மற்ற எபிசோடுகள்
Published:Updated:

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!
##~##

தோ காற்றில் கமகமக்க, வாசம்பா வீட்டுக்குள் நுழைந்தாள் அம்மணி. ''என்னடி வாசம்பா... மணத்தக்காளிக் கீரை வாசம் பக்கத்து ஊரு வரைக்கும் வீசுது'' என்றாள் மூச்சுவிட்டு.

 ''கழுகுக்கு மூக்கில வேர்த்த மாதிரி வந்துட்டியே... மணத்தக்காளியோட மகிமையை உன் வாயால கேட்கணும்னுதான் வாய்க்கு ருசியா சமைச்சிருக்கேன். வந்து ஒரு கை வாங்கிக்க.''

எச்சில் ஊற, சப்புக் கொட்டியபடியே சாப்பிட்டு எழுந்த அம்மணி, குவளையால் தண்ணியை மொண்டு கையைக் கழுவினாள்.

''ஆக்கியவளுக்குச் சட்டியும் பானையும்தான் மிச்சம் போ... கீரை முச்சூடும் காலி பண்ணிட்டியே அம்மணி... அம்புட்டு ருசியாவா இருக்குது?''

''பசி, ருசி அறிஞ்சு சாப்பிடறவ இல்லடி இந்த அம்மணி! மகிமை தெரிஞ்சு சாப்பிடறவ. அதான் இத்தனை வயசுலயும் எப்படி இருக்கேன் பாரு! பாசிப்பருப்பை வேகவெச்சுக் கீரையில சேர்த்து ருசியாத்தான் செஞ்சிருக்க. இது உடம்புக்கு எத்தனை குளிர்ச்சி தெரியுமா? வாய்ப் புண்ணு, வயித்துப் புண்ணு அம்புட்டும் சரியாப் போயிடும். சித்திரை வெயில் சுட்டெரிக்கப்போகுது. இந்த நேரத்துல

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

நெதமும் மணத்தக்காளிக் கீரை சாப்பிடறது ரொம்பவே நல்லது வாசம்பா.''

''ஆமா... ராத்திரில கீரை சாப்பிடக் கூடாதுன்னு சொல்லுவாங்களே.. அது நெசமா?''

''கீரை... சீக்கிரத்துல ஜீரணமாகாது வாசம்பா. அதனாலதான் ராத்திரில சேத்துக்கிறதில்லை. ஆனா, மணத்தக்காளி கீரையைச் சேர்த்துக்கலாம். பருப்பு சேக்காம, கீரையை நல்லா வதக்கி புளி, உப்பு, வெங்காயம், தக்காளி, பூண்டு, பெருங்காயம், வத்த மிளகாய் சேர்த்துத் தொவையல் மாதிரி அரைச்சு, சுடுசாதத்தோட சேர்த்துச் சாப்பிடலாம். இந்தக் கீரைக்குத் தூக்கத்தை வரவழைக்கிற குணமும் இருக்கு. நல்லாத் தூக்கமும் வரும். உடம்புக்கு அழகையும் கொடுக்கும்.''

''மேலத்தெரு கண்ணாத்தாளுக்கு அடிக்கடி நெஞ்சு வலி வருதாமே.. அதுக்கு உன்னோட மணத்தக்காளி கீரைல ஏதாவது இருக்கா?''

''இல்லாமலா.... ஒரு கட்டு மணத்தக்காளிக் கீரையை உதித்து, நாலு பல் பூண்டு, சிட்டிகை மஞ்சள் தூள் சேத்து வேகவெச்சு அப்படியே சாப்பிட்டாப் போதும்.... இதய நோய்ப் பிரச்னையே இருக்காது. அவ்வளவு இதமா இருக்கும்டி, கீரைல கொஞ்சம் உப்புச் சேர்த்துச் சமைச்சுச் சாப்ட்டுவந்தா, நாள்பட்ட வாத நோய்கூட ஓடியே போயிரும்.''

''பட்டணத்துக்குப் படிக்கப்போன கருப்பாயி மகன், சிகரெட், குடிக்கு அடிமையாகி, ஆஸ்பத்திரியில் சேர்க்கிற அளவுக்குப் போயிடுச்சாம்.  புலம்பித் தள்ளிட்டா... அதுக்குக்கூட மருந்துதானே மணத்தக்காளி.''

''இருக்காதா பின்னே? சிறுநீரகம், கல்லீரல்னு எல்லாக் கோளாறுக்குமே மணத்தக்காளிக் கீரை கைகொடுக்கும் வாசம்பா!

அரைக் கிலோ மணத்தக்காளிக் கீரையை நிழல்ல உலர்த்தி, 10 கிராம் மிளகு, சீரகம் 20 கிராம், சோம்பு 30 கிராம் சேர்த்து நல்லாப் பொடிச்சிக்கணும். இந்தப் பொடியைத் தினமும் ரெண்டு வேளை சாப்பாட்டுக்கு முன்னால சாப்பிட்டு வந்தா, கல்லீரல், சிறுநீரகம் ரெண்டுமே ஸ்ட்ராங்காயிடும். குடல் நோவு,          நீரிழிவு, வாய்வுக் கோளாறும் குணமாயிடும். வாய்க் கசப்பு இருக்கிறவங்க, புள்ளத்தாச்சி, குழந்தை பெத்த பச்சை உடம்புக்காரி, இந்த மணத்தக்காளி வத்தலை எண்ணெயில் வறுத்து, சூடான சாதத்துல போட்டு, நெய் விட்டுச் சாப்பிடலாம். நல்லா செரிமானமாகும்.  நல்லாப் பசி எடுக்கும். தெனமுமே சாப்பிடுறது நல்லது. குழந்தை இல்லையேன்னு கவலைப்படறவங்களுக்கு மணத்தக்காளிப் பழம்கூட ஒரு வரப்பிரசாதம்தான் வாசம்பா. ஆம்பளைங்களுக்கு விந்து உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். கருத்தரிக்கச் செய்யவும், உருவான கரு நல்லா வலுவா இருக்கவும் மணத்தக்காளிப் பழம் உதவுது.''

'' 'அரச மரத்தைச் சுத்திட்டு அடி வயித்தைத் தொட்டுப் பார்த்துக்கிட்டாளாம்’னு சொல்லுவாங்க. ஆனா நெசமாலுமே மணத்தக்காளியைச் சாப்பிட்டுட்டு மடியைத் தடவிப்பாக்கலாம்னு சொல்லு.''

''சரியாச் சொன்னே! இதுவும் ஒரு காயக்கல்பம்தான். ஒரு கைப்பிடிக் கீரையோட 10 மிளகு, 3 திப்பிலி, 4 சிட்டிகை மஞ்சள் சேர்ந்து விழுதாக அரைச்சுத் தேன்ல கலந்து சாப்பிட்டா, நெஞ்சுல கபம், சளி, இருமல் நோய் எல்லாம் பறந்திடும். இருமல், சளி, குளிர், காய்ச்சலுக்கும் அற்புதமான மருந்து இது.''

''இன்னிக்குப் பேப்பரைப் பார்த்தியா அம்மணி? வெங்காயம் பக்கவாதத்தையே போக்கிடும்னு போட்டிருக்கு.''

''இது காலம் காலமாத் தெரிஞ்ச விஷயம்தாண்டி. பக்கவாதம் மட்டுமில்ல வாசம்பா... வெங்காயத்தை வெறுக்கிறவங்ககூட வாயைப் பிளந்து கேட்கும்படியா ஆயிரமாயிரம் மருத்துவ குணம் அதுல இருக்கு!''

''காயமே... இது பொய்யடா... வெங்காயமே மெய்யடா...'' - வாசம்பா பாட... அம்மணியின் அடுத்த டாபிக் வெங்காயம்!

- பாட்டிகள் பேசுவார்கள்...