மற்ற எபிசோடுகள்
Published:Updated:

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!
##~##

''வாசம்பா! வார்த்தைகள்லதான் நீ விளையாடுவேன்னு பார்த்தா, அருமையாப் பாடவும் செய்றியே! எங்கடி கத்துக்கிட்ட... இந்த வித்தையை?''

 '' 'தலைச்சன் பிள்ளையைப் பெத்தவளுக்குத் தாலாட்டும்,

தகப்பனைப் பறிகொடுத்தவளுக்கு ஒப்பாரியும் தன்னால வரும்’

நான் சின்னப் பொண்ணா இருக்கிறப்ப, ஆயக்கார அம்பலம் வீட்டு அம்மா, ஊரே கேக்கற மாதிரி 'கணீர்’னு பாடும். அதைக் கேட்டுத்தான் எனக்கும் பாடணும்னு ஆசை வந்துச்சு.''

''அந்தம்மாவோட பேத்தி போன வருஷம் ஜூரம், சளி, இருமல்னு படுத்த படுக்கையாக் கிடந்தா. நான்கூடப் போய் பத்தியம் சொல்லிப்புட்டு வந்தேன். சின்ன வயசுலேர்ந்து விரதம் விரதம்னு இருந்து, சரியாச் சாப்பிடாம உடம்பக் கெடுத்துக்கிட்டா. வெங்காயம் பக்கமே போகவே மாட்டா. அதுல வந்ததுதான் வினை.''

''அவளோட பேரனும் பேத்தியும் எது சமைச்சாலும் அதுல வெங்காயம் வேணும்னு அடம்பிடிக்குமே. இவ மட்டும் எப்புடி வேற மாதிரி இருந்திருக்கா?’

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

''முதல்ல அப்படித்தான் இருந்தா. நான்தான் அவகிட்ட, விரதம்னு பாக்காத, ஒடம்பை முதல்ல பாருன்னு, வெங்காயத்தோட மகிமையை எடுத்துச் சொன்னேன். உடம்புக்கு நல்லதுன்னு தெரிஞ்சு, விசாலமும் வெங்காயத்தை விரும்பிச் சாப்பிட ஆரம்பிச்சு, இன்னிக்குத் தெம்பா எந்திரிச்சு உட்கார்ந்திட்டா வாசம்பா. நம்ம முனியாண்டி தோட்டத்துலேர்ந்துதான், வாரம் தவறாம கிலோக்கணக்குல வெங்காயம் விசாலம் வீடு தேடிப் போகுதாமே!''

'' 'சுவாமி இல்லேன்னா சாணியைப் பாரு, பேதி இல்லைன்னா வானத்தைப் பாரு’ங்கிற மாதிரி 'வெங்காயம் இல்லேன்னா, வியாதி வரும் பாரு’ங்கிறது நெசமால்ல இருக்கு.''

''இல்லையா பின்னே? தெனமும் காலைல முருங்கைக்கீரையை வேகவெச்சு, அதுல வெங்காயத்தைப் பொடிசா நறுக்கிப்போட்டு சூப் செஞ்சு குடிச்சா, ரத்த அழுத்தம் குறைஞ்சிடும். இன்னிக்கு பொம்பளைப் புள்ளைங்க வீட்டு விலக்கு வர்றதுக்குள்ளயே, நடக்கக்கூட முடியாம உடம்பு பெருத்துடுதுங்க. அப்புறம் ஒடம்பைக் குறைக்க ஜிம்முக்கு ஓடுதுங்க. வெறும் வெங்காயத்தைத் தெனமும் சாப்பிட்டு வந்தாலே போதும்டி. உடம்புல இருக்கிற தேவையில்லாத கொழுப்பெல்லாம் கரைஞ்சிடும். ஒல்லி உடம்புக்காரியா சிக்குன்னு ஆயிரும்டி.

''வெறும் வெங்காயத்தை மென்னு தின்னா வாயெல்லாம் நாறுமே அம்மணி?''

''வயித்துக் கோளாறுனால வாய்ல வீசுற நாத்தத்தைவிட, வெங்காயத்துனால வர்ற வாசம் எவ்வளவோ மேலு வாசம்பா. அதை முதல்ல புரிஞ்சுக்க.

பல் வலி, ஈறு வலிக்கெல்லாம் வெங்காயம்தான் அருமருந்து. வெங்காயச் சாறையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளிச்சா, ஈறுவலி ஓடிப்போயிரும். வெங்காயச் சாறைப் பஞ்சில் நனைச்சு பல் ஈறுகள்ல தடவிட்டு வந்தா, வலி இருந்த இடம் தெரியாமப்போயிரும். வயித்துக்கோளாறையும் சரிசெஞ்சிரும்.

உடல் உஷ்ணத்தைப் போக்கக்கூடிய சக்தியும் வெங்காயத்துக்கு உண்டு வாசம்பா. எப்பவும் ஏ.சி-க்குள்ள இருக்கிற மாதிரி உடம்பும் வயிறும் குளுகுளுன்னு இருக்கும். உடம்பை உறுதியாவும் வெச்சிருக்கும். கழனி வேலைக்குப் போறவங்களுக்கு வெங்காயமும், வெறும் சோறும்தான் காலை ஆகாரம்'' - வெங்காயப் பெருமையை அம்மணி வரிசையா அடுக்க,

''ஓஹோ... அதான் 'வரப்பைத் தலையணையாவும், வாய்க்காலைப் பஞ்சு மெத்தை’யாவும் நெனச்சு, காளி, கண்ணாத்தாவும் கழனியே கதியாக்கெடக்கிறாங்களோ. சரி சரி... மேல சொல்லு.''

''மாதவிடாய்க் கோளாறு, நரம்புத்தளர்ச்சி, மூல நோய், தலைவலி, ஜீரணக்கோளாறு, தொண்டை வலி அத்தனைக்கும் வெங்காயம்தான் மருந்து. தெனமும் மூணு வெங்காயத்தைச் சாப்பிட்டு வந்தாலே போதும். உடம்பு நல்லா வலுவா இருக்கும். முடி உதிர்ந்த இடத்துல வெங்காயத்தைத் தேச்சிட்டு வந்தா, முடி நல்லா வளரும். ஆறு வெங்காயத்தைத் தண்ணீருல கலக்கிக் குடிச்சா, சிறுநீர்க் கடுப்பு, எரிச்சல் போகும். சர்க்கரை நோய் இருக்கிறவங்க, வெங்காயத்தை அதிகமா சேர்த்துக்கலாம். நாய்க்கடி, பாம்புக்கடி, தேள்கடினு விஷத்தை முறியடிக்கிற குணமும் வெங்காயத்துக்கு உண்டு.  அதனால எல்லா வயசுக்காரங்களும் தெனமும் வெங்காயத்தை நிறையச் சேர்த்துக்கணும்.''

''அது சரி! எப்பவும் சோர்வாவே இருக்கே. அதுக்கு ஏதாவது வைத்தியம் சொல்லேன் அம்மணி'' என்று வாசம்பா கேட்க, புதினாப் புராணம் அரங்கேறியது.

- பாட்டிகள் பேசுவார்கள்...