Published:Updated:

முன்னோடிகள்

முன்னோடிகள்

முன்னோடிகள்
##~##

றக்கத்தில் நாம் காணும் கனவுகளைப் பற்றி நாம் கனவிலும் எண்ண முடியாதவாறு 100 ஆண்டுகளுக்கு முன்பே ஒருவர், பல வியத்தகு தகவல்களை விவரித்துக் கூறி இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? இந்த விந்தையை நிகழ்த்திக் காட்டியவர் 'உளவியலின் தந்தை’ என்று அழைக்கப்படும் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த சிக்மண்ட் ஃபிராய்ட் 

ஜேக்கப், அமலியா தம்பதிக்குப் பிறந்த எட்டுக் குழந்தைகளில் முதல்வராக 1856-ம் ஆண்டு சிக்மண்ட் ஃபிராய்ட் பிறந்தார். பள்ளிப் படிப்பில் முதலாவதாகத் தேறிய சிக்மண்ட், தனது 17-வது வயதில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். படிப்பின்போதே நூற்றுக்கும் மேற்பட்ட 'ஈல்’ இன மீன்களை அறுத்து அவற்றின் இனப்பெருக்க உறுப்புகளைப் பரிசோதித்துப் பார்த்தார்.

1882-ம் ஆண்டில் மனநல மருத்துவமனை ஒன்றில் பணியைத் துவக்கினார். நரம்பு சம்பந்தமான நோய்களின் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். 1887-ம் ஆண்டு மார்த்தா என்ற பெண்ணை மணந்தார். 1895-ம் ஆண்டுக்குள் ஆறு குழந்தைகளுக்குத் தந்தை ஆனார். 1886-ம் ஆண்டில் இருந்து தன்னிடம் வரும் அனைத்து நோயாளிகளுக்கும் ஹிப்னாடிச சிகிச்சை அளித்தார். 'நோயாளிகள் மனம்விட்டுத் தங்கள் பிரச்னைகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் நோயின் வீரியம் பாதியாகக் குறையும்’ என்றார். அவர்களின் கனவுகளை ஆராய்வதன் மூலம் நோயின் தன்மையைக் கண்டறியலாம் என்பதும் அவர் கருத்து.

முன்னோடிகள்

பத்தாண்டுகள் ஆராய்ச்சி செய்த பிறகு 1896-ம் ஆண்டில் ஹிப்னாட்டிசம் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு (PSYCHO ANALYSIS) என்ற புதிய சொற்றொடரை சிக்மண்ட் மருத்துவ உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

'சிறுபிள்ளைப் பிராயத்தில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கே ஹிஸ்டீரியா நோய் ஏற்படுகிறது’ என்ற சிக்மண்டின் கருத்துதான் இன்றளவும் 'ஃபிராய்டின் செடக்ஷன் தியரி’ (FREUD’S SEDUCTION THEORY) என்று அழைக்கப்படுகிறது.

'எடிபஸ் காம்ப்ளக்ஸ்’ (OEDIPUS COMPLEX) என்ற மனோ வக்கிரம் பற்றி இவர் விவரித்தார்.

1880-ம் ஆண்டின் பிற்பகுதியில் துவங்கி பல ஆண்டுகள் தனது கொள்கைகள் பற்றி விளக்கவுரை நிகழ்த்திய சிக்மண்ட் ஃபிராய்ட், ஒவ்வொரு சனிக்கிழமையும் பல்கலைக்கழகத்தின் விரிவுரைக்கூடத்தில் உரை நிகழ்த்தினார். நிபுணர்கள் பலர் ஒவ்வொரு புதன்கிழமையும் அவரது

முன்னோடிகள்

வீட்டில் சந்தித்து உளவியல் பற்றி விவாதித்தனர். 'புதன்கிழமை உளவியல் கூட்டமைப்பு’ (WEDNESDAY PSYCHOLOGICAL SOCIETY) என்று அழைக்கப்பட்ட இந்த அமைப்புதான் உலகளாவிய உளவியல் ஆராய்ச்சிக் கூட்டமைப்பில் விதையாக விழுந்தது.

அமெரிக்க நாட்டில் வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டம் அவரை மேலும் பிரபலமாக்கியது.

'கனவுகளும் விளக்கங்களும்’ (INTERPRETATION OF DREAMS)  என்ற புத்தகத்தை 1899-ல் வெளியிட்ட சிக்மண்ட் 1914-ம் ஆண்டில் 'உளவியல் இயக்க வரலாறு’(The History of Psychoanalytic Movement)  என்ற புத்தகத்தை வெளியிட்டார். பெருமூளை சரிவரச் செயல்படாமல் இருப்பதால் வருகின்ற 'செரிபரல் பால்சி’ (CEREBRAL PALSY) என்ற நோய் பற்றிப் பல குறிப்புகள் எழுதினார் சிக்மண்ட். ஆழ்மன நினைவுகள், கனவுகள், கற்பனைகள், உணர்ச்சிகள் என்று பலதரப்பட்ட நரம்பியல் மற்றும் மூளை சம்பந்தமான ஆராய்ச்சிகளையும் தொடர்ந்து செய்து வந்தார்.

1930-ல் ஜெர்மனியில் புகழ்பெற்ற 'கோத்தே விருது’ சிக்மண்டிற்கு வழங்கப்பட்டது. 1933-ல் நாஜிப் படைகள் ஜெர்மனியைக் கைப்பற்றியபோது சிக்மண்டின் புத்தகங்கள் அழிக்கப்பட்டன. அவருடைய சொத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன. 24 வயதில் இருந்து புகைப்பிடித்த சிக்மண்டை 1923-ல் வாய்ப் புற்றுநோய் தாக்கியது. அதற்காக அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டபோது அதிக அளவு ரத்த சேதம் ஏற்பட்டு மயிரிழையில் உயிர் தப்பினார். அதன் பிறகு மனநோயினால் பாதிக்கப்பட்டார். அப்போதும் தனது ஆழ்மன எண்ணங்களையே ஆராய்ச்சி செய்து பார்த்து அதிசயிக்கவைத்தவர் சிக்மண்ட் ஃபிராய்ட்.

செப்டம்பர் 23, 1939-ல் சிக்மண்ட் மரணம் அடைந்தார். அவர் இறந்த மூன்றாவது நாள் உளவியல் கூட்டமைப்பில் அவர் நினைவாக ஓர் உரை நிகழ்த்தப்பட்டது. அது அவருக்குக் கொடுக்கப்பட்ட மிகப் பெரிய கௌரவம்.

- திரும்பிப் பார்ப்போம்...