பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு!
##~## |
பயத்த மாவு தொடங்கி பழங்கள் வரையிலான மசாஜ் சமாச்சாரங்களைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அந்த வரிசையில் காபி மசாஜ் தெரியுமா உங்களுக்கு? அழகு சாதனங்களில் அதிக அளவு ரசாயனங்கள் கலக்கப்படுவதால், காய்கறி, பழங்கள் என அழகுக்காக இயற்கை முறையைப் பின்பற்றத் தொடங்கிவிட்டவர்களின் அடுத்த பயன்பாடுதான் காபி.
மதுரையிலும் மணக்கிறது காபி ஃபேஷியல்.
''மணக்கும் காபி மனதுக்குப் புத்துணர்ச்சி தருவதோடு, முகத்தையும் பொலிவாக்கும்'' என்கிறார் அழகுக்கலை நிபுணர் ஓசானா.
''ஃபேஷியல் என்பது நம் முகத்துக்குச் செய்யப்படும் மசாஜ். உடல் ஆரோக்கியத்துக்கு எப்படி நல்ல உணவு, உடற்பயிற்சி அவசியமோ... அதேபோல்தான் ஃபேஷியலும். நாம் உண்ணும் பழங்கள், காய்கறிகளில் உள்ள சத்துக்களை உடல் உறிஞ்சி ஆரோக்கியமாக வைத்திருப்பதைப்போல ஃபேஷியலுக்குப் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து சத்துகள் உறிஞ்சப்பட்டு சருமத்தை

மிருதுவாகவும் இளமையாகவும் வைத்திருக்கும். முகத்தில் உள்ள தசைகள்

வலுப்பெறும். முகத் தசைகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைத்து புத்துணர்ச்சி கிடைக்கும்'' என்று பொதுவான ஃபேஷியல் மசாஜ் பற்றி மெசேஜ் தந்தவர், காபி ஃபேஷியல் செய்வது பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
''இன்ஸ்டன்ட் காபி பவுடருடன் பாதாம் பருப்பு அல்லது பட்டர் ஃபுரூட் சேர்த்துத் தயாரிக்கப்படும் கலவை கொண்டுதான் காஃபி மசாஜ் செய்யப்படுகிறது. முதலில் தோலின் மேற்பரப்பில் உள்ள அழுக்கை நீக்கி, ஸ்க்ரப் மூலம் தோலில் உள்ள இறந்த செல்களை அகற்றுவோம். சருமத் துவாரங்களில் உள்ள அழுக்கை நீக்கி, பிறகு மசாஜ் செய்வோம். மசாஜ் செய்யும்போது சருமத்தில் உள்ள துவாரங்களின் வழியாக ஈரப்பதம் ஊடுருவிச் சென்று, தோலில் பளபளப்பைக் கூட்டும். முகக் களைப்பும் நீங்கும். பிறகு கலந்துவைத்த காபிப் பொடிக் கலவையைக்கொண்டு முகத்திற்கு பேக் போடுவோம். அரை மணி நேரம் கழித்துக் கழுவ வேண்டும்.
பிரஷர் பாயின்ட் மூலம் முகத்தில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேற்றப்படுவதால், தலைவலி, தூக்கமின்மை, சைனஸ் போன்றவற்றில் இருந்து விடுதலை கிடைக்கிறது. சாதாரணமான ஃபேஷியலின் பலன் 15 நாள் வரைதான் இருக்கும். ஆனால், காஃபி ஃபேஷியல் ஒரு மாதம் வரை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கும். வறண்ட சருமத்தினருக்கு இந்த பேஷியல்

ரொம்பவே நல்லது'' என்கிறார் நம்பிக்கையாக.
''எண்ணெய்ச் சுரப்பிகள் சரியாகச் சுரக்காமல் இருந்தால், சருமம் வறண்டு போகும். முகத்தில் பருக்கள் வராது. ஆனால், சீக்கிரம் முகத்தில் சுருக்கங்கள்
வந்துவிடும். பொதுவாகப் பனி, குளிர் காலங்களில் தோல் மிகவும் வறண்டு போகக்கூடும் என்பதால், எல்லா வகையான சருமத்தினரும் இந்த ஃபேஷியல் செய்து கொள்ளலாம்.'' என்கிறார் கூடுதல் தகவலாக.
காபி மசாஜ் தோலைப் பாதுகாக்குமா என்பது குறித்து மதுரையைச் சேர்ந்த தோல் நோய் சிகிச்சை நிபுணர் ஜெயந்தியிடம் கேட்டோம். ''காலையில் எழுந்ததும் காபி குடித்தால்தான் பலருக்கும் அன்றைய பொழுதே விடியும். காபியில் உள்ள காஃபின் (Caffeine)என்ற வேதிப் பொருள் தோலை மிகவும் இளமையாக வைத்துத் தோலில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைத்து, புத்துணர்ச்சியைக் கூட்டுகிறது. வயோதிகத் தோற்றத்தைக் குறைத்து, சருமத்தை இளமையாகவும் பொலிவாகவும் மாற்றுகிறது என்று சமீபத்தில் தோல் நோய் மருத்துவர்கள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்து உள்ளனர். காபித் தூளில் உள்ள வாசனை, சுவாசத்தின் வழியாக மூளையில் உள்ள செல்களைத் தூண்டிப் புத்துணர்வை ஏற்படுத்தும். மன அழுத்தத்தை நீக்கும். தோலின் ஈரப்பதத்தைச் சீரமைத்துப் பளபளப்பை உண்டாக்கும். மேலும், காஃபின் ஆன்டிஆக்சிடென்டாகச் செயல்பட்டு, தோல் புற்று நோய் வராமல் தடுக்கவும் உதவும்!'' என்கிறார் உறுதியாக.
- கா.பெனாசிர்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி