முன்னோடிகள்

கி.பி. 1846-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் மருத்துவமனையின் அறுவைசிகிச்சை அரங்கில் ஒரே பரபரப்பு. எட்வர்ட் கில்பர்ட் அப்பாட் என்ற நோயாளியின் கழுத்தில் உள்ள கட்டியை அறுவைசிகிச்சை மூலம் அகற்றுதற்கு ஜான் காலின்ஸ் வாரன் என்ற அறுவைசிகிச்சை நிபுணர் தயாராகக் காத்திருந்தார். அப்போது கையில் ஒரு குடுவையுடன் வந்தார் வேறு ஒரு மருத்துவர். ஒரு திரவத்தை அந்தக் குடுவையில் ஊற்றி நோயாளியை முகரச் செய்தார்; அந்த திரவத்தை நுகர்ந்ததும் நோயாளி மயங்கினார்; நோயாளியின் கழுத்தில் இருந்த கட்டி சிறிதுகூட வலி இல்லாமல் அகற்றப்பட்டது. அனைவரும் கைத்தட்டி ஆரவாரித்தனர். ஏன் இவ்வளவு ஆரவாரம்? உலகில் வலியின்றி செய்யப்பட்ட முதல் அறுவைசிகிச்சை என்பதுதான் அதற்குக் காரணம். அந்தக் குடுவையுடன் வந்தவர்தான் டாக்டர் வில்லியம் தாமஸ் கிரீன் மார்ட்டன் (William Thomas Green Morton). இந்த நிகழ்வினால்தான், அக்டோபர் 16-ம் தேதியினை 'உலக மயக்க மருத்துவத் தினம்’ என அனைத்து மயக்க மருத்துவர்களும் கொண்டாடுகின்றனர்.

##~## |
1819-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் நகரில் ஜேம்ஸ் மார்ட்டன் என்ற விவசாயிக்கு மகனாகப் பிறந்த டாக்டர் மார்ட்டன், ஆரம்பத்தில் குமாஸ்தா, அச்சுக் கோர்ப்பவர், விற்பனைப் பிரதிநிதி என்று பல வேலைகளைப் பார்த்தார். தனது 21-வது வயதில் பால்டிமோர் கல்லூரியில் பல் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். சேர்ந்த ஒரு வருடத்திலேயே செயற்கைப் பல் பொருத்துவதில் புதிய முறைகளைச் செய்துகாட்டினார். பின்னர் படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டு, 1842-ம் ஆண்டு தனது 23-வது வயதில் கனெக்டிகட் நகரில் ஹோரஸ் வெல்ஸ் என்ற பல் மருத்துவரிடம் சேர்ந்தார். 1843-ம் ஆண்டு எலிசபெத் என்பவரைத் திருமணம் செய்தபோது மார்ட்டனின் பெற்றோர், அவரை மருத்துவம் படிக்க வற்புறுத்தினார்கள். மருத்துவம் படிப்பதாக உறுதி அளித்தால்தான் திருமணத்திற்குச் சம்மதிப்போம் என்று கூறி, அவரைப் பணியவைத்தார்கள். எனவே, 1844-ம் ஆண்டு ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியில் மார்ட்டன் சேர்ந்தார்.
ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியில் சார்லஸ் ஜாக்சன் என்பவரின் வேதியியல் விரிவுரைகளால் ஈர்க்கப்பட்ட மார்ட்டன் அவரின் அபிமான மாணவராக மாறினார். 'ஈதர்’ எனும் மயக்க மருந்தின் பண்புகளை சார்லஸ் ஜாக்சன் மூலம்தான் முதலில் மார்ட்டன் அறிந்தார். 1846-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி ஈதர் திரவத்தை ஆவியாக்கி ஒரு நோயாளியை நுகரச்செய்து, அவரின் பல்லை வலியின்றி மார்ட்டன் அகற்றினார். செய்தித்தாள் வாயிலாக அதை அறிந்த அறுவைசிகிச்சை நிபுணர்தான், நாம் முன்னரே குறிப்பிட்ட 'அக்டோபர் 16’ சாதனையை எல்லோர் முன்னிலையிலும் மார்ட்டன் நிகழ்த்துவதற்கான ஏற்பாட்டைச் செய்தார்.
இந்தச் சாதனையை நிகழ்த்திய பிறகு மார்ட்டன் சந்தித்த பிரச்னைகள் ஏராளம். இந்த மயக்க மருந்துக்குக் காப்புரிமை கேட்டு மார்ட்டன் செய்த விண்ணப்பத்தில் மருந்தின் பெயரை 'ஈதர்’ என்று குறிப்பிடாமல், மற்றவர்கள் தெரிந்துகொள்ளாத வகையில் 'லெத்தியான்’ என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால், மருத்துவ உலகம் இதை வன்மையாகக் கண்டித்தது. மேலும் 'ஈதர்’ கண்டுபிடிப்புக்கான உரிமையை மார்ட்டனின் ஆசிரியர் டாக்டர் ஜாக்ஸன் மற்றும் டாக்டர் ஹோரஸ் வெல்ஸ் ஆகியோரும் கோரினர். இதற்காக 1849, 1851 மற்றும் 1853-ம் ஆண்டுகளில் மார்ட்டன் அனுப்பிய விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டன. ஜூலை 1868-ம் ஆண்டு மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவினால் மார்ட்டன் மரணமடைந்தார். மார்ட்டனின் மரணத்திற்குப் பின் 1871-ம் ஆண்டு கூட்டப்பட்ட மருத்துவக் குழு மார்ட்டனை ஈதரின் கண்டுபிடிப்பாளராக அறிவித்தது. ஒரு பொருளை யார் பயன்படுத்தி இருந்தாலும் அதை உலகறியச் செய்தவரே கண்டுபிடிப்பாளர் என்று அந்தக் குழு அறிவித்தது.
1944-ம் ஆண்டு பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் மார்ட்டனின் வாழ்க்கை வரலாற்றை 'த கிரேட் மொமென்ட்’ (The Great Moment)எனும் திரைப்படமாகத் தயாரித்தது. வாழ்ந்த காலத்தில் அங்கீகரிக்கப்படாத மார்ட்டனின் கல்லறையில் 'ஈதரைக் கண்டுபிடித்தவர்’ என்று எழுதப்பட்டிருப்பது இனம் புரியாத சோகத்தை ஏற்படுத்தும்.
- திரும்பிப் பார்ப்போம்...
தலையில் அடித்து மயக்கம்...
அக்டோபர் 16, 1846-க்கு முன்பு வரை, நோயாளிக்கு மயக்க மருந்து ஏதும் அளிக்காமல் அறுவைசிகிச்சை செய்யப்பட்டுவந்தது. பல நேரங்களில் இதுவே அந்த நோயாளி உயிரிழக்கக் காரணமாகவும் இருந்தது. மயக்க மருந்து இல்லாத காரணத்த£ல் நோயாளியின் கை கால்களைக் கட்டிப்போட்டும், அவர்களின் தலையில் குத்து மதிப்பாக அடித்து மயக்கமுறச் செய்தும்தான் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சூழ்நிலையை மாற்றி, வலியில்லாமல் அறுவைசிகிச்சை செய்ய முடியும் என்பதையும், மயக்க மருத்துவம் என்ற துறையை உலகிற்கு அறிமுகப்படுத்தியதும் மார்ட்டனின் சாதனை.