மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இப்படிக்கு வயிறு! - 30

இப்படிக்கு வயிறு! - 30

இப்படிக்கு வயிறு! - 30
##~##

பிரைமரி காம்ப்ளெக்ஸ் (Primary Complex) என்ற காசநோய் கருவிலேயே குழந்தைகளைத் தாக்குகிறது. இது முதலில் நுரையீரலில் ஆரம்பமாகும். பிறகு நிணநீர் முடிச்சுகளைத் தாக்கும். திடீரெனத் தோன்றும் இந்தக் காசநோய் கருவிலேயே குழந்தைகளுக்கு நுரையீரலில் ஓட்டையைக்கூட ஏற்படுத்தக்கூடியது. இந்த நோய் மிக அதிக அளவில் பெண்களைத்தான் தாக்குகிறது. வயிறாகிய எனக்குள் உண்டாகும் காசநோய்க்குச் சளி உண்டாக வேண்டும் என்பது கிடையாது. எட்டு சதவீதம் இருமல்தான் இருக்கும்.

 காசநோய் அறிகுறிகள்

1. மாலை வேளைகளில் காய்ச்சல்.

2. பலவீனம், சோம்பேறித்தனம், உடல் இளைப்பு.

3. பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள்.

4.திருமணமான பெண்களுக்குக் கர்ப்பப்பையில் அடைப்பு ஏற்பட்டு, குழந்தை உண்டாகாமல் போதல்.

5. குடலில் புண் ஏற்பட்டு, அதன் காரணமாக ரத்தப்போக்கு ஏற்படுதல்.

இப்படிக்கு வயிறு! - 30

6. பசியின்மை, வாந்தி, வயிற்று வலி ஏற்படுதல்.

7. மகோதரம் உண்டாவது.

8. குடலில் வெடிப்பு ஏற்பட்டு சீழ் பரவி, அவசரசிகிச்சையை மேற்கொள்ள வேண்டிய நிலைமை உருவாகுதல்.

9. நிணநீர்க் கட்டிகள் வீங்கி, வயிற்று வலி ஏற்படுதல்.

10.சளி வந்ததும் வெளியே துப்பாமல் உள்ளே விழுங்குவதால், குடலில் காசநோய் உண்டாகும்.

11.உடலில் வேறு இடத்தில் உள்ள காசநோய், ரத்தக் குழாய் வழியாகச் சென்று குடலுக்கு வரும்போது, அங்கு தங்கி காசநோய் உண்டாகலாம்.

இலியோசீகல் (Ileocaceal Region) பகுதியில்தான் காசநோய்க் கிருமிகள் தங்களின் கைவரிசையை அதிகம் காட்டுகின்றன. உண்ட உணவு கூழாகி இரைப்பையை விட்டு அடுத்த பகுதியான சிறுகுடலுக்கு வருகிறது அல்லவா. இப்படி வந்த உணவுக் கூழ் சுமார் ஆறு மணி நேரம் இலியோசீக்கல் என்ற இந்தப் பகுதியில்தான் இருக்க வேண்டியதாகிறது. அதனால், இங்கே கிருமிகள் தங்கி செயல்பட வாய்ப்பு அதிகமாகிறது.

நிணநீர்ச் சுரப்பியும், நிணநீர்க் கட்டிகளும் சிறுகுடலின் இந்த இடத்தில்தான் அதிகமாக இருக்கிறது.

உணவு உறிஞ்சப்படுகின்ற வேகமும் விகிதமும் இங்கு அதிகம். அதனால் குடலின் உட்சவ்வில் கிருமிகள் அதிக அளவு தங்கும். அதனால்தான் காசநோய்க் கிருமிகள் இங்கே வசதியாகத் தங்களை வளர்த்துக்கொள்கின்றன.

குடல் அடைப்பு, குடல் ஓட்டை, குடல் கல், புரை ஓட்டை, மகோதரம், குடல்வால் என காசநோய்க் கிருமிகளால் வயிறாகிய எனக்குள் ஏற்படுகிற பாதிப்புகள் எக்கச்சக்கம்.

காசநோயைக் கண்டறிய குறிப்பிட்ட சோதனை முறை கிடையாது. இருந்தாலும் காசநோய் எங்கு எந்த உறுப்பைப் பாதித்தாலும் சிகிச்சைமுறை ரத்தப் பரிசோதனை, திசுப் பரிசோதனை என ஒரே மாதிரியானவைதான். அவை தவிர, குடல் காசநோயைக் கண்டுபிடிக்க பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து நீர் எடுத்து பரிசோதனையின் மூலம், அந்தத் திரவத்தில் காசநோய்க் கிருமிகள் உள்ளனவா என்று  சோதிப்பார்கள். Montoux Test, ELISA Test, SAFA Test ஆகிய சோதனைகள் மூலம் காசநோய்க் கிருமிகளைக் கண்டறியலாம். பேரியம் (Barium) பரிசோதனை மூலம் குடல் படங்கள் எடுத்து, புண் அடைப்பு, வீக்கம், மற்றும் உறுப்புகளில் உள்ள மாற்றங்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம். இந்த மாறுதல்களைக் கண்டறிய, கேளா ஒளி அலை வரைவு, சி.டி.ஸ்கேன் ஆகிய சோதனைகள் உதவுகின்றன.

'காசநோய் வந்தாலே மரணம்தான்’ என அஞ்சிய காலம் எல்லாம் மலையேறிவிட்டது. நோயின் ஆரம்ப நிலையிலேயே சரியான பரிசோதனையின் மூலம் காசநோய் பாதிப்பைக் கண்டறிந்துவிட்டால்,  குணப்படுத்துவது மிகச் சுலபம். வீரியம்மிக்க மருந்துகள் கிடைப்பதால் காசநோய் புண்களைக் குணப்படுத்துவது சுலபம். ஆறு மாதங்கள் வரை தொடர்ந்து மருந்துகள் சாப்பிட்டு வந்தால், நோயைக் குணப்படுத்திவிட முடியும்.

குடல் காசநோய் குறித்து நான் இவ்வளவு விரிவாகச் சொல்வதற்குக் காரணம், இந்த வியாதியால் 7 சதவீதம் முதல் 15 சதவீதம் பேர் இறக்கும் வேதனையால்தான். வயிறாகிய எனக்குள் நிகழும் அனைத்துவிதமான இயக்கங்களையும் இத்தனை இதழ்களாக உங்களோடு பகிர்ந்துகொண்டேன்.

உங்களுக்கு சக்தி அளிக்கும் ஆதார மையமாக விளங்குவதில் எனக்கு அளவில்லா மகிழ்ச்சி. சரியானவற்றை, சரியான நேரத்தில், சரியான அளவில் உண்டு வயிறாகிய என்னை வளமாக வைத்துக்கொள்ளுங்கள். 'ஒரு சாண் வயித்துக்காகத்தான் இந்த வாழ்க்கை’ என்பார்கள் பலரும். உண்மையில், இந்த ஒரு சாண் வயிறாகிய என்னுடைய வாழ்வே எண்சாண் உடலாகிய உங்களுக்காகத்தான். எனக்கு உணவு அளிக்கும் உங்களுக்கு சக்தியைக் கொடுக்கும் சமத்தான வேலைக்காரனாக என்றைக்கும் இருப்பேன். வாழ்க வளமுடன்... நல்ல வயிறுடன்!

இப்படிக்கு வயிறு