Published:Updated:

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 06

கருவாய்... உருவாய்... அருள்வாய்...
பிரீமியம் ஸ்டோரி
News
கருவாய்... உருவாய்... அருள்வாய்... ( கருவாய்... உருவாய்... அருள்வாய்... )

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 06

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 06
##~##

முதல் ட்ரைமெஸ்டரில் ஏற்படும் வாந்தி, உடல் எடை, சோர்வு போன்ற பிரச்னைகள் நான்கு மாதங்களுக்குப் பிறகு இருக்காது. எனவே, அந்த சமயத்தில் உடல் எடை கொஞ்சம் குறைந்திருந்தாலும், வீண் பயம் வேண்டாம். இந்த மாதத்தில் இழந்த எடையைச் சரிசெய்துவிடலாம். நல்ல உணவு என்பது அளவை அதிகரிப்பது அல்ல. சத்தாகச் சாப்பிட வேண்டும். நிறைய சாப்பிட்டு உடல் எடையை அதிகரித்துக்கொண்டால் பின்னர் பிரசவத்தின்போது சிரமம் ஏற்படும். ஏற்கெனவே மெலிந்து சத்துக் குறைவாக இருப்பவர்கள், 10 முதல் 12 கிலோ வரை எடையைக் கூட்டலாம். நார்மலாக இருப்பவர்கள் 8 முதல் 10 கிலோ வரை எடை அதிகரிக்கலாம்.

 சமச்சீர் உணவு

கால்ஷியம், புரதம், இரும்பு, மாவு, நீர் மற்றும் நார்ச் சத்துக்கள் கட்டாயம் தினசரி உணவில் இருக்க வேண்டும்.

தினமும் 1/2 லிட்டர் பால் அல்லது பால் பொருட்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும். இதில் கால்ஷியம் மற்றும் புரதம் கிடைத்துவிடும். கீரை, பேரீச்சை பழம், உலர்ந்த திராட்சை, பீட்ரூட் போன்ற காய்கறிகள், பருப்பு வகைகள், நட்ஸ் போன்றவற்றைச் சாப்பிட வேண்டும். இவற்றில் தேவையான புரதம் கிடைக்கும். மீன், கோழி இறைச்சியிலும் புரதம் கிடைக்கும். ஒரு வேளை அரிசி உணவும் மற்றொரு வேளை கோதுமை உணவும் சாப்பிட, மாவுச் சத்து கிடைக்கும். காய்கறிகள், பழங்களை நிறைய உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் நீர்ச் சத்து மற்றும் நார்ச் சத்து கிடைத்துவிடும்.

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 06

சத்தான உணவுகள்

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் பகலிலும் இரவிலும் ஒரு கப் சூப் குடித்தால், மலச்சிக்கல் இல்லாமல் இருக்கலாம். தினசரி உணவில் ஏதாவது ஒரு சாலட் அல்லது தயிர்ப் பச்சடி சேர்த்துக்கொள்ளலாம். பாதாம், உலர்ந்த திராட்சை, பேரீச்சை போன்றவற்றை அடிக்கடி சேர்க்கலாம். முழு தானியங்கள், பயறு, பருப்பு வகைகள் கலந்த டிபனாகத் தயாரிக்கலாம். சோயாவில் முழுப் புரதம் உள்ளதால், சிறிதளவு ஏதாவது ஓர் உணவுடன் சேர்க்கவும். உப்பு மற்றும் ஊறுகாய், குறைக்கவும்.

மீண்டும் ஸ்கேன்

20 - 22 வாரங்களில் பரிந்துரைக்கப்படும் ஸ்கேன் கட்டாயம் கர்ப்பிணிப் பெண்கள் எடுக்க வேண்டும். சாதாரணப் பிரச்னையில் இருந்து லீத்தல் அனாமலிஸ் என்று சொல்லப்படுகின்ற தாய் மற்றும் சேய் உயிர் வாழ்வதற்கான பிரச்னை வரை கண்டறியப்படுகிறது. எனவே, ஆரம்பத்திலேயே கர்ப்பிணிகள் தங்கள் குழந்தையை எவ்விதப் பிரச்னையும் இன்றிப் பெற்றெடுக்க வேண்டிய அல்லது தவிர்க்க வேண்டிய நிலையை அறிந்துகொள்ளலாம்.

அனாமலிஸ் தவிர இந்த ஸ்கேனில் பின்வருவனவும் கண்டறியப்படும்.

1. ஐந்து மாதத்துக்குரிய வளர்ச்சி

2. நஞ்சுக்கொடியின் இருப்பிடம்

3. பனிக்குட நீரின் அளவு

4. ரத்த ஓட்டம்

5. கர்ப்பப்பை வாய் அளவு

24 வாரங்களில் செய்யப்படும் 'ஃபீட்டல் எக்கோ’ என்ற டெஸ்ட் மூலம் குழந்தையின் இதயத் துடிப்பைக் கேட்க முடியும். சர்க்கரை நோய் கண்டறியப்பட்ட கர்ப்பிணிகள் கட்டாயம் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.

இந்த ட்ரைமெஸ்டரில் தாய்க்கு வேறு ஏதாவது உடல் நலக் கோளாறு இருந்து, அதற்காக அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்பட்டு இருந்தால், அதை மேற்கொள்ளலாம்.

நீண்ட தூரம் பேருந்தில் பயணம் செய்வதைத் தவிர்த்து ரயிலில் பயணம் செய்யலாம். வீண் வாக்குவாதங்கள், விவாதங்கள் தவிர்க்கவும். நேரம் கிடக்கும்போது நல்ல பாட்டுகள் கேட்க, மனது அமைதியடையும். பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகவும் இருக்கும்.

சர்க்கரை நோய்

கர்ப்பகால சர்க்கரை நோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிய, முதலில் 'குளுகோஸ் சேலஞ்ச் டெஸ்ட்’ (ஜி.சி.டி) எடுக்கவேண்டும். அதிக எடை கொண்டவர்கள், அதிக எடைகொண்ட குழந்தையைப் பிரசவித்தவர்கள், அடிக்கடி கர்ப்ப சிதைவுக்கு உள்ளானவர்கள் ஆகியோர் கர்ப்பமான தொடக்கத்திலேயே சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நிறை மாதக் காலத்தில் குழந்தையின் உடலில் திடீரென்று சர்க்கரையின் அளவு குறையவும் செய்யும். அதனால், குழந்தைக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே கர்ப்பிணிகள் சர்க்கரை நோயை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். கண்டறிந்து, முழுமையான சிகிச்சையும் பெற வேண்டும். பிரசவத்திற்குப் பிறகும் தாய் மற்றும் குழந்தையின் ரத்தத்தைப் பரிசோதித்து, சர்க்கரை இருந்தால் அதற்குத் தக்கபடியான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

- கரு வளரும்...