Published:Updated:

முன்னோடிகள்

முன்னோடிகள்

முன்னோடிகள்
##~##

''டாக்டர்! எனக்கு நெஞ்சு வலிக்குது'' என்று கூறும் நோயாளியை ஓர் இடத்தில் படுக்கவைத்து அவரது மார்பில் காதைவைத்து இதயத் துடிப்பை ஒரு மருத்துவர் பரிசோதித்தால், அந்த நோயாளிக்கு எவ்வளவு அசௌகரியமாக இருக்கும்? அந்த மாதிரியான ஓர் சூழ்நிலையை நோயாளிகள் எப்படி எதிர்கொள்வர்? இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைதான் 1816-ம் ஆண்டு வரை நிலவி வந்தது. கூச்சத்தால் நெளிந்த நோயாளிகளுக்கும், இதயத் துடிப்பை சரிவரக் கேட்க முடியாது தவித்த மருத்துவர்களுக்கும் வரப்பிரசாதமாக ஒரு கருவியை வடிவமைத்தவர்தான் ரானே தியோஃபிலி ஹயாசிந்த் லேன்னெக். 

பிரான்ஸ் மருத்துவரான இவர் 1781-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ம் தேதி பிறந்தார். 1804-ம் ஆண்டு மருத்துவ மாணவனாக இருந்த காலத்திலேயே 'மெலனோமா’ எனும் நோயைப்பற்றிய முதல் விளக்கவுரை நிகழ்த்தினார் லேன்னெக். அந்த விரிவுரை 1805-ம் ஆண்டு மருத்துவ இதழ்களில் வெளியானது. 1816-ம் ஆண்டு பிரசித்தி பெற்ற ஸ்டெத்தாஸ்கோப்பைக் கண்டுபிடித்த லேன்னெக், அந்தக் கண்டுபிடிப்பைக் கீழ்க்கண்டவாறு வர்ணிக்கிறார்.

முன்னோடிகள்

'இதய நோயுற்ற இளம் பெண் என்னிடத்தில் ஆலோசனைக்காக வந்தார். இளம்பெண்ணாக இருந்ததால் அவரது நெஞ்சில், நேரடியாகக் காதை வைத்துக் கேட்பது சரியாக இருக்குமா என்று யோசித்தேன். உடனடியாக ஒரு காகிதத்தை எடுத்து உருளைபோல் சுருட்டி ஒரு முனையை நோயாளியின் நெஞ்சில் வைத்து மறுமுனையில் காதை வைத்துக் கேட்டேன். நேரடியாகக் கேட்பதைவிட இம்முறையில் இதயத் துடிப்பு துல்லியமாக இருந்தது.'' இப்படித்தான் ஸ்டெத்தாஸ்கோப் பிறந்தது! ஸ்டெத்தாஸ் (STHETHOS) என்றால் கிரேக்க மொழியில் நெஞ்சுப் பகுதி. ஸ்கோப் (SCOPE) என்றால், பிரெஞ்சு மொழியில் பார்ப்பதற்கான கருவி. இந்த இரண்டு வார்த்தைகளையும் ஒன்றிணைத்து ஸ்டெத்தாஸ்கோப் எனப் பெயர் வைத்தார்.

ஸ்டெத்தாஸ்கோப்பைக்கொண்டு லேன்னெக், நெஞ்சுப் பகுதியில் கேட்ட சத்தங்களை ரால்ஸ், ராங்கை, கிரிப்பிடேஷன்  என்று வரையறுத்தார். 1823-ம் ஆண்டு மருத்துவப் பேராசிரியராக நியமிக்கப்பட்ட லேன்னெக், கல்லீரல் சுருங்கிப்போகும் நோயை 'சிரோசிஸ்’ என்று பெயரிட்டார். அது இன்றளவும் 'லேன்னெக் சிரோசிஸ்’ (LAENNEC CIRRHOSIS) என்றுதான் அழைக்கப்படுகிறது.

இதயத்துடிப்பைக் காது வைத்துக் கேட்ட நிலையை மாற்றிய லேன்னெக்,  காசநோய் பற்றியும், குடல் சவ்வு பற்றியும் ஆராய்ச்சிகள் பல செய்தார். காச நோயால் தாயைப் பறிகொடுத்து, காச நோய் பற்றிய ஆராய்ச்சி செய்த லேன்னெக்கையும் காச நோய் தாக்கியது. லேக்னெக் கண்டுபிடித்த ஸ்டெத்தாஸ்கோப்பைப் பயன்படுத்தி அவரது அண்ணன் மகன்தான், லேன்னெக்குக்கு காச நோய் பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்தார்.

ஆஸ்துமா நோயாளிகள் வெளிக்கொணரும் சளி (LAENNEC PEARLS) என்றும், கருவுற்ற காலத்தில் ரத்தம் உறையும் நோய் (LAENNEC’S THROMBUS)  என்று அழைக்கப்படுவதும், பிரான்ஸில் ஒரு மருத்துவக் கல்லூரி இவர் பெயரில் அழைக்கப்படுவதும் லேன்னெக் பெற்ற கௌரவம்.

காச நோயால் பாதிக்கப்பட்ட லேன்னெக் 1826-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி இயற்கை எய்தினார். சாகும் தறுவாயில் தனக்கு ஏற்பட்ட நோயைக் கண்டுபிடித்த அண்ணன் மகனை அழைத்துத் தனது ஸ்டெத்தாஸ்கோப்பை அவரது கையில் கொடுத்து லேன்னெக் குறிப்பிட்டது, 'இதுதான் நான் உனக்காக விட்டுச் செல்லும் உயில்!’

உனக்கு என்றது உலகத்துக்கே!

- திரும்பிப் பார்ப்போம்...

 ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்!

ஸ்டெத்தாஸ்கோப் கருவியின் மூலம் 'நேரடியாகக் கேட்டல்’ முறையைப் பின்பற்றிய மருத்துவர்களுக்கு 'மறைமுகமாகக் கேட்டல்’ முறையை அறிமுகப்படுத்தினார் லேன்னெக். 'இந்தக் கருவி பாரிஸ் நகரில் மிகப் பிரபலமான ஃபேஷனாக உருவெடுத்து உள்ளது!’ என்று 1824-ம் ஆண்டு வர்ணித்து எழுதியது ஒரு மருத்துவ இதழ். இந்த நிலையிலும் காதால் நேரடியாகக் கேட்பதே சிறந்தது என்று அமெரிக்க இதயக் கூட்டமைப்பை நிறுவிய 'கான்னர்’ உள்படப் பிரபல மருத்துவர்கள் ஸ்டெத்தாஸ்கோப்பை எதிர்த்தது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்!