செய்தித் துளிகள்

'இனிமேல் யாரும் பிறந்த நாள் விழாக்களில், கேக்கின் மீது இருக்கும் மெழுகுவர்த்திகளை ஊதி அணைத்து கொண்டாடக் கூடாது’ என ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டு உள்ளது. 'கேக் மீது இருக்கும் மெழுகுவர்த்திகளை ஊதி அணைக்கும்போது, ஊதுபவரின் வாயில் இருக்கும் கிருமிகள் கேக்கின் மீது பரவுகிறது. எச்சில் வேறு தெறித்து வியாதிகள் பரவுகின்றன’ என்ற ஆஸ்திரேலிய தேசிய சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட ஓர் அறிக்கையைத் தொடர்ந்து, இந்த உத்தரவை பிறப்பித்து இருக்கிறது ஆஸ்திரேலிய அரசு.


டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்தி, நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்தது சித்த மருத்துவம். ஆனால், சித்த மருத்துவக் கல்லூரி பயிற்சி டாக்டர்கள் 24 பேர் டெங்கு காய்ச்சலில் அவதிப்பட்டுவருவது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி மற்றும் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததாலும், சுகாதாரக் கேடு நிலவுவதாலும் டெங்குக் காய்ச்சல் பரவியதாகக் கூறப்படுகிறது. கல்லூரிக்குத் திடீர் விசிட் அடித்த நெல்லை கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளாராம்.
வைத்தியருக்கே வைத்தியம்!

அழகுக்காக, உடலெங்கும் வண்ண வண்ணமாக டாட்டூ போடுவது இன்று பேஷனாகிவிட்டது. ஆனால், உடலில் மச்சம் இருந்தால், அதன் மீது டாட்டூ குத்திக்கொள்பவர்களுக்குக் கேன்சர் வரும் என்று எச்சரிக்கை விடுக்கிறார் புற்றுநோய் மருத்துவர் அமித் குமார். ''டாட்டூ போடுவதால், மச்சத்தின் ஓரத்தில் நிறம், அளவு, வடிவமைப்பு, தன்மை எல்லாமே மாறத் தொடங்கும். ரசாயனம் மச்சத்தின் மீது பட்டு, அதனைச் சுற்றிலும் செதில் செதிலாகத் தோன்ற ஆரம்பிக்கும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், கட்டியாக மாறும்; புற்றுநோயாக மாறவும் கூடும்'' என்கிறார்.
இனி, டாட்டூக்கு டாட்டா!


புரோக்கோலியில் சுண்ணாம்புச் சத்து அதிகம் இருக்கிறது. குழந்தைகளின் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு இது மிகவும் நல்லது. ரத்தம் உறைவதற்குத் தேவையான வைட்டமின் ஏ மற்றும் கே இதில் உள்ளது. கண்களின் ஆரோக்கியத்துக்கு புரோக்கோலி மிகவும் நல்லது. இயற்கையாகவே கண்களில் இருக்கும் லுட்டைன் மற்றும் ஜியாசான்தின் ஆகியன புரோக்கோலியில் அதிகம் இருக்கின்றன. இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவர இளமையான தோற்றமும் கிடைக்கும். ஆரஞ்சில் இருப்பதைவிட வைட்டமின் சி இதில் அதிகம்.

பிரேக்ஃபாஸ்ட்டுக்கு புரோக்கோலி!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் மனிதனுக்கு முதுமைத்தோற்றம் ஏற்படக் காரணமான எஸ்ஐஆர்டி3 என்ற ஜீனைக் கண்டறிந்து உள்ளனர். இதன் மூலம் எதிர்காலத்தில் வயதாவதால் வரும் நோய்க்குத் தகுந்தபடி சிகிச்சை அளிக்க முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இது தொடர்பாக வயதான எலியின் ரத்தக் குழாய் அமைப்பின் எஸ்ஐஆர்டி 3 அளவை அதிகரித்தனர். அது அந்த ரத்தக் குழாய்க்கு இளமைப் பொலிவை அளித்ததுடன், ரத்த அணுக்களின் உற்பத்தியையும் அதிகரித்து உள்ளதாம். நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான ஆராய்ச்சியில் இது ஒரு மைல் கல்.
இளமை இனிமை... விரைவில்!