மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இப்படிக்கு வயிறு! - 29

இப்படிக்கு வயிறு! - 29

இப்படிக்கு வயிறு! - 29
##~##

காசநோய் உண்டு பண்ணும் பாக்டீரியாவுக்கு மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் (Mycobacterium Tuberculosis). என்று பெயர். இதைக் கண்டுபிடிக்க மார்புப் பரிசோதனை, எக்ஸ்ரே பரிசோதனை, சளி பரிசோதனை, ரத்தப் பரிசோதனை செய்து தெரிந்துகொள்ளலாம். காசநோய் எனப்படும் டி.பி நோய், மிக அதிகமாகப் பாதிப்பது நுரையீரலைத்தான் என்றாலும், நுரையீரல் மட்டுமல்லாமல் உடலின் மற்ற உறுப்புகளையும் இது பாதிக்கும். 

சுரப்பிகள், எலும்புகள், முக்கியமாக என் உடன்பிறந்த பிற பகுதிகளான குடல், மண்ணீரல், நிணநீர்த் தாரைகள், நிணநீர் முடிச்சுகள் ஆகியவற்றையும் கடுமையாகப் பாதிக்கும். சிறுநீரகம், தோல் உள்ளிட்ட உறுப்புகளும் இந்தப் பாதிப்பில் இருந்து தப்புவது இல்லை. மூலையில் இருக்கும் உறுப்புகள் முதல் மூளை வரையிலான உறுப்புகள் வரை இந்தக் காசநோய் வடிவிலான 'இருமல் எமன்’ பயணம் செய்யக்கூடியவன்.

காசநோய்க் கிருமியால் உண்டாகும் காசநோயாளிகளில் 10 சதவீதம் பேர் வயிற்றுக் காசநோயாளிகளே. குறிப்பாக, இதன் பாதிப்பு சிறுகுடல் முடிந்து, பெருங்குடல் ஆரம்பப் பகுதியான சீக்கம் (Caecum) பகுதியில் அதிகமாக இருக்கும். இரைப்பைப் பகுதியில் இந்தக் காசநோய் பாதிப்பு ஏற்படுவது இல்லை. காரணம், அமிலம் ஊற்றைப்போல் சுரக்கும் இந்தப் பகுதியில் காசநோய்க் கிருமிகள் எட்டிப்பார்ப்பது இல்லை. இதையெல்லாம் சேர்த்துவைத்து அமில உற்பத்தி இல்லாத இடமாகப் பார்த்து, தனது தேசத்தை நிர்மானித்துக்கொள்கின்றன.

இப்படிக்கு வயிறு! - 29

நுரையீரல் காசநோய் முக்கியமாகக் காற்றின் மூலம் பரவும். குடல் காசநோய் மாட்டுப் பால் மூலமும் பரவக்கூடியது. மாடுகளுக்கு இந்த நோய் கண்டு, அவை கொடுக்கும் பாலைச் சரியாகக் காய்ச்சாமல் பருகும் மனிதர்களுக்கு, இந்த நோய் பரவும். காசநோய் உள்ளவர்கள் டி.பி. கிருமி உள்ள சளியை விழுங்கும்போது, குடல் காசநோய் உண்டாகிறது.

மனிதனை முதன் முதலில் காசநோய்க் கிருமிகள் தாக்கும்போது ஏற்படும் நோயை, 'முதல் பாதிப்பு’ என்று சொல்வார்கள். இது பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தோன்றி மறைந்துவிடும். முதல் பாதிப்பு ஏற்படும்போது, பெரும்பாலும் இந்த நோயின் அறிகுறிகள் வெளியே தெரியாமல் மறைந்துவிடக்கூடும். ஆனால், குழந்தையின் உடலில் புகுந்து காசநோய்க் கிருமிகள் நீண்ட காலம் உடலிலேயே இருந்துவரும். இந்த முறையில் இருந்து வரும் காசநோய்க் கிருமிகள் சிறுகச் சிறுக ரத்த ஓட்டத்தில் புகுந்து நுரையீரல், நிணநீர்க் கட்டிகள், எலும்பு மூட்டுகள், சிறுநீரகம் மற்றும் வயிறாகிய எனக்குள்ளும் புகுந்து, வாழத் தொடங்கும். உடம்பு மற்ற வியாதிகளால் பலவீனம் அடையும்போதோ அல்லது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்போதோ, உடம்பில் ஏற்கெனவே உள்ள காசநோய்க் கிருமிகள் தங்களின் கைவரிசையைக் காட்டத் தொடங்கும்.

குடலுக்கு வந்த காசநோய்க் கிருமிகள் நிணநீர் வழியாகப் பரவி, சப்மியூகோஸா (SubMucosa) எனப்படும் சவ்வுப் படலத்துக்குள் சென்று தங்குகின்றன. இந்தச் சவ்வுப் படலத்துக்குள் கூடாரம் அமைத்ததுபோல், திசுக்களைத் தாக்கிக் கட்டிகளை உருவாக்கும். இப்படி உருவான கட்டிகள் உடைந்து குடலுக்குள் வரும். அங்கிருந்து இந்தக் கிருமிகள் மெசன்ட்ரி (Mesentery)  எனப்படும் குடல் இணையப் பகுதிக்குத் தாவி அங்கேயும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும். அதனால் குடல் இணையத்தில் 'நெறிக்கட்டி’கள் உருவாகி வயிற்று வலியை உருவாக்கும். புண்ணும் உருவாகும். உடலுக்குத் தேவையான சத்து நீர்களை எடுத்துச் செல்லும் நிணநீர்க் குழாய்களைப் பாதித்து அங்கேயும் கட்டிகளை ஏற்படுத்தும்.

ஒருவழியாகக் குடலில் ஏற்பட்ட புண் ஆறும்போது அந்தப் பகுதி சுருங்கிப்போகும். இதனால், குடல் வழியாகப் போகும் உணவுக்கூழ் வேறு பகுதிக்கு வேகமாகப் போக முடியாதபடி குடலின் தசைச்சுவர்கள் இறுக்கப்பட்டு, 'குடல் அடைப்பு’  போல உருவாகலாம். இந்தப் பகுதி வழியாகச் செல்லும் உணவுக் கூழ் ஆற்றின் ஓரத்தில் வடிநீராகச் செல்லும் நீரோட்டத்தைப்போல் அந்த அடைப்பைத் தாண்டிச் செல்லும்.

குடலைப் பாதிக்கும்போது மூன்று வகைகளாகக் காசநோய் தன்வடிவத்தைக் காட்டும்.

குடலில் புண் ஏற்படும். குடல் பாதைகள் சுருங்கி, இறுக்கம் ஏற்படுவதால், குடல் அடைப்பு ஏற்படும். குடலின் சதைச் சுவர் பெருக்கம் அடைந்து தடித்துப் போவதால், ஹைபர்பிளாஸ்டிக் (Hyperplastic)   என்ற நிலை உருவாகலாம்.

மூன்றாவதாகக் குறிப்பிட்ட நிலையில், காசநோயின் வீரியம் அதிக அளவில் இருக்காது. ஆனால், முதலாவதாகச் சொல்லப்பட்ட வயிற்றுப் புண் உள்ள இடத்தில் வரும் காசநோய் மிகுந்த வீரியத்துடன் தன் தாக்குதலை நடத்தும். பொதுவாக இந்த நோய் 20 முதல் 40 வயது வரை உள்ளவர்களையே அதிகம் பாதிக்கிறது.

- மெல்வேன்... சொல்வேன்...