Published:Updated:

யாருக்கும் வரலாம் குடல் இறக்கம்!

யாருக்கும் வரலாம் குடல் இறக்கம்!

##~##

லூன்போல் வயிற்றுப் பகுதி வீங்கி, நிற்கவும் முடியாமல், நடக்கவும் முடியாமல் அல்லாடும் சிலரைப் பார்த்து இருப்பீர்கள். குடல் இறக்கம் என்கிற ஹெர்னியா பிரச்னை கொடுக்கும் அவஸ்தை அது. ஹெர்னியா பிரச்னை குறித்தும் அதற்கான சிகிச்சைகள் குறித்தும் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் தீபக் சுப்பிரமணியன் மற்றும் தஞ்சையைச் சேர்ந்த மூத்த அறுவைசிகிச்சை மருத்துவர் ஜி.ரவி இருவரும் தரும் விளக்கம். 

ஹெர்னியா என்றால் என்ன?

அடிவயிற்றுப் பகுதியில் தசை அமைப்பில் பலவீனம் ஏற்பட்டு, அதன் வழியாகக் குடல் வெளியே வரும் சூழலே குடல் இறக்கம் என்கிற ஹெர்னியா.

ஹெர்னியாவில் எத்தனை வகைகள்?

யாருக்கும் வரலாம் குடல் இறக்கம்!

பல வகைகள் இருந்தாலும், பொதுவாகக் காணப்படுவது மூன்று வகைகள் மட்டுமே. நம் உடலில் தொப்புள் உள்பட பல பலவீனமான பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் ஹெர்னியா ஏற்படலாம். ஆண்களுக்கு விரைப்பைக்கு ரத்தக் குழாய் செல்லும் பாதையில் பலவீனம் ஏற்பட்டு அதன் வழியாகக் குடல் வெளியே வரலாம். இதை இங்யூனல் (Inguinal) ஹெர்னியா என்பார்கள். பெண்களுக்குத் தொப்புளில் பலகீனம் ஏற்படுவதை அம்ப்ளிக்கல் (Umbilical)  ஹெர்னியா என்போம். வயிற்றில் அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்களுக்குத் தையல் போட்ட இடத்தில் பலவீனம் ஏற்பட்டு, அதன் வழியே ஹெர்னியா ஏற்படலாம். இதற்கு இன்சிஷனல் ஹெர்னியா’ (Incisional hernia) என்று பெயர்.

ஹெர்னியா ஏற்படுவதற்கு என்ன காரணம்?

குறிப்பிட்டுச் சொல்லும்படி பொதுவாக எந்த ஒரு காரணமும் இல்லை. அதிகம் எடைகொண்ட பொருளைத் தூக்குவது, காலைக்கடன் முடிக்க சிரமப்பட்டு வயிற்றில் அழுத்தம் கொடுப்பதால் ஹெர்னியா ஏற்படலாம். பிறவியிலேயேகூட இந்தப் பிரச்னை இருந்து, வளர்ந்த பிறகு வெளிப்படலாம். தொடர் இருமல், குடல் செயல்பாட்டில் பிரச்னை, கூடுதல் உடல் எடை, ஊட்டச்சத்துக் குறைவு, புகைப்பழக்கம், கடினமான உடல் உழைப்பு போன்ற காரணங்களால், வயிற்றில் அழுத்தம் அதிகரித்து வயிற்றுத் தசைகள் வலுவிழந்து ஹெர்னியா ஏற்படலாம்.

எப்படிக் கண்டறிவது?

இருமல், முக்குதல் போன்ற நிகழ்வுகளின்போது வலுவிழந்த தசைப் பகுதியில் சிறிய வீக்கம்

யாருக்கும் வரலாம் குடல் இறக்கம்!

ஏற்படலாம். அந்தப் பகுதியில் அதிக வலி இருக்கும். இவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. சில நேரங்களில் இப்படி வெளிப்படும் குடல் வெளியே மாட்டிக்கொண்டு ஜீரணப் பாதிப்பு ஏற்பட்டு வாந்தி, காலைக் கடன் முடிக்க முடியாத நிலை போன்றவை ஏற்படலாம்.

ஹெர்னியாவுக்கு என்ன தீர்வு?

அறுவைசிகிச்சை மட்டுமே இதற்கு தீர்வு. ஓப்பன் முறை, சிறிய துளைகள் இட்டுச் செய்யப்படும் லேப்பராஸ்கோப்பி என இரண்டு முறைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். வயிற்றில் வலுவிழந்த தசைப் பகுதியில் வலை வைத்துத் தைக்கப்படும். முன்பு மிகத் தடிமனான வலைகள் வைக்கப் பட்டன. இதனால் வயிற்றுக்குள் வலை இருப்பதுபோன்ற உணர்வும் வலியும் நோயாளிகளுக்கு இருந்தது. இந்தக் குறையைப் போக்க தற்போது மெல்லிய, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கரைந்துவிடக் கூடிய வலைகள் வந்துவிட்டன. வலை பொருத்திய உணர்வே நோயாளிகளுக்கு இருக்காது. ஓப்பன் மற்றும் லேப்பராஸ்கோப்பி என இரு முறைகளிலும் இந்த வலைகளைப் பயன்படுத்த முடியும். லேப்பராஸ்கோப்பி முறையில் வலியும் குறைவு, தழும்பும் குறைவு. அடுத்த நாளே டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்றுவிடலாம். அதன் பிறகு இரண்டு நாட்களிலேயே வேலைக்குச் செல்லலாம்.

அறுவைசிகிச்சைக்குப் பின் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

அறுவைசிகிச்சை முடிந்து ஒரு மாதம் வரை அதிக எடை தூக்கவோ, தரையில் உட்காரவோ கூடாது. இருமல், காலைக் கடன்களைக் கழிப்பதில் (முக்குவது போன்ற) சிரமம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அலட்சியம் காட்டினால், மீண்டும் ஹெர்னியா (ரெக்கரன்ட் ஹெர்னியா) வருவதற்கு வாய்ப்பு உண்டு.

ஹெர்னியாவைத் தடுக்க முடியுமா?

தடுப்பு நடவடிக்கை என்று எதுவும் இல்லை. அதிக எடை கொண்ட பொருளைத் தூக்குதல் உள்ளிட்ட மேலே சொன்ன விஷயங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்களும் டாக்டரின் அறிவுரைப்படி நடப்பதன் மூலம், மீண்டும் இதுபோன்ற பிரச்னை வராமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

பா.பிரவீன்குமார், உ.அருண்குமார்

படம்: கே.குணசீலன்