அழகு ரகசியம் சொல்கிறார் த்ரிஷா

வெற்றிகரமான 13-வது வருடம்... த்ரிஷாவின் திரைச் சேவைக்கு விழாவே எடுக்கலாம். இன்னும் தென்னிந்தியத் திரை உலகில் த்ரிஷாவுக்கான கிரேஸும் சார்மிங்கும் அப்படியே இருக்கிறது. 60 கிலோ அழகியிடம் ரகசியங்கள் பேசலாமா!
''எப்பவுமே இளமையா ஆரோக்கியமா இருக்கணும்னா, அதுக்கு முக்கியமா மனசை சந்தோஷமா வெச்சுக்கணும். 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’னு சொல்வாங்க. நம்ம உடம்புக்கு எது நல்லதுன்னு நமக்கே தெரியும். உடம்புக்கு ஒப்புக்காத உணவைப் பார்த்தால், 'இது நமக்குச் சரிப்படாது’னு, நம்ம உடம்புக்குள் இருந்து ஒரு அலாரம் அடிக்கும். அதை மட்டும் கேட்டு சரியா நடந்துக்கிட்டாப் போதும். உடம்புல எந்தப் பிரச்னையுமே வராது.''

''17 வயதில் 'மிஸ் சென்னை’ பட்டம். எப்படி சாத்தியம் ஆச்சு?''
''சின்ன வயசுல இருந்தே நான் நிறைய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துப்பேன். அதனாலயே எனக்கு இயல்பா அத்லட்டிக் உடல்வாகு. ப்ளஸ் அழகும் இளமையும் சேர்ந்து மிஸ் சென்னை பட்டத்தை எனக்கு வாங்கிக் கொடுத்தது. இதெல்லாம்விட எங்க அம்மாதான் முக்கியக் காரணம். அவங்க எனக்கு ஆரோக்கியத்தோட அவசியத்தைப் பத்திச் சொல்லிச் சொல்லி வளர்த்தாங்க. தினசரி சாப்பிடுற சாப்பாட்டுல அறுசுவைகளும் இருக்கும்படி பார்த்துக்கிட்டாங்க. ஸ்வீட்ஸ்தான் எனக்குப் பிடிக்கும்னா, அதை மட்டுமே தர மாட்டாங்க. ஸ்வீட் சாப்பிடும் அன்னைக்கு என்னைப் பாகற்காயையும் சாப்பிடவைப்பாங்க. எப்பவுமே சாப்பாட்டுல ஒருவித பேலன்ஸ் நிலையைக் கடைப்பிடிப்பாங்க.''
''ஒரு ஹீரோயினா உங்களோட இப்போதைய உணவுக் கட்டுப்பாடு எந்த மாதிரி?''
''ஹீரோயின்னா, இஷ்டத்துக்குச் சாப்பிடக் கூடாதா? யார் அப்படிச் சொன்னா? நான் அப்படி இல்லை. நான் நல்லாச் சாப்பிடுவேன். உலகத்துல இருக்குற விதவிதமான உணவு வகைகளைத் தேடித் தேடிச் சாப்பிடுவேன். ஆப்பிரிக்கா போனாலும் சரி, சீனா போனாலும் சரி, அந்த ஊரில் பிரபலமான சாப்பாடு வகைகளை வெளுத்துக்கட்டாமல் விட மாட்டேன். ஆனால், அவை எல்லாம் என் உடம்புக்கு சரிப்படுமா, ஆரோக்கியத்துக்கு நல்லதானு பார்த்துத்தான் சாப்பிடுவேன். எண்ணெயில் தயாரிச்ச உணவுகளை ஸ்பூனால்கூடத் தொட மாட்டேன். வீட்ல இருந்தேன்னா வழக்கமான தமிழ்நாட்டு உணவுகளையும், வட இந்திய உணவுகளையும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிடுவேன். சத்தான சாப்பாடுன்னா, வெளுத்துக்கட்டுவேன். இவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறதே நல்லாச் சாப்பிட்டு சந்தோஷமா இருக்கத்தானே!''

''அப்படின்னா கன்னாபின்னானு எடை கூடிடுமே?''
''நான் தினமும் நிறைய சாப்பிட்டாத்தானே எடைக் கூடும். ஒருநாள் நிறைய சாப்பிட்டுட்டேன்னா, மறுநாள் சின்னதா டயட் இருப்பேன். அன்னைக்கு முழுக்க சாண்ட்விச், ப்ரெட், கைக்குத்தல் அரிசி இதை மட்டும்தான் சாப்பிடுவேன். அப்புறம் விதவிதமான ஜூஸ், சூப் இதெல்லாம் நிறையக் குடிப்பேன். குறிப்பா அந்தந்த சீஸனில் கிடைக்கிற பழத்தோட ஜூஸ் வகைகளை மிஸ் பண்ணவே மாட்டேன். பொதுவா நான், என் வெயிட்டை செக் பண்ணிக்கிட்டே இருப்பேன். ரெண்டு கிலோ கூடிட்டாலும் உடனே அதைக் குறைக்காமல் விட மாட்டேன்.''
''எடையைக் குறைக்க என்னெல்லாம் செய்வீங்க?''
''சிம்பிள்! இருக்கவே இருக்கு யோகாவும் ஜிம் ஒர்க்அவுட்ஸும். ஒரு நாளைக்கு மேல வீட்ல இருந்தேன்னா, யோகா மாஸ்டரை வரவெச்சு யோகா பயிற்சிகள் பண்ணுவேன். இல்லைன்னா, ஜிம்ல போய் கார்டியோ ஒர்க்அவுட்ஸ், ட்ரெட்மில்னு இருப்பேன். எனக்கு நீச்சல் ரொம்பப் பிடிக்கும். மணிக்கணக்கில் நீச்சல் அடிப்பேன். வெளிநாட்டில் இருந்தேன்னா, அந்த நாட்டுத் தெருக்களில் காலார ரொம்ப தூரம் நடை போடுவேன். இப்படிலாம் பண்ணினேன்னா, ஒரே நாள்ல நான் பழையபடி வந்துடுவேன்.''
''அழகுப் பாதுகாப்புக்கு என்னெல்லாம் செய்வீங்க?''
''சருமம், தலைமுடி இந்த ரெண்டு விஷயங்கள் மீதுதான் எனக்கு அதிக அக்கறை. சருமப் பளபளப்புக்கும் பாதுகாப்புக்கும் நிறையத் தண்ணீர் குடிச்சாலே போதும். ஒருநாளைக்கு இவ்வளவு தண்ணீர் குடிக்கணும்னு முன்கூட்டியே பாட்டில்களில் எடுத்துவெச்சுப்பேன். அந்தத் தண்ணீர் பாட்டில்கள் எப்போதுமே என்கூடத்தான் இருக்கும். அன்னைக்குள்ளே அந்தத் தண்ணீர் மொத்தத்தையும் சீரான இடைவெளியில் குடிச்சுடுவேன். இதனால என் சருமத்துக்கு, ஷூட்டிங்கில் போடுற எல்லாவித கிரீம்களையும் லோஷன்களையும் தாங்கும் சக்தி கிடைச்சுரும். எந்தப் பிரச்னையுமே தராது. அதிகமாகத் தண்ணீர் குடிக்கிறது சருமத்துக்கு மட்டும் இல்லை, நம் மொத்த உடல் நலத்துக்குமே ரொம்ப நல்லது. அதிகமாப் பசிக்காது. எப்போதுமே நம்ம உடம்பு சக்தியோட இருக்கும். இதுபோக ஷூட்டிங் இல்லாத நாட்கள்ல, மேக்அப் போடவே மாட்டேன். ஏதாவது நிகழ்ச்சிகளுக்குப் போனால் மட்டும், காஜல், லிப்ஸ்டிக் இந்த ரெண்டு மட்டும் பயன்படுத்துவேன்.
தலைமுடிப் பாதுகாப்பில் ரொம்பவே அக்கறையா இருப்பேன். படத்துல நீங்க பார்க்கிறது என்னோட இயற்கையான தலைமுடி. விக் வைக்கிறதும் எக்ஸ்ட்ரா எக்ஸ்டென்ஷன்ஸ் கொடுக்கிறதும் பண்ண மாட்டேன். என் தலைமுடி என்னோட பெரிய ப்ளஸ். தலைமுடியில் அயர்னிங், கர்லிங், ஸ்பிரேயிங் இதெல்லாம் செய்யவே மாட்டேன். இதெல்லாம் தலைமுடியை ரொம்பவே பாதிக்கும். ஷூட்டிங்கில் இருக்கும் பவர் லைட் வெளிச்சம், தலை மீது நேரா விழும்போது, அது தலைமுடியோட வேரைப் பாதிச்சுடும். இதனால தலைமுடி உதிரத் தொடங்கும். இதைத் தடுக்க நான், தினமும் ஷூட்டிங் முடிஞ்சு வந்ததும் முதல் வேலையா பார்லர் போய் புரோட்டீன் ட்ரீட்மென்ட் எடுத்துப்பேன். டாக்டர் சொல்ற மைல்ட் வகை ஷாம்புகளை மட்டும்தான் பயன்படுத்துவேன்.''
''உங்களுக்கு ஏதாவது கை வைத்தியம் தெரியுமா?''
''அம்மா எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்காங்க. எனக்கு சட்டுனு சளி பிடிச்சுக்கும். வெளியூர் ஷூட்டிங்கில் இருக்கும்போது, இப்படி சளி பிடிச்சுட்டா, சூடான பாலில் கொஞ்சம் மஞ்சள் பொடியைக் கலந்து குடிப்பேன். பிரச்னை உடனே சரியாகிடும். இப்படி என்கிட்ட எக்கச்சக்கக் கை வைத்திய டெக்னிக்ஸ் இருக்கு. கை வைத்தியம்தானே பெஸ்ட்!''
- உ.அருண்குமார்