மற்ற எபிசோடுகள்
Published:Updated:

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!
##~##

பிரிஞ்ச தம்பதியை சேர்த்துவெக்கிற மகிமை வெத்தலைக்கு உண்டு வாசம்பா. அந்தக் காலத்துல வெத்தலையை மடிச்சுத் தந்தே, புருஷனைக் கைக்குள்ள போட்டுக்குவாக. அப்படியரு வசியம்... வெத்தலைக்கு இருக்கு. 

''ஆமா அம்மணி... வெத்தலை போட்டு நாக்கு செவந்தா, கட்டின புருஷன் எப்பவும் ஆசையா இருப்பான்னு ஒரு வசனமே இருக்கே. வெத்தலையைப் பக்குவமா மடிச்சுத் தர்றதுல இருக்கு மகிமை. அந்தப் பக்குவம்தான், நாக்கைச் செவப்பாக்குது. புருஷன் பொஞ்சாதி மனசுவிட்டுப் பேசறதும் அந்த நேரத்துலதான். அதனாலதான் தம்பதிக ஒத்துமையா இருந்தாக. இன்னைக்கு என்னடான்னா, 'அப்பாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டுல சாப்பாடு, கொட்டுமேளம் கோவிலிலே, வெத்தலை பாக்குக் கடையிலே, சுண்ணாம்பு வாங்கிக்கோ சூளையிலே’ன்னு இன்னிக்கு, சபையில தாம்பூலப் பைகூட தராம, காதும் காதும் வெச்ச மாதிரி கல்யாணத்தை முடிச்சிடறாகளே அம்மணி.''

''வாங்கற சம்பளம் வாய்க்கும் கைக்கும் பத்தல... விக்கிற வெலைவாசியில, வெத்தலை வெலையும் ஏறிப் போச்சுடி வாசம்பா. அதுனாலத்தான் வெத்தலைக்குப் பதிலா இப்போ கடைகண்ணியில எல்லாம் பீடா குடுக்குறாகளாம். ஆனாலும் வெத்தலைக்கு ஈடாகுமா? 'ஓடை மரத்துல ஓநாயி ஏறலாம், பனை மரத்துல பன்னி ஏற முடியுமா’னு எங்க அம்மாச்சி கேக்கும்.''

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

''சரியாச் சொன்னே... அம்மணி. இன்னிக்கு வெத்தலை போடற தம்பதிகளை விரல் விட்டு எண்ணிரலாம். எங்க ஆத்தா வெத்தலை மடிக்கிறதையும், தாத்தா மெல்லுறதையும் பாத்திருக்கேன். வெத்தலையை நல்லாக் கழுவிட்டு, துடைச்சு, நடு நரம்பைக் கிள்ளி எறிஞ்சிட்டு, சுண்ணாம்பு தடவி, பாக்கு, சீவல் சேர்த்து அழகா மடிச்சுக் கொடுக்கும். அவரும் வாங்கி வாய் இடுக்குல அடைச்சுப்பாரு. அவர் பாடினா, எட்டு ஊருக்குக் கேட்கும்.''

''இருக்காதா பின்னே, வெத்தலை போடறதால, குரல்கூட எட்டுக்கட்டைக்குப் போகுமே வாசம்பா. வெத்தலை பின்னால, நடுநரம்புல சின்னச்சின்னப் பூச்சி, புழுக்கள் இருக்கும். இது வயித்துக்குள்ள போனா, பிரச்னைதான். வெத்தலையைத் தனியா மெல்லக் கூடாது. நாக்குல இருக்குற நரம்புகளைப் பதம் பார்த்திடும். எப்பப் பாத்தாலும் பாக்கை மென்னுக்கிட்டு இருந்தா, உடம்புல ரத்தம் சுண்டிப்போயி மூஞ்சியெல்லாம் வெளுத்துப்போயிடும். வெத்தலை, பாக்கை தனித்தனியாப் போட்டா, உடம்புக்குத்தான் கெடுதி.''

''அதான், கல்யாணத்துக்கு முன்னால, தாம்பூலம் தரிக்கிறதைக்கூட ஒரு சடங்கு மாதிரி செஞ்சாங்களோ?''

''ஆமாம் வாசம்பா... நல்லாச் செரிக்கும். சாப்பாட்டுல ஏதாவது நமக்கு ஒத்துக்காத பதார்த்ததை சாப்பிட்டாக்கூட அதை வெத்தலை சாச்சுப்புடும்டி. சின்னப் பிள்ளைங்களுக்குப் பூச்சி கடிச்சிருந்தா, 5 வெத்தலை, 10 மிளகைப் பொடிச்சுத் தண்ணியில போட்டுக் காய்ச்சி நெதமும் 2 வேளை குடிச்சாப் போதும்... சரியாயிடும்.''

''அப்ப, விஷக்கடியைக்கூட முறியடிச்சிடும் வெத்தலைச் சாறு’னு சொல்லு.''

''ஆமா... வாசம்பா, பூரான், தேள் கடிக்குக்கூட இந்தச் சாறுதான் கைகண்ட மருந்து. தோல்ல சொறி, சிரங்கு, தேமல் இருந்தாக்கூட, தேங்காய் எண்ணெயில் வெத்தலையைப் போட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தடவிட்டு வந்தா, சீக்கிரமே தோல் சரியாயிடும். இன்னிக்கு அத்தனை புள்ளைகளையும் ஆட்டிப்படைக்கிற சர்க்கரை நோயைக்கூட கட்டுப்படுத்தற குணம் வெத்தலைக்கு இருக்கு வாசம்பா.''

''அப்ப, வெத்தலையை இனிமே, நோயை வெரட்டற 'வெற்றி’ இலைன்னுதான் சொல்லணும்.''

''அது சரி! நாக்கு சிவக்கிறதுக்குதானே வெத்தலையோட பாக்கு, சுண்ணாம்பு சேர்க்கிறாங்களா?''

''நல்லாக் கேட்ட போ... வெத்தலைகூட துவர்ப்பான பாக்கு சேர்க்கிறது பித்தத்தைப் போக்குறத்துக்காக. சுண்ணாம்புல இருக்கிற காரம், வாதத்துக்கு நல்லது. வாயுவைக் கட்டுப்படுத்தும். வெத்தலையோட உறைப்பு கபத்தை உண்டு இல்லேனு பண்ணிடும். இப்படி வாதம், பித்தம், கபத்தை எல்லாம் போக்குறதாலதான், மதிய சாப்பாட்டுக்கு அப்புறம், தாம்பூலம் போடறது காலம் காலமா இருந்த வழக்கம்டி. இப்பல்லாம், கூடவே, ஏலக்காய், கிராம்பு, ஜாதிபத்திரி சேர்க்கறது, வாய்ல கிருமியைப் போக்குறதுக்குதான். ஆனா சுண்ணாம்பு அதிகமா சேர்த்தா வாய் பொத்துக்கும். அளவுக்கு மிஞ்சினா அமுதமும் விஷம்னு சொல்லுற மாதிரி அளவாத்தான் சுண்ணாம்பு தொட்டுக்கணும்.''

''வாய்ப் புண்ணை ஆத்தவும், வயித்துப் புண்ணைச் சரியாக்கவும் மணத்தக்காளி கீரை இருக்கே அம்மணி...''

''ஆமா, மறந்திட்டேண்டி...'' என்று ஆரம்பித்தார் மணத்தக்காளி கீரையின் மகத்துவப் புராணத்தை...

- பாட்டிகள் பேசுவார்கள்...