மற்ற எபிசோடுகள்
Published:Updated:

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!
##~##

சொலவடை வாசம்பா வீட்டில் வரகு சாதமும், கத்தரிக் குழம்பும். அக்கம்பக்க வீடுகளைச் சுண்டி இழுக்கும் வாசனை. சிறப்பு விருந்தாளியாக அம்மணிப் பாட்டி. 

''ஒலகத்து வைத்தியமெல்லாம் தெரிஞ்சு வெச்சிருந்தா மட்டும் பத்தாதுடி அம்மணி. தெகட்டத் தெரியாத அளவுக்கு அதச் சமைக்கத் தெரிஞ்சிருக்கணும். 'வரகரிசிச் சோறும் வாதுளங்காய் கறியும்’னு ஒளவைப் பாட்டியே பாடி இருக்காங்க. வரகரிசியை மண் பானையில கொழய வடிச்சு, கத்தரிக்காக் கொழம்பை நல்லா வத்துற அளவுக்குச் செஞ்சு, மணக்க மணக்க ஒனக்காகப் பரிமாறப்போறேன். சம்பந்தி விருந்தன்னிக்குக்கூட நீ இப்புடியரு சாப்பாடு சாப்புட்டிருக்க மாட்டே...'' - அம்மணிக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுத்தபடி விருந்து புராணம் பாடினாள் 'சொலவடை’ வாசம்பா.

அம்மணிக்கு நாக்கில் எச்சில் ஊறியது. ''பழமொழி சொல்றதுக்கும் பலகாரம் செய்யிறதுக்கும் ஒன்னைய விட்டா இந்த ஊருக்குள்ள யாருடி இருக்கா? சப்புக்கொட்டிச் சாப்புடுறதுக்காக நான் வரகு தேடி வரலைடி. வரகுல அவ்வளவு சத்து இருக்கு. மலைவாசி மக்கள் இன்னிக்கும் வாட்டசாட்டமா இருக்காங்கன்னா, அதுக்குக் காரணமே வரகரிசிச் சாப்பாடுதான். உப்புமா, கட்டுசாதம், கஞ்சி, புட்டுன்னு விதவிதமா வரகை அவங்க சாப்பிடுவாங்க. நீ வரகை எந்தப் பக்குவத்துல பண்ணி இருப்பேன்னு வாசனையப் பாக்குறப்பவே தெரியுது. சீக்கிரம் சோத்தைப் போடு!''

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

''வைக்கிறேன்... செத்த பொறுடி. 'வரகு இருந்தா உறவு வேணாம்’னு எங்கம்மா சொல்வாக. அதனாலயோ என்னவோ... தெனமும் வரகு சாப்பாடுதான் எனக்கு. நீ வரகுக்கு இப்புடி ஏங்குற ஆளுன்னு தெரிஞ்சிருந்தா, தினமும் ஒன்னைய விருந்துக்கு அழைச்சிருப்பேன்டீ. வரகோட மகத்துவத்த நீ இப்பத்தானே சொல்றே...'' - வரகரிசி சாதத்தைப் பரிமாறத் தொடங்கினாள் வாசம்பா.        

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

''வரகைக் கோயில் கும்பத்துல வெச்சு பத்திரப்படுத்துறதுக்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமாடி? இடியையே தாங்குற சக்தி வரகுக்கு இருக்கு. கோயில்ல இடி விழுந்தா ஊருக்கே அபசகுனமாகிடும்னு, இடிதாங்கி வசதி இல்லாத அந்தக் காலத்துலேயே கண்டுபிடிக்கப்பட்ட மகத்துவமான பொருள் வரகு. இன்னிக்குப் பாதிப் பேரைப் படாதபாடுபடுத்துற சர்க்கரை வியாதிக்கு வரகுதான் சரியான நிவாரணம். ஒடம்புக்குத் தேவையான எல்லா சக்தியையும் கொடுக்குற வரகு, சர்க்கரையை அப்படியே இறக்கிடும். ஒடம்பைச் சக்கரமா போட்டுப் படுத்தி எடுத்து உழைக்கிறவங்க, வரகை விரையா வடிச்சு சாப்பிடணும். பெரிசா உடல் உழைப்பு இல்லாதவங்க மாவு மாதிரி குழைய விட்டு வரகைச் சாப்பிடுறதுதான் நல்லது.''

''ஏ அம்மணி... 'அருகம்புல்லச் சாப்புட்ட மாடு ஆகாயத்தைப் பத்திப் பேசின’ கதையா வரகை வடிச்சுக் கொட்டிய என்னையப் பத்திப் பேசாம வரகப் பத்தியே புராணம் பாடுறீயே..?''

''நீ வரகை வடிச்சிருக்கிற பக்குவமும், கத்தரிக்காயைக் கொழம்பாக்கி இருக்குற கைவித்தையும் சொக்கவைக்குதுடி. அசைவச் சாப்பாடு சாப்புட நினைக்கிறவுகளுக்கும் வரகுச் சாப்பாடு வகையா இருக்கும்கிறது ஒனக்குத் தெரியுமா? வரகு அரிசி சாதத்துக்கு மீன் கொழம்பு செஞ்சா, அம்புட்டு ருசியா இருக்கும்!''

''ஒனக்கு மீன் கொழம்பு சாப்புட ஆசையா இருந்தா... அத நேரடியாச் சொல்ல வேண்டியதுதானடி...'' - வாசம்பா வகையாகச் சீண்ட, அம்மணிக்கு சிரிப்பு தாங்கவில்லை. ஒன்றுக்கு மூன்று தடவையாக வயிறாரச் சாப்பிட்டு அம்மணி எழ, அவசரமாக அவளைக் கையமர்த்தினாள் வாசம்பா.

''வரகுச் சாப்பாட்டுக்கே இப்புடி வாயப் பொளந்தா எப்பூடி? அடுத்து வர்ற ஐட்டத்தைப் பாருடீ...'' - ஒரு குவளையை நீட்டியபடிச் சொன்னாள் வாசம்பா. கையில் வாங்கிப் பார்த்த அம்மணிக்கு அப்படியரு பூரிப்பு.

''எனக்கு ரொம்பப் புடிச்ச தூதுயிலை ரசமாடி?'' - வாசனையையும் பச்சை வண்ணத்தையும் வைத்தே கண்டுபிடித்துவிட்டாள் அம்மணி.

'' 'காசுக்கு மயங்காதவ கருப்பட்டிக்கு மயங்கினாளாம்’னு சொல்ற மாதிரி, நீ எதுக்கு மயங்குவேன்னு எனக்குத்தானே தெரியும்? நீ நெனைக்கிற மாதிரி தூதுயிலைய மட்டும் வெச்சு நான் ரசம் பண்ணலை. கண்டங்கத்திரி, கல்யாண முருங்கை, முசுமுசுக்கை எல்லாத்தையும் சேத்து செஞ்ச ரசம் இது. தொண்டைக்கு இதமா எப்புடி இருக்குன்னு குடிச்சுப் பாரு...''

''அடியாத்தி..? நீ எப்படி மருத்துவச்சியா மாறினே? தொண்டைக்கு இதம் கொடுக்கிறது மட்டுமா தூதுயிலையோட மகத்துவம்? சளி, இருமல்னு சகலப் பிரச்னைகளுக்கும் சரியான நிவாரணி தூதுயிலைதான்டி...'' என்றபடியே ரசத்தைப் பருகத் தொடங்கினாள் அம்மணிப் பாட்டி. இளம் சூட்டில் தொண்டைக்கு இதமாக இறங்கிய ரசத்தில் சொக்கிப்போன அம்மணி, அதே பரவசத்தில் ஆரம்பித்தாள் தூதுயிலைப் புகழாரத்தை...

- பாட்டிகள் பேசுவார்கள்...