Published:Updated:

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 07

கருவாய்... உருவாய்... அருள்வாய்...
பிரீமியம் ஸ்டோரி
News
கருவாய்... உருவாய்... அருள்வாய்... ( கருவாய்... உருவாய்... அருள்வாய்... )

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 07

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 07
##~##

மூன்றாவது ட்ரைமஸ்டர் என்பது பிரசவத்தின் தன்மையை நிர்ணயிக்கக்கூடிய முக்கியமான காலகட்டம். மூன்றாவது ட்ரைமஸ்டர் அதாவது 7, 8 மற்றும் 9 மாதங்கள் (28 - 40 வாரம் வரை) ஆகும். இதில் 28  36 வாரங்கள் வரை மாதம் இரு முறை மருத்துவரிடம் சென்று கட்டாயம் பரிசோதித்துக்கொள்ளவேண்டும்.   

அடுத்து வரும் 36  40 வாரங்கள் வரை அதாவது ஒன்பதாம் மாதம், வாரம் ஒரு முறை டாக்டரிடம் சென்று தொடர்ந்து பரிசோதனை கொள்ளவேண்டியது அவசியம்.

37 முதல் 40வது வாரங்களில் ஏற்படும் நார்மல் டெலிவரியை 'டெர்ம் டெலிவரி’ என்கிறோம். 37 வாரத்துக்குள் பிரசவம் ஏற்பட்டால் அதை 'ப்ரீடெர்ம் டெலிவரி’ என்றும், 41 வாரங்களுக்கு மேலானால் அதைப் 'போஸ்ட்டெர்ம் டெலிவரி’ என்றும் கூறுகிறாம்.

பிரசவ காலத்தில் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பது தாய்,  சேய் நலத்துக்கும், சுகப் பிரசவத்துக்குமான ஒரு முன்னேற்பாட்டு நடவடிக்கை.

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 07

பரிசோதனைகள்

தாயின் எடை, ரத்த அழுத்தம், வயிற்றில் உள்ள கருவின் வளர்ச்சி, சிறுநீரில் உப்பு, சர்க்கரை அளவு ஆகியவற்றுடன் தேவைப்படுமாயின் கூடுதல் பரிசோதனைகளும் செய்யப்படும்.

ஏழு, எட்டு, ஒன்பது மாதங்களில், 'ப்ரெக்னென்ஸி இன்டியூஸ்டு ஹைப்பர்டென்ஷன்’ (பி.ஐ.ஹெச்) மற்றும்

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 07

ஜெஸ்டேஷனல் டயாபடீஸ் மெல்லிடஸ் (ஜி.டி.எம் ) என்ற பிரச்னை ஒரு சிலருக்கு ஏற்படும். அப்போது உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதி போன்றவை வரலாம். இவர்களுக்குக் கூடுதல் மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். தாய்க்கு மிக அதிகப்படியான உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டுவிட்டால் வலிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தாய் சேய் பாதுகாப்புக் கருதி உடனடியான பிரசவம் தேவைப்படும்.  

சர்க்கரை நோயை ஏன் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்?

சர்க்கரை அதிகம் இருந்தால், அதற்கேற்றபடி உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். அதன் பின்னரும் கட்டுக்குள் வரவில்லை எனில், மருத்துவரின் பரிந்துரைப்படி இன்சுலின் ஊசி போட்டு, சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் குழந்தை மிகவும் பெரியதாகி, அதனைச் சுற்றி உள்ள நீர் அதிகரித்துவிடும். இது குழந்தைக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தி, ப்ரீடெர்ம் டெலிவரி நிகழ வாய்ப்பை ஏற்படுத்திவிடலாம். இப்படிப் பிறக்கும் குழந்தையின் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்துவிடும். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருந்தால், குழந்தை வயிற்றிலேயே இறந்துவிடும் அபாயமும் இருக்கிறது.

குழந்தையின் எடை அதிகமாக இருந்தாலும் பிரசவம் கஷ்டமான அனுபவமாக மட்டுமல்லாமல் அறுவை சிகிச்சை மூலம் மகப்பேறு நிகழும் சாத்தியம் அதிகமாகிவிடும். அதனால்தான் கர்ப்பிணிகள் சர்க்கரை நோய் வராமல் காத்துக்கொள்ள வேண்டும் அப்படித் தவிர்க்க முடியாமல் வந்துவிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்தத் தருணத்தில் உணவுக் கட்டுப்பாடு, சர்க்கரைக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவை மிகவும் முக்கியம்.

பரிசோதனைகளால் எதையெல்லாம் கண்டறிய முடியும்?

குறைப் பிரசவம் (ப்ரீடெர்ம் லேபர்) ஏற்பட வாய்ப்பு உள்ளதா, அல்லது வளர்ச்சிக் கோளாறு ஏதேனும் உள்ளதா (ஐ.யூ.ஜி.ஆர்) இன்ட்ராயூட்டரைன் குரோத் ரிடார்டேஷன் உள்ளதா என்று கண்டறிய முடியும்.

ஸ்கேன்

நவீன மருத்துவக் கருவிகளிலேயே 'ஸ்கேன்’ என்பது மகளிர் மகப்பேறு மருத்துவத்தில் ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதம். கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி மற்றும் எடை குறைவாக இருந்தால் அதை உடனே கண்டுபிடித்துவிட முடியும். பனிக்குட நீர் அதிகமாக இருந்தாலும் சரி, குறைவாகி விட்டாலும் சரி உடனடியாகக் கண்டறியலாம். குழந்தை வளரும் கர்ப்பப்பை சூழ்நிலைகளை, தன்மைகளைக் கண்டறிய முடியும்.  இப்படி, ஒன்பதாவது மாதத்தில் செய்யப்படும் ஸ்கேனில், குழந்தையின் பொசிஷன், நீர்ச்சத்து, நஞ்சுக்கொடியின் இருப்பிடம், குழந்தையின் எடை போன்றவற்றைக் கண்டறியலாம்.

குழந்தையின் வளர்ச்சி குறைவாகவோ, குழந்தையைச் சுற்றியுள்ள நீர்ச்சத்து குறைவாகவோ இருக்கும்போது, டாப்ளர் பரிசோதனையின் மூலம் குழந்தைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். 'ஹை ரிஸ்க் ப்ரெக்னென்சி’ என்று சொல்லப்படுகின்ற சிக்கலுள்ள கர்ப்பிணிகளுக்கு 36 வாரங்கள் முதல், வாரம் ஒரு முறை NST (Non Stress Test)  இது வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பை பதிவு செய்யும் க்ராப் மற்றும் AFI (Amniotic Fluid Index இது குழந்தையைச் சுற்றியுள்ள நீர்ச்சத்தின் அளவின் பரிசோதனை) செய்யப்படவேண்டும்.

கர்ப்ப காலத்தில் தாய், சேய் நலத்தை நல்ல முறையில் காத்து, சுகமான பாதுகாப்பான பிரசவத்துக்கு வழி வகுப்பதற்குக் கர்ப்ப காலப் பரிசோதனைகள் மிக அவசியம்.

- கரு வளரும்...