை. வாந்தி வருகிறதே என்று பயப்படாமல், அதையும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். மசக்கை, சாப்பிட முடியாத அளவுக்கான தொந்தரவாக மாறினால், வாந்தியைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம். இதனால், உணவு கொஞ்சமாவது வயிற்றில் தங்கும். வாந்தி வருகிறது என்று சிலர் சாப்பிடாமலே இருப்பது மிகவும் தவறு. வயிற்றில் இருக்கும் 'கரு’வை நினைத்து, உணவில் மிகுந்த அக்கறையோடு இருப்பது நல்லது.
உடல் உள்ளம் உற்சாகம்
மசக்கைப் பிரச்னையால் வாய்க்கு எதுவும் பிடிக்காது என்பதால், எண்ணெய் மசாலா உணவுகளைத் தவிர்த்து பழங்கள், காய்கறிகள், நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை அதிகமாக சாப்பிடலாம். ஒரே நேரத்தில் அதிகம் சாப்பிடாமல், வாய்க்கு எதெல்லாம் பிடிக்கிறதோ அதை அளவோடு அவ்வப்போது சாப்பிடுவது நல்லது. அதிக அலைச்சல் கூடாது. குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் வண்டிகளில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதிகப்படியான எடையைத் தூக்கக் கூடாது. காலை, மாலை என நேரம் கிடைக்கும்போது, அரை மணி நேர நடையும் அவசியம்.
- கரு வளரும்...