மற்ற எபிசோடுகள்
Published:Updated:

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!
##~##

''தூதுயிலை கிடைக்கவே நாம தூது போகணும்... அப்படியரு மகத்துவம் அதுல இருக்கு. கத்தரிச் செடி வகையைச் சேர்ந்த கொடிதான் தூதுயிலை. இலையைப் பாத்தாலே... பச்சைப்பசேல்னு கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கும்.'' 

''அடியே அம்மணி... தூது எல்லாம் போவேனாம். காதத் தூரத்துல இருக்குற வயக்காட்டுலேயே தூதுயிலை வேலியில படர்ந்துகெடக்கு. இது தெரியாதா ஒனக்கு..?''

''அப்புடியா சங்கதி? தூதுயிலைக்காக நான் அலையாத எடம் இல்ல. இன்னிக்கு மாத்திரை மருந்துக்குக் கட்டுப்படாத நோயெல்லாம், மூலிகைக்குத்தான் கட்டுப்படுது. தூளிக்குள்ளத் தூங்குற குழந்தைகூட தூதுயிலையைப் பத்தி தெரிஞ்சுக்கணும்... சரி நீ கௌம்பு... வயக்காட்டுக்கே போயி தூதுயிலைச் செடியைப் பார்த்திருவோம்....'' - நடந்தபடியே வயக்காட்டுப் பக்கம் படர்ந்த வேலியின் மீது, இருவரின் கண்களும் மேய...

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

''ஆமான்டீ, நீ சொன்னது சரியாத்தான் இருக்கு. இந்தப் பாதையிலதான் தெனமும் நடக்கிறேன்... இது எப்படி என் கண்ணுக்கு ஆப்படாமப் போச்சு?'' - அம்மணி

'' 'சமத்தாப் பொறந்தவளுக்கு சதுரமெல்லாம் கண்ணு’னு சொல்வாங்க. நீ சமத்தா இருந்திருந்தா இந்நேரம் சுத்துப்பட்டு ஏரியாவுக்கே வைத்தியராகி இருக்கலாமே...''

''உண்மைதான்டி வாசம்பா... அந்தக் காலத்துல எட்டு ஊரு சனங்க நோயின்னு படுத்தது இல்ல. அதுக்கு முக்கியக் காரணம் இந்த தூதுயிலைதான். தூதுயிலைப் பறிச்சிட்டு வந்து நல்லா சுத்தம் செஞ்சு, அதுகூட சின்ன வெங்காயம், பூண்டு காய்ஞ்ச மிளகா வத்தலு, புளி, உப்பு சேர்த்துத் துவையலா செஞ்சு, சுடு சாதத்துல போட்டுச் சாப்பிட்டு வந்தாலே போதும். உடம்புக்கு அப்படியரு வலுவைத் தந்திடும்.''

'' 'வம்புக்குப் போனாலும் தெம்பாத்தான் போகணும்’னு சொல்வாங்களே... அதுக்கு தூதுயிலை சரியானதுதான் ஆத்தா!''

''அதே நேரம் தூதுயிலையில ஒரு சிக்கலும் இருக்கு. தூதுயிலை உடம்புக்கு உஷ்ணத்தைக் கொடுத்திடும். சூட்டு உடம்புக்காரங்க அதிகமாச் சாப்பிடக்கூடாது. ஆனாலும், சளி, இருமல்னா அதுக்குத் தூதுயிலைதான் கண்கண்ட மருந்து. போன வாரம், காளியோட மகன் ராமசாமிக்கு நெஞ்சுல கபம் கட்டி, மூச்சுவிட முடியாமத் தெணற, பயந்துபோன அவன் பொண்டாட்டி, ஊரையே கூட்டிட்டா... தூதுயிலைப் பொடியைச் செஞ்சு வெச்சிக்கிட்டாப் போதும். எந்த நோயி வந்தாலும், நொடியில குணமாக்கிடலாம். இலையை நல்லா ஆய்ஞ்சிட்டு, நிழல்ல உலர்த்திக்கணும். உலக்கையில போட்டு நல்லாப் பொடிச்சுக்கணும். தெனமும் ரெண்டு வேளை தேன்ல கலந்து சாப்பிடணும். அதிகமா சளி கட்டியிருந்தா, ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிடணும். கபம், வறட்டு இருமல், சளித் தொல்லை எல்லாமே இதில ஓடிரும். ஒடம்புக்கும் நல்ல எதிர்ப்பு சக்தி கிடைக்கும். ஞாபக சக்தியும் அதிகமாகும்.''

''4 இல்லேனா 5 மிளகை, நல்லா சுத்தம் செஞ்ச தூதுயிலைக்குள்ள வெச்சு, வெத்தலைபோல் மடிச்சு வாயில் போட்டு மென்னுட்டு வந்தா, இரண்டே நாளில் மார்புச் சளி போயிரும்னு சொல்வாங்களே... அது உண்மைதானாடி?''

''நூத்துக்கு நூறு உண்மை. பரவாயில்லையே... என்கூட சேர்ந்து உனக்கும் வைத்தியம் பழகிருச்சே...''

''அம்மணி, 'பங்கித் தின்னா பசியாறும்’னு சொல்ற மாதிரி, எல்லா இலையையும் பிடுங்கி, பொடியாக்கி, ஊரு ஜனங்களுக்குக் குடுத்திருவோம். இந்த ஊர்ல சளி, தும்மல், இருமலைத் தூர விரட்டிடலாம்.''

''இன்னிக்கு கலர் கலரா டூத் பேஸ்ட்டுங்க வந்தும், பிஞ்சுப் பிள்ளைங்களுக்கு பல்லு கோணல் கோணலா இருக்கு. வாயைத் திறந்தா நாறுது. என் முப்பாட்டன் காலத்துல, தூதுயிலைப் பொடி செஞ்சு வெச்சிருப்பாங்க. அதுலதான் பல்லே வெளக்குவோம். என் பல்லைப் பாரு... எப்படி பளிச்சுன்னு இருக்குல்ல...'' - அம்மணி பல்லைக் காட்ட,

''அடி... ஆத்தி.... வெத்தலப் போட்டு, பல்லை மஞ்சளாக்கிட்டு, வெள்ளை பல்லைப் பத்தி பேசுறியே...''

''வாசமான வெத்தலைக்கு இந்த வாயே அடிமைடீ... உன்னோட சம்பந்தம் போட்டப்ப இந்த வெத்தலதான்டி சாட்சியா இருந்துச்சு.''

சிரிப்பும் கலகலப்புமாகத் தொடங்கியது வெற்றிலைப் புராணம்.

- பாட்டிகள் பேசுவார்கள்...