Published:Updated:

முன்னோடிகள்

முன்னோடிகள்

முன்னோடிகள்
##~##

'''இந்தக் கண்டுபிடிப்பானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது; நோய்க்கிருமிகளை எதிர்க்கவல்லது; உயிர் காக்கும் மருந்தாகும் வாய்ப்புப் பெற்றது; பால்வினை நோய்களுக்கு மருந்தாக அமையும்; மருந்து உற்பத்தி நிறுவனங்களில் பெரும் புரட்சியை ஏற்படுத்தக்கூடியது; இதனைக் கண்டுபிடித்தவர் இந்த நூற்றாண்டின் இணையற்ற 100 மனிதர்களில் ஒருவராக இருக்கக்கூடிய தகுதி பெற்றவர்.'' - 1999-ம் ஆண்டில் 'டைம்’ பத்திரிக்கை இப்படி ஒரு தலையங்கம் எழுதி இருந்தது. அவர் வேறு யாரும் அல்ல. 'பெனிசிலின்’ என்னும் 'ஆன்டிபயாடிக்’ (கிருமி எதிர்ப்பு) மருந்தினைக் கண்டுபிடித்த சர்.அலெக்சாண்டர் ஃப்ளெமிங் எனும் மாபெரும் மனிதர். 

1881-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி ஸ்காட்லாண்ட் நகரில் பிறந்த ஃப்ளெமிங் பள்ளிப் படிப்பை முடித்த பின் சில வருடங்கள் ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார். 1903-ம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்து, 1906-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார். மருத்துவப் படிப்பில் சிறந்த மாணவனாகத் தேர்ச்சிபெற்ற ஃப்ளெமிங், ராணுவத்தில் மருத்துவ சேவை செய்தார்.

1915-ம் ஆண்டு சாரா என்ற செவிலியரைத் திருமணம் செய்துகொண்டார். முதலாம் உலகப் போரின்போது தன்னை முழுமையாக ராணுவ மருத்துவச் சேவையில் ஈடுபடுத்திக்கொண்டார்.

அந்தத் தருணத்தில், நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டுப் போர் வீரர்கள் இறப்பதைக் கண்ணுற்ற ஃப்ளெமிங், மனம் வருந்தி அதைத் தடுப்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபடத் துவங்கினார்.

முன்னோடிகள்

1927-ம் ஆண்டு 'ஸ்டைஃபலோகோக்கை’ (STAPHYLOCOCCI)  என்னும் நுண்ணுயிர் பற்றிய ஆராய்ச்சியில் ஃப்ளெமிங் ஈடுபட்டிருந்த சமயம் அது. அவர் தனது ஆராய்ச்சிக்கூடத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்கவில்லை. தான் வளர்த்த நுண்ணுயிரிகள் அடங்கிய பாத்திரங்களை ஆராய்ச்சிக்கூடத்தின் ஒரு மூலையில் அடுக்கிவைத்திருந்தார். ஒரு பாத்திரத்தில் ஒரு வகையான பூஞ்சைக் காளான் படர்ந்திருந்தது. அதற்கு அருகில் உள்ள நுண்ணுயிரிகள் அழிக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்த ஃப்ளெமிங், அந்தப் பூஞ்சைக் காளானைத் தனியாக எடுத்து வளர்க்க ஆரம்பித்து, நுண்ணுயிரி பற்றிய ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

பூஞ்சைக் காளானில் இருந்து பெறப்பட்ட அந்த மருந்து நிமோனியா, மூளைக் காய்ச்சல், டிப்தீரியா போன்ற பலவகை நோய்க்கிருமிகளை அழிக்கும் என்பதைக் கண்டறிந்து உணர்ந்தார். அதற்கு 'பெனிசிலின்’ என்று பெயர் சூட்டினார். இப்படித்தான் உலகின் முதல் ஆன்டிபயாடிக் மருந்தாக பெனிசிலின் தோன்றியது.

அவரது ஆராய்ச்சியில் சிறு சறுக்கல் ஏற்பட்டது. பூஞ்சைக் காளானை வளர்ப்பதும், அதிலிருந்து பெனிசிலினைப் பிரித்தெடுப்பதும் அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது. பெனிசிலின் மருந்தை ஆன்டிசெப்டிக் போல தோலின் வெளிப்புறத்திலேயே தடவிப் பயன்படுத்தியதால், அதன் வீரியமும் மிகவும் குறைவாகவே இருந்தது. இதனால், விரக்தியடைந்த ஃப்ளெமிங், பெனிசிலின் ஒரு நல்ல ஆன்டிபயாடிக்காக மாற வாய்ப்பு இல்லை என்று கருதத் தொடங்கினார். ஆனால், அவருடன் ராணுவத்தில் வேலை செய்த ஃப்ளோரி (FLOREY) மற்றும் செயின் (CHAIN)  என்பவர்கள் இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்தனர். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளின் உதவியுடன் அதிக அளவில் பெனிசிலின் தயாரித்து, காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர்.

செயின், ஃப்ளோரி இருவருடன் ஆப்ரகாம் என்பவரும் சேர்ந்துகொண்டார். மூவரும் சேர்ந்து பெனிசிலின் மருந்தைப் பிரித்தெடுப்பது மற்றும் தரமாகத் தயாரிக்கும் முறைகளைக் கண்டறிந்த பின்னர், ஃப்ளெமிங்கை அழைத்து மீண்டும் ஆராய்ச்சியைத் தொடரச்செய்தனர்.

வீரியம் மிக்க பெனிசிலின் 1940-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1945-ம் ஆண்டு சந்தைப்படுத்தப்பட்டது.

பெனிசிலின் மருந்தின் மூலம் ஃப்ளெமிங், ஃப்ளோரி மற்றும் செயின் ஆகிய மூவருக்கும் கூட்டாக 1945-ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆறாம் ஜார்ஜ் மன்னரால் 'நைட்’ விருதும் (KNIGHT)  'நைட் பேச்சிலர்’ விருதும் ஃப்ளெமிங்குக்கு வழங்கப்பட்டது.

2002-ம் ஆண்டில் பிபிசி நிறுவனம் நடத்திய வாக்கெடுப்பில் பிரிட்டனின் தலைசிறந்த 100 மனிதர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஃப்ளெமிங்கின் சிலை லாஸ்வென்டாஸ் நகரில் நிறுவப்பட்டுள்ளது.

- திரும்பிப் பார்ப்போம்...