இப்படிக்கு வயிறு! - 27

##~## |
வலியை வைத்தே எந்த உறுப்பு பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை நாம் தோராயமாகத் தெரிந்துகொள்ளலாம். வயிறாகிய என்னுடைய மேல்பகுதியில் வலப்பக்கமாக வலி எடுத்தால், கல்லீரல், பித்தப்பை, இரைப்பை, முன்சிறுகுடல் ஆகிய பகுதிகளில் புண் இருக்கலாம். மேல்வயிற்றின் நடுப்பகுதியில் வலி ஏற்பட்டால் இரைப்பை முன் சிறுகுடல் புண் (பெப்டிக் அல்சர்), கணைய அழற்சி ஆகியவை காரணமாக இருக்கலாம். மேல்வயிற்றின் இடப்பகுதியில் ஏற்படும் வலி மண்ணீரல் வீக்கம் காரணமாகவும், நடு வயிற்றின் வலப்பக்கம் தோன்றும் வலி வலப்பக்க சிறுநீரகக் கோளாறுகள் காரணமாகவும் இருக்கலாம். நடு வயிற்றின் நடுப்பக்கம் வலி ஏற்பட்டால் சிறுகுடல் பாதிப்பும், நடு வயிற்றின் இடப்பக்கம் வலி ஏற்பட்டால் இடப்பக்க சிறுநீரகக் கோளாறுகளும் காரணமாக இருக்கும்.
கீழ் வயிற்றின் வலப்பகுதியில் ஏற்படும் வலி, குடல்வால் அழற்சிக்கான அறிகுறியாக இருக்கலாம். கருக்குழாய் பாதிப்பு, வலது சிறுநீர்க் குழாயில் கல் பாதிப்பு ஆகியவையும் இந்த வலிக்குக் காரணங்களாக இருக்கலாம். கீழ் வயிற்றின் நடுப்பகுதியில் அதாவது, தொப்புளுக்குக் கீழ் வலி ஏற்பட்டால், சிறுநீர்ப்பை, கர்ப்பப்பைக் கோளாறுகள் காரணமாக இருக்கலாம். கீழ் வயிற்றின்

இடப்பகுதியில் வலி ஏற்பட்டால், இறங்கு குடல் கோளாறுகள், இடது சிறுநீர்க் குழாயில் கல் பாதிப்பு ஆகியவை காரணமாக இருக்கலாம். வலியை வைத்துக் காரணத்தைக் கண்டறிவது 100 சதவிகித சாத்தியம் எனச் சொல்ல முடியாது. ஆனால், எதனால் வலி ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்து, உரிய சமயத்தில் மருத்துவரை அணுக இந்த அனுமானம் நமக்கு உதவும்.
வயிறாகிய எனக்குள் பாதிப்புகள் உருவாகும்போது பெரிதும் பாதிக்கப்படுவது சிறுகுடல்தான். டைஃபாய்டு மற்றும் வயிற்றுக் காச நோய் ஆகிய தொற்று நோய்கள் சிறுகுடலைக் கடுமையாகப் பாதிக்கக்கூடியன. உலகையே அச்சுறுத்தும் டைஃபாய்டு காய்ச்சலுக்கு 'மூன்று வாரக் காய்ச்சல்’ என்றும் ஒரு பெயர். இந்தக் காய்ச்சலின் அடைவுக் காலம் சுமார் ஒன்றில் இருந்து மூன்று வாரங்கள் வரை இருக்கும் என்பதால், அப்படி ஒரு குறிப்பீடு. இந்த வியாதிக்கு 'டைஃபாய்டு பாக்டீரியா’ என்கிற கிருமித£ன் காரணம். இதன் மருத்துவப் பெயர் 'சால்மொனெல்லா டைஃபி’ (Salmonella typhi).
இந்த நோய்க் கிருமிகள் நோயாளியின் உடம்பில் இருந்து சிறுநீர், மலம் ஆகியவை மூலமாக வெளியேறுகின்றன. இப்படி வெளியேறிய நோய்க்கிருமிகளால் உணவு, பானங்கள் ஆகியவை அசுத்தப்படும்போது, அவற்றின் மூலம் கிருமிகள் இன்னொருவரின் உடம்பில் சேர்ந்து விடுகின்றன. அதனால், நாம் சாப்பிடும் உணவும், குடிக்கும் பானங்களும் சுத்தமாக இருப்பது அவசியம். ஹோட்டல்களிலும், உணவுப் பொருள் தயாரிக்கும் இதர இடங்களிலும் வேலை பார்ப்பவர்கள் இந்த நோயைச் சுமந்திருப்பவராக இருந்தால், இந்த வியாதி மற்றவர்களுக்கும் எளிதாகப் பரவிவிடும்.
சாதாரணமாக, நோய்க் கிருமிகள் இரைப்பையை அடையும்போது அங்கு சுரக்கும் அமிலமே அவற்றை அழித்துவிடும். இரைப்பையில் சுரக்கும் அமிலத்துக்கு இயற்கை அப்படி ஒரு அசாத்திய சக்தியைக் கொடுத்திருக்கிறது. சில நேரங்களில் காவலாளியின் கண்ணில் மண்ணைத் தூவித் தப்பிச் செல்லும் திருடனைப்போல், நாம் சாப்பிட்ட உணவுப் பொருள் எந்தக் காரணத்தினாலோ, இரைப்பையில் சிறிது நேரம்கூடத் தங்காமல் போய்விடும். இன்னும் சில நேரங்களில் மின்சாரம் இல்லாத நேரமாகப் பார்த்து திருடும் பலே கில்லாடிகளைப்போல் இரைப்பை வேலை செய்யாத நேரத்தில் நோய்க் கிருமிகள் எந்தச் சேதமும் இல்லாமல் குடலுக்குள் வந்துவிடுகின்றன. அங்கு இந்தக் கிருமிகள் குடலின் சவ்வுப் பகுதியைச் சுத்திகரித்து, குடலின் சுவரில் இருக்கும் நிணநீர்த் திசுக்களில் (Lymphoid tissues) சேர்ந்துகொள்கின்றன. அங்கு அவை தங்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக்கொள்ளும். இதன் காரணமாகச் சிறுகுடலில் புண் உண்டாகிறது. அங்கிருந்து அவை நிணநீர்க்குழாய்கள் மூலம் அருகில் இருக்கும் நிணநீர்க் கட்டிகளை அடைகின்றன. இங்கு இந்தக் கிருமிகள் தங்கள் எண்ணிக்கையை இன்னும் பெருக்கிக்கொண்டு ரத்தத்தில் கலந்து விடுகின்றன. ரத்தத்தின் வழியாக அவை உடலின் எல்லா உறுப்புகளையும் சென்று அடைகின்றன. எந்தெந்த உடல் உறுப்புகளில் நிணநீர்த் திசுக்கள் இருக்கின்றனவோ... அந்த உறுப்புகளில் எல்லாம் இந்தக் கிருமிகள் போய்ச் சேருகின்றன.
அதாவது, அடிநாக்குச் சதைகள், தொண்டை, நுரையீரல், உடலில் உள்ள நிணநீர்க் கட்டிகள், குடலில் உள்ள நிணநீர்த் திசுக்கள், எலும்பு மஜ்ஜை (Bone marrow), மண்ணீரல், கல்லீரல், பித்தப்பை (Gallbladder) ஆகிய எல்லா உறுப்புகளிலும் இந்தக் கிருமிகள் வளரத் தொடங்குகின்றன.
இந்த நோய்க் கிருமிகள் ரத்தத்தில் தங்கள் நச்சுத் திரவத்தை அதிக அளவில் சுரக்கின்றன. இந்த மாதிரியான நேரத்தில்தான் நோயாளி காய்ச்சலினால் அதிகமாகத் துன்பப்படத் தொடங்குகிறார். ஆரம்பத்தில் காய்ச்சல் லேசாக இருந்து நாளுக்கு நாள் காய்ச்சல் அதிகமாகி, ஒரு வாரத்துக்குள் சுமார் 40 டிகிரி செல்சியஸ் அளவைத் தாண்டிவிடும். (சாதாரண உடல் வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸ் அல்லது 98.4 பாரன்ஹீட்)
அப்போதுதான் தலைவலியும் ஆரம்பமாகிறது. நினைவும் தப்பத் தொடங்குகிறது. பசி குறைகிறது. மலத்தில் ரத்தமும் சளியும் சேர்ந்து போகத் தொடங்குகிறது. நோயாளியின் ரத்தத்தின் அளவும் அதில் உள்ள வெள்ளை அணுக்களின் (White Blood Cells) எண்ணிக்கையும் குறைகிறது. ரத்தத்தில் நோய்க் கிருமிகளின் நச்சுத் திரவ அளவு அதிகமாகும்போது, இந்தத் தொந்தரவுகளும் அதிகமாகின்றன. பித்தப்பையை அடைந்த இந்தக் கிருமிகள் அதிலும் சிறிய அளவில் அழற்சியை உண்டுபண்ணுகின்றன. அதையே தங்களின் மையமாகவும் இந்தக் கிருமிகள் மாற்றிக் கொள்கின்றன.
சினிமாக்களில் வரும் வில்லன்களைப்போல் வியாதிகளைப் பரப்பும் கிருமிகள் விஸ்வரூபம் எடுப்பது பற்றி அடுத்த இதழில்...
- மெல்வேன்... சொல்வேன்...