மற்ற எபிசோடுகள்
Published:Updated:

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!
##~##

''பத்து மணி ஆகுறதுக்குள்ள, என்ன வெயில்... அப்பப்பா... அடியே வாசம்பா'' என்று அழைத்தபடியே அம்மணி நுழைய, சோர்ந்து போய்ச் சுருண்டுகிடந்தாள் வாசம்பா.

 ''என்னாடி, ஊரு ஜனங்களுக்கே விருந்து சமைச்சுப் போடற அளவுக்குத் தெம்பாயிருப்ப... நேரம் காலம் பார்க்காம ஓடுவியே... பத்து மணியாகியும் படுக்கையைவிட்டு எந்திரிக்காமக் கிடக்கிற? என்னாச்சுடி?'' அக்கறையாகக் கேட்டாள் அம்மணி.

'தலைவலி, வயித்துவலின்னு பாடாப்படுத்துது. கண்ணுனு இருந்தா அழத்தான் செய்யும், மூக்குன்னு இருந்தா சளி ஒழுகத்தானேச் செய்யும்? என்ன ஒண்ணு, 'வைத்தியன் பிள்ளைக்கு நோவு தீராது, வாத்தியார் பிள்ளைக்குப் படிப்பு வராது’ங்கிற மாதிரி ஊருக்கே வைத்தியம் பார்க்கிற உன்கூடவே இருந்தும் இப்படிச் சோர்ந்து போயிட்டேனேனுதான் வருத்தம்.''

'''உன்னோட சோர்வைப் போக்கறதுக்கு, புதினாச் சாறு, துவையல் செஞ்சு கொண்டாந்திருக்கேன். எந்திரிச்சுச் சாப்பிடு.''

''பசியே எடுக்க மாட்டேங்குதே அம்மணி.''

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

''வெயில் காலத்துல பசிக்காதுதான் வாசம்பா. அதுக்குன்னு சாப்பிடாமலே இருந்தா, உடம்புல சத்தே இல்லாமப் போயிடுமே. உடம்பு சோர்ந்துபோனாலும், மனசை எப்பவும் தெம்பா வெச்சிக்கணும். இல்லேன்னா, படுக்கையிலயே கெடக்க வேண்டியதுதான். வியாதிக நம்மளப் பார்த்து ஓடணும்டி. பசி எடுக்கிறதுக்கும் புதினா ரொம்ப நல்லது.

புதினாவை ஆய்ஞ்சு, அரைச்சு ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்துக் கொண்டாந்திருக்கேன். காலைல வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, காலை நேரப் பித்த மயக்கம், தலைவலி, காய்ச்சல், சிறுநீர்ப்பைகளில் உள்ள கல்லடைப்பு, வயிறு, குடல் சம்பந்தமான அத்தனை பிரச்னையும் போயிடும்.''

'அது சரி அஜீரணம் ஆகுற அளவுக்கு அப்படி என்னதான்டி சாப்பிட்ட?’ என்று கேட்டபடியே அம்மணி சாறை நீட்ட, அந்தப் பாசத்தில் உருகிப்போன வாசம்பா புதினா சாறைக் குடித்தாள்.

''நேத்து, அக்கரையில இருக்குற தனத்தோட பேத்தி கல்யாணத்துல பிரியாணி சாப்பிட்டதுதான் செமிக்கலை போல...''

''ஆமா.. ஆமா... பிரியாணில... நெறைய நெய்யை விட்டுருந்தாங்க. அதுவே வயித்தைப் பிரட்டிருச்சு. ஆனா, பிரியாணிக்குத் தொட்டுக்க புதினா சட்னியை போட்டிருந்தாங்களே அதைச் சாப்பிடலையா?''

''இல்லியே...ஊர் ஜனங்க சாப்பிட்ட பிறகு, கடைசி பந்தில பிரியாணி மட்டுமே இருந்துச்சு. பசியில வளைச்சிக் கட்டிட்டேன்.''

''வாசம்பா... அடிக்கடி டீ குடிக்கிறியே. அதுலகூட டீத்தூளுக்குப் பதிலா, புதினாவை உலரவெச்சுப் பொடி பண்ணிப் போட்டுக் குடிக்கலாம். சுறுசுறுப்பு தன்னால வரும். இந்தப் பொடியைத் தண்ணீர்ல போட்டு, உப்பு சேர்த்துக் கஷாயமாச் செஞ்சு குடிச்சா, கரகரங்கிற குரல்கூட இனிமையா மாறிடும். தொண்டைக் கரகரப்பு போயிடும். மாதவிடாய்க் கோளாறைக்கூட இது சரிசெஞ்சிடும்.''

அம்மணி பேசிக்கொண்டே போக, வாசம்பா புதினாச் சாறை முழுவதுமாகக் குடித்து முடித்திருந்தாள்.

''இதோ பாரு... தோட்டத்துல இன்னிக்குப் பறிச்ச புதினாவைக் கொண்டாந்திருக்கேன்.  

புதினாவைத் தண்ணி விடாமல் அரைச்சு வெச்சுக்க. தலைவலி, தசைவலி, நரம்புவலி, கீல்வாத வலி எங்கெல்லாம் வலி இருக்கோ, அங்க, பத்து மாதிரி போடு. வலி இருந்த இடம் தெரியாம ஓடிரும்.

புதினாகூடக் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, உளுத்தம்பருப்பு, ரெண்டு காஞ்ச மிளகா போட்டு வறுத்து, புளி, உப்பு சேர்த்து அரைச்சு துவையலையும் கொண்டாந்திருக்கேன். மதியம், சாதத்துல துவையலைப் போட்டுப் பிசைஞ்சு சாப்பிடு. வாய்க் கசப்பு, வயித்து வலி, காய்ச்சல் எதுவும் இருக்காது.''

''பக்கத்து வீட்டுப் பரமசிவம், தெனமும் ராவுல இருமிட்டே இருக்காரு. அவருக்குப் புதினால ஏதாச்சும் பலன் இருக்கா அம்மணி?''

''வறட்டு இருமல், சளி, ஆஸ்துமா, எலும்புருக்கின்னு அத்தனைக்கும் புதினாவில வைத்தியம் இருக்கு வாசம்பா. புதினாச் சாறோட, வினிகர், தேன், காரட் சாறு கலந்து மூணு வேளை குடிச்சாப் போதும், உடனே குணம் கிடைக்கும். மூச்சுவிடக் கஷ்டப்படுவறங்க புதினாகூட இஞ்சி, மிளகு சேர்த்துப் பச்சடி மாதிரி செஞ்சு சாப்பிடலாம்.

தொட்டியிலகூட இந்தப் புதினாக் கீரையை வளர்த்துக்கலாம் வாசம்பா.  புதினாவோட வாசனைக்கே, பாம்பு, தேள், பூரான் எதுவும் வீட்டுக்குள்ள அண்டாது.''

''இனிமே எல்லாமே ஆனா, போனா புதினாதான் அம்மணி. எலுமிச்சம்பழம்கூட என் வீட்டுல இருக்கே...'' என்ற வாசம்பா, 'ராஜ முகத்துக்கு எலுமிச்சம்பழம்’ என்றபடியே ஒரு எலுமிச்சம் பழத்தை நீட்ட... முகர்ந்து பார்த்த அம்மணியின் முகத்தில் பளிச்.

அடுத்து என்ன.... இச்சையைத் தூண்டும் எலுமிச்சைப் புராணம்தான்!

- பாட்டிகள் பேசுவார்கள்...