மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இப்படிக்கு வயிறு! - 28

இப்படிக்கு வயிறு! - 28

இப்படிக்கு வயிறு! - 28
##~##

சிறுநீரகத்தைச் சென்று அடைந்த நோய்க் கிருமிகள் அங்கேயும் அழற்சியை உண்டு பண்ணி அங்கேயே தங்கிவிடும் வாய்ப்பு அதிகம். இந்த மாதிரி சிறுநீரகத்தில் நோய்க் கிருமிகள் உடையவர்களையே 'நோய்க் கிருமிகளைப் பரப்புபவர்கள்’ என்று குறிப்பிடுகிறார்கள். 

இப்படிப்பட்டவர்கள் ஐஸ்கிரீம் தயாரிக்கும் இடங்கள், ஓட்டல்கள், உணவு தயாரிக்கும் நிறுவனங்களில் பணியாற்றும்போது நோய்க் கிருமிகள் பரவும் வாய்ப்பு அதிகம்.

நோய்க்கிருமிகள் மண்ணீரலில் சேர்ந்து அதிலும் அழற்சியை உண்டுபண்ணி அதை வீங்கச் செய்கின்றன. அதனாலேயே மருத்துவர்கள் நோயாளியின் வயிற்றைப் பரிசோதிக்கும் போது மண்ணீரல் வீங்கி இருக்கிறதா என்று பரிசோதித்துப் பார்க்கிறார்கள். மண்ணீரலைப் போலவே கல்லீரலும் வீங்கிக்கொள்ளும் வாய்ப்பு உண்டு.

இப்படிக்கு வயிறு! - 28

சில சமயங்களில் பித்தப்பையில் அழற்சி அதிகமாகிவிட்டால், நோயாளி வேறு தொந்தரவுகளுக்காக மருத்துவமனைக்கு வரவேண்டியதாகிவிடும். நோய்க் கிருமிகள் நோயாளியின் உடம்பில் பெருகும்போது, உடம்பின் நோய் எதிர்ப்புச் சக்தி தன் வேலையைத் தொடங்கிவிடுகிறது. இந்த வேலை ஒரு ராணுவத்தின் நுணுக்கத்தைப்போல் நடக்கிறது. நோய் எதிர்ப்புச் செல்கள் உடம்பில் சேர்ந்துள்ள பாக்டீரியாக்களைப் பற்றி முதலில் தெரிந்துகொள்கின்றன. அப்படித் தெரிந்துகொண்ட விவரங்களை வைத்து பாக்டீரியாவுக்குப் பொருத்தமான நோய் எதிர்ப்புப் புரதத்தைத் தயாரிக்கின்றன.

இந்தப் புரதத்தை ஆங்கிலத்தில் ஆன்ட்டிபாடி என்று கூறுவார்கள்.

டைஃபாய்டு காய்ச்சலை உண்டுபண்ணும் நோய்க் கிருமிகளை எதிர்க்கும் புரதத்தை அதாவது எதிர்ப்பொருளைத் தயாரிக்கக் குறைந்தது இரண்டு வாரங்களாவது வேண்டும். மூன்றாவது வாரத்தில்தான் நோயை எதிர்க்கும் புரதம் ரத்தத்தில் சேரத் தொடங்குகிறது. அப்போது உடம்பில் உள்ள டைஃபாய்டு நோய்க் கிருமிகள் அழியத் தொடங்குகின்றன. அப்போதில் இருந்து நோயின் தீவிரம் குறையத் தொடங்குகிறது. நோயாளியின் பல தொந்தரவுகள் மறையத் தொடங்குகின்றன. இந்த டைஃபாய்டு நோய்க் கிருமிகளை எதிர்க்க ரத்தத்தில் அதிக அளவு நோய் எதிர்ப்புப் புரதம் சேர்ந்தால், நோயாளி இந்த வியாதியில் இருந்து சீக்கிரம் விடுபடலாம்.

நமக்குக் காய்ச்சல் வருகிறபோது உரிய பரிசோதனை செய்து, வந்திருப்பது என்ன வகையான காய்ச்சல் என்பதைத் தெரிந்துகொள்வதே முக்கியம். உரிய மருந்துகளைச் சாப்பிடுவதுடன், போதிய அளவு நீராகாரம், பால், கஞ்சி, பழச்சாறு, இளநீர், குளுகோஸ், முட்டை இவற்றைச் சாப்பிடலாம். காய்ச்சலின் வேகத்தால் உடம்பில் இருந்து வியர்வை மூலம் அதிக நீர் இழப்பு இருக்கும். ஆதலால், நோயாளிக்கு அடிக்கடி தாகம் உண்டாகும்.

நாக்கு உலர்ந்து போகாத அளவுக்கும், சிறுநீர் தாராளமாக வெளிப்படும் அளவுக்கும் நீர் ஆகாரத்தை அடுத்தடுத்துக் கொடுக்க வேண்டும்.

சாப்பாட்டில் கட்டுப்பாடு அவசியம். நோயாளியின் குடலில் உள்ள புண் குணமடையக் குறைந்தது 15 நாட்கள் பிடிக்கும். எனவே சத்துமிகுந்த நீர் உணவு வகைகளாகக் கொடுக்க வேண்டும். மிளகாய், புளி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். ஈ மொய்த்த உணவு வகைகளை அறவே தவிர்க்க வேண்டும். உணவைத் தொடுவதற்கு முன்னால் கைகளை சுத்தம் செய்துகொள்வது அவசியம். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், எத்தகைய காய்ச்சல் வரும்போதும் முதலில் பாதிக்கப்படுவது வயிறாகிய நான்தான். அத்தகைய நேரத்தில் உணவில் உரிய பாதுகாப்புடன் இருப்பதுதான் வியாதியின் பாதிப்பை உடனே குறைக்கும்.

காய்ச்சலை வரும் முன் தடுத்திட டைஃபாய்டு தடுப்பு ஊசியும், தடுப்பு குழல் மாத்திரையும் உள்ளன. தடுப்பு ஊசி இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வியாதி வராமல் தடுக்கும் திறன்கொண்டது. குழல் மாத்திரை ஒரு வருடத்திற்கு வியாதி வராமல் தடுக்கும் திறன் கொண்டது.

'நோயாளி வருவார் பின்னே, நோயின் அறிகுறி வந்திடும் முன்னே’ என்று சொல்லவைக்கும் கொஞ்சம் விஷமத்தனமான நோய் காச நோய். 'லொக், லொக்’ சத்தம் கொடுத்துக்கொண்டே நோயாளியை உருக்கி எடுத்துவிடும் வியாதி இது. ஆனாலும், சில வகைக் காச நோய், அமைதியாய் இருந்துகொண்டு, அப்போதும் இந்த 'உயிரை எடுக்கும்’ வேலையை மட்டும் விடாமல் செய்யும்.

வயிறாகிய என்னைத் தாக்கும் காச நோயின் தீவிரம் குறித்து அடுத்த இதழில் சொல்கிறேன்.

மெல்வேன்... சொல்வேன்...