குட் நைட்

##~## |
தொடர்ந்து ஆணுறுப்புக் குறைப்பாட்டைப் பற்றியே எழுதிக்கொண்டு இருக்கிறீர்களே... என்று டாக்டர் விகடன் வாசகர்கள் கேட்கலாம். இன்றைக்கு என்னிடம் வருகிற பாதிப்பேர் இந்தக் குறைப்பாட்டுக்காகத்தான் வருகிறார்கள். இவர்களில் பலருக்குத் தங்களின் குறைபாட்டுக்கு அறிவியல்பூர்வமாக என்ன காரணம் என்றே தெரியாமல், போலி மருத்துவர்களிடம் சென்று கண்ட கண்ட லேகியங்களையும், உருண்டை மருந்துகளையும் சாப்பிட்டுவிட்டு, உடம்பைக் கெடுத்துக்கொண்டு கடைசியில்தான் வருகிறார்கள். இவர்களில் சிலர் இந்தக் குறைப்பாட்டுக்கு என்ன உண்மையான காரணம் என்று அறியாத நிலையில் உளவியல் சிக்கலுக்குக்கும் உள்ளாகிறார்கள்.
இப்படி சிக்கலுக்கு உள்ளான ஒருவர் சமீபத்தில் தனியாக வந்தார். அவருடைய மனைவியையும் அழைத்து வரச் செய்து, பேசியபோது ஒரு உண்மை தெரிந்தது. முதல் இரவு அன்று இவருக்கு ஆணுறுப்புக் குறைபாடு இருப்பது தெரியவந்தபோது, அவருடைய மனைவியிடம் 'யாரிடமும் இதனை நீ சொல்லக் கூடாது. அப்படி நீ சொன்னால், நான் தற்கொலை செய்துகொள்வேன்’ என்று மிரட்டியிருக்கிறார். 'பூவும் பொட்டும் நிலைச்சாப் போதும்’ என்கிற நினைப்பில் அந்தப் பெண்ணும் அமைதி காத்திருக்கிறார். நாளடைவில் குழந்தை இல்லாது பற்றி ஊரார் சுட்டிக்காட்டிக் கிண்டல் செய்ய... என்னிடம் வந்துள்ளார். இத்தனைக்கும் அவருக்கு இருந்த குறைபாடு நவீன அலோபதி மருந்து, மாத்திரைகளாலேயே குணப்படுத்தக்கூடிய விஷயம்தான்.

ஆணுறுப்புக் குறைபாடு உடல்ரீதியான காரணமாக இருந்தால், அதற்கேற்ப சிகிச்சைத் தர வேண்டும். மனரீதியான காரணமாக இருந்தால், மனநல நிபுணரின் ஆலோசனை தேவைப்படும். தம்பதிக்குள் சண்டை சச்சரவு காரணமாக ஆணுறுப்புக் குறைபாடு வந்திருந்தால், அந்த ஆணுக்கு செக்ஸ் தெரப்பியுடன் சேர்த்து மேரிட்டல் தெரப்பியும் கொடுக்க வேண்டும். சிலருக்கு கவுன்சிலிங்குடன் மருந்து மாத்திரையும் தேவைப்படும்.
உடல்ரீதியான காரணங்களுக்கு சிகிச்சை:
1. வேகுவம் எரெக்ஷன் டிவைஸ் (Vaccum Errection Device) என்கிற நவீன சாதனத்தைப் பயன்படுத்தி விறைப்புத்தன்மைக் குறைப்பாட்டைப் போக்கலாம். ஆணுறுப்பின் கடைசியில் ஒரு ரப்பர் பேண்டால் இறுக்கிவிட்டு, இந்தச் சாதனத்தில் உள்ள காலியான ரப்பர் குழாயை ஆணுறுப்பில் நுழைத்து நுழைத்து எடுக்கும்போது ஆணுறுப்பு விறைப்புத்தன்மை அடையும். இந்த ரப்பர் பேன்டை 20 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. டாக்டரின் ஆலோசனையின் பேரில்தான், இதைப் பயன்படுத்த வேண்டும்.
2. பீனைல் புராஸ்தெடிக் சர்ஜரி (Penile Prosthetic Surgery): அறுவைசிகிச்சை மூலம் ஆணுறுப்பின் இடையில் உள்ள குழாய்களுக்கு இடையில் சிலிக்கான் ராடு ஒன்றை வைத்து மூடிவிடுவார்கள். இந்த அறுவைசிகிசை இரண்டு வகைப்படும்.
அ. மலியபிள் புராஸ்தெஸிஸ் (Malleable Prosthesis)ஆ. இன்ஃப்ளேடபிள் புராஸ்தெஸிஸ் (Inflatable Prosthesis) முதல் வகையைவிட இரண்டாவது வகை அறுவைசிகிச்சைக்கு அதிகம் செலவாகும்.
மனரீதியான காரணங்களுக்கு சிகிச்சை:
பயம், பதற்றம், படபடப்புக் காரணமாக ஆணுறுப்பு குறைபாடு என்றால், சப்போர்ட்டிவ் சைக்கோதெரப்பி கவுன்சிலிங் அளிக்கப்படும். கவுன்சிலிங் என்றால் பல பேர் அது அட்வைஸ் என்று எடுத்துக்கொள்கிறார்கள். உண்மையில் இது நுட்பமானது. நவீன செக்ஸ் சிகிச்சை முறைகளில் தரப்படுகிற பிஹேவியர் தெரப்பிக்குத்தான், செக்ஸ் தெரப்பி என்று பெயர். இந்தச் சிகிச்சைமுறை செக்ஸில் எதிர்மறையான சிந்தனைகொண்டவரை நேர்மறையான சிந்தனைக்குக் கொண்டுவரும். ஆணுறுப்புக் குறைபாடு உள்ளவர்களுக்கு, செக்ஸ் தெரப்பியில் வேறு சில உத்திகளையும் இணைத்து சொல்லித்தருவோம். இந்த உத்திகளை அந்த மனிதர் கையாள ஆரம்பித்தவுடன் தன்னம்பிக்கை உருவாகும்.
இது தவிர, செக்ஸ் செயல்பாடுகளை ஐந்தாறு படிகளாகப் பிரித்துக்கொள்ளச் சொல்லித் தருவோம். இந்தப் கவுன்சிலிங்குக்கு தம்பதியராகத்தான் வரவேண்டும். இதனைப் படிப்பவர்கள் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்... டாக்டரின் கிளினிக்கில் இதற்கான டெமோவோ, பயிற்சியோ கொடுக்க மாட்டோம். அவரவர் வீட்டில்தான் தனி அறையில் நடைமுறைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
- இடைவேளை...

சுய இன்பத்தால் ஆணுறுப்பு எழுச்சி அடைவதில் பாதிப்பு வராது. பாதிப்பு வரும் என்பது போலி மருத்துவர்களால் கிளப்பிவிடப்பட்ட கட்டுக் கதை. அளவுக்கு அதிகமாக சுயஇன்பத்தில் ஈடுபடும் ஆணுக்கு மனப் பதற்றம், பயம், படபடப்பு, குற்ற உணர்ச்சி காரணமாக ஆணுறுப்பு எழுச்சி அடையாமல் போகலாம். இந்த சதவிகிதமும் மிக மிகக் குறைவே.

வெப்பமான சூழ்நிலையில் தொடர்ந்து பணிபுரிவோருக்கு உயிர் அணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படலாமே தவிர, செக்ஸ் நடவடிக்கைப் பாதிக்கப்படாது.

உடல் பருமன் ஹார்மோன் குறைபாட்டைத் தூண்டி, அதன் காரணமாக ஆணுறுப்பில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதுவும் அரிதாக நடக்கக் கூடியதே.

குடி போதை, செக்ஸ் நடவடிக்கையைப் பாதிக்க வாய்ப்பு அதிகம். மதுவை குடித்தவுடன் உடனடியாக காம இச்சையைத் தூண்டும். ஆனால், செக்ஸ் நடவடிக்கைகளை குறைத்துவிடும்.