Published:Updated:

உறுப்புதானம் செய்யப் போறீங்களா?

உறுப்புதானம் செய்யப் போறீங்களா?

##~##

சென்னையைச் சேர்ந்த குடும்பத் தலைவி ஒருவர் சமீபத்தில் மருத்துவக் காப்பீடு கேட்டுத் தனியார் காப்பீட்டு நிறுவனம் ஒன்றுக்கு விண்ணப்பித்திருந்தார். அவர் வயிற்றில் ஒரு தழும்பு இருந்தது. எதனால் இந்தத் தழும்பு என்று காப்பீட்டு நிறுவனத்தில் கேள்வி எழுப்பினர். தன் கணவருக்குக் கல்லீரல் தானம் செய்ததால் ஏற்பட்ட தழும்பு அது என்று தெரிவித்துள்ளார். கல்லீரல் என்பது வெட்டினாலும் வளரும் உறுப்பு என்பதால் பிரச்னை ஏதும் இல்லை என்று டாக்டரும் சான்றிதழ் அளித்திருந்தார். ஆனால், என்னதான் காரணங்கள் கூறினாலும் அவற்றை ஏற்க முடியாது என்று கூறி, அவரது விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது காப்பீட்டு நிறுவனம்.

பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக உடல் உறுப்புகளை விற்பதற்குக்கூட சிலர் தயாராக இருக்கிறார்கள். இதை வாங்கி மற்றவர்களுக்கு விற்றுக் காசு பார்க்கும் செய்திகளை எல்லாம் நாம்  படித்துக்கொண்டுதான் வருகிறோம். இன்னும் சிலர் நல்லெண்ணத்தின் அடிப்படையில் நெருங்கிய உறவினர்களுக்குள்ளாக உறுப்புகளைத் தானம் செய்கிறார்கள் (நாம் உயிரோடு இருக்கும்போது சிறுநீரகம் மற்றும் கல்லீரலை மட்டும்தான் தானம் செய்ய முடியும்). இதில் ஒன்றும் தவறில்லை. இத்தனைக்கும் உறுப்பு தானம் செய்த நபர் மிகவும் ஆரோக்கியமாக இருந்தாலும்கூட காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவக் காப்பீடு வழங்க மறுத்துவருகின்றன. இதுகுறித்து 'ஹெல்த் இன்ஷூரன்ஸ்' நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.

உறுப்புதானம் செய்யப் போறீங்களா?

'ஏற்கெனவே எங்களது 'க்ளெய்ம்’ விகிதம் மிக அதிகமாக இருக்கிறது. அதாவது நாங்கள் வாங்கும் ப்ரீமியத்தைவிட க்ளெய்முக்காகக் கொடுக்கும் தொகை அதிகம். இந்த விகிதம் சுமார் 125% மேல் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு பாலிசி கொடுக்கும்போது அவர்கள் க்ளெய்ம் பெறும் சூழ்நிலை வருவதற்கான அத்தனை சாத்தியங்களும் இருக்கிறது. அவர்கள் இப்போது நன்றாக இருக்கலாம் என்பது வேறு விஷயம். ஆனால், இரண்டு சிறுநீரகம் இருக்கும் இடத்தில் ஒரு சிறுநீரகம் மட்டும் வேலை செய்யும்போது, இன்று இல்லாவிட்டாலும் நாளை, நாளை மறுநாள் க்ளெய்ம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். தெரிந்தே ஒரு ரிஸ்க் எடுக்க முடியாது’ என்று முடித்துக்கொண்டார்.

உறுப்பு தானம் செய்வது இன்னொரு உயிரைக் காப்பாற்றும் என்றாலும், இப்படி ஒரு ரிஸ்க் இருக்கிறது என்று தெரிந்துகொள்வது அவசியம்.

- வா.கார்த்திகேயன்

பாலிசி கிடைக்கும்

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஜி.ஸ்ரீனிவாசன் இதுகுறித்துக் கூறுகையில், 'ஒருவர் தன் உடல் உறுப்பைத் தானமாக வழங்குகிறார் என்றால், அது டாக்டர்களால் பாதுகாப்பானதுதான் என்று உறுதியளிக்கப்படுகிறது. எனவே அவர்களுக்குப் பாலிசி வழங்குவதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை’ என்றார்.