Published:Updated:

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 08

கருவாய்... உருவாய்... அருள்வாய்...
பிரீமியம் ஸ்டோரி
News
கருவாய்... உருவாய்... அருள்வாய்... ( கருவாய்... உருவாய்... அருள்வாய்... )

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 08

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 08
##~##

தாயின் ஒன்பதாவது மாதத்தில் - அதாவது 38 வாரங்கள் முடிந்த பின் எந்த நேரமும் பிரசவ வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

குழந்தையின் தலை கீழே இறங்க ஆரம்பிப்பதால், தாய்க்கு மூச்சு விடுவதில் சிரமம் இருக்காது. கருப்பையின் வாய் மெதுவாகத் திறக்க ஆரம்பிக்கும் தருணம் என்பதால், அந்த இடத்திலிருந்து திரவம் கசிய ஆரம்பிக்கும். உடல் கனம் அதிகரித்துள்ளதால், இடுப்பெலும்புப் பகுதியில் அசௌகரியமும், முதுகு வலியும் இருக்கும். கால்களில், முகத்தில், உடம்பில் நீர்வீக்கம் அதிகரிக்கலாம். கால் பிடிப்பும், அடிவயிற்றில் அரித்தல் உணர்வும் ஏற்படும். கிட்டத்தட்ட பிரசவத்தை நெருங்கிவிட்ட நிலை இது. மனம் குழப்பமாகவும் கவலையாகவும் இருக்கவிடக் கூடாது. இது வாழ்க்கையில் முக்கியமான ஒரு கட்டம் என்ற புரிந்துணர்வு மிகவும் அவசியம்.

பயிற்சி

கர்ப்ப காலத்திற்கான உடற்பயிற்சிகளை முறையாகச் செய்யாவிடில் பிரசவத்தின்போது உண்டாகும் பாதிப்புகள் கடுமையானதாக இருக்கும். எனவே கவனமாகச் செய்ய வேண்டும்.

வாரம் ஒரு முறை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படும்போது சிறிய பிரச்னையாக இருந்தாலும் உடனடியாகக் கண்டுபிடித்துவிட்டால், அதை நிவர்த்திசெய்ய நேரம் கிடைக்கும்.

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 08

பிரசவம் ஆகப்போகிறது என்பதற்கான அறிகுறிகள்:

அடிக்கடி அடிவயிற்றில் வலி வரும். கொஞ்சம் கொஞ்சமாக அந்த வலி அதிகரித்து, வலியின் கால அளவும் அதிகரிக்கும். கர்ப்பப்பை வாயிலிருந்து ரத்தம் கலந்த வெள்ளைப்படுதல் ஏற்படும்.

பனிக்குட நீர் வடிய ஆரம்பிக்கும். குழந்தையின் அசைவு மிகக் குறைவாக உணரப்படும்.  

இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

பிரசவத்துக்குத் தயார் நிலை

தாய்க்கும் சேய்க்கும் தேவையான பொருட்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பதட்டம் அடையக் கூடாது. முதல் குழந்தை இருந்தால், அதை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். வீட்டில் இருந்து மருத்துவமனைக்குச் செல்லும்போது நீர் ஆகாரம் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அல்லது வயிறு காலியாக இருக்க வேண்டும். அப்போதுதான் பிரசவம் எளிதாக இருக்கும்.

மருத்துவமனையில் சேர்ந்த பிறகு...

உண்மையிலேயே பிரசவ வலியா என்பதை மருத்துவர்கள் உறுதிசெய்த பிறகு, பிரசவ நேரம் நெருங்கிவிட்டதா என்பதையும் ஆய்வு செய்வார்கள்.

பிரசவ வலி தெரியாமல் இருக்க, இப்போது மருந்துகள் வந்துவிட்டன. பிரசவ நேரத்திற்கு முன்பு செய்துவந்த மூச்சுப் பயிற்சியை திரும்பவும் செய்தால், பிரசவம் மிகவும் எளிதாக இருக்கும். பிரசவ வலி வருகையில் மருத்துவருடன் நன்றாக ஒத்துழைத்தால் பிரச்னை இன்றி சுகப் பிரசவம் நிகழும். இதை 'நார்மல் டெலிவரி’ என்பார்கள். சில சமயம் குழந்தையின் தலை இறங்குவதில் தாமதம் அல்லது,

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 08

குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படுதல் போன்ற சமயங்களில் பிரசவத்துக்கு கருவிகளை பயன்படுத்த நேரிடலாம்.

கருவியைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் சிசேரியன் செய்வார்கள். குழந்தை பெரியதாக இருந்தாலோ, நஞ்சுக்கொடி கீழே இருந்தாலோ, குழந்தையின் இருப்பு வித்தியாசமான கோணத்தில் இருந்தாலோ, தாய்க்கு இதற்கு முன்னர் முதல் குழந்தை சிசேரியன் மூலம் பிறந்திருந்தாலோ, சிசேரியன் ஆபரேஷன்தான் செய்ய வேண்டும்.

பிரசவத்துக்குப் பிறகு...

தாய் சமச்சீரான சத்தான உணவை உட்கொள்வது அவசியம். பத்தியச் சாப்பாடு அவசியம் இல்லை. எளிதாக ஜீரணிக்கக்கூடிய உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லது. நிறையத் தண்ணீர், பால் பொருட்கள், பச்சைக் காய்கறி மற்றும் பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல சத்தான உணவு சாப்பிட்டால்தான், தாய்க்குப் பால் சுரப்பு தேவையான அளவு இருக்கும்.

தாய்ப்பால்

குழந்தை பிறந்து அரை மணி நேரத்தில் தாயிடம் ஒப்படைக்கப்படும். உடனே தாய் பாலூட்ட ஆரம்பித்துவிட வேண்டும்.

தாய்ப்பால் முதல் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தண்ணீர்போல இருக்கும். இதனைச் சீம்பால் அல்லது கொலஸ்ட்ரம் என்பார்கள். சிலர் இதைக் குழந்தைக்குத் தரக் கூடாது என்பார்கள். இது தவறு. இந்தப் பால்தான் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரவல்லது. இதனை நோய்த்தடுப்பு மருந்து என்றே சொல்லலாம். சிலர் சர்க்கரைத் தண்ணீரைத் தரச் சொல்வார்கள். அது தவறு.

குழந்தை பால் குடிக்கக் குடிக்கத்தான் தாய்க்கு நன்றாகப் பால் சுரக்கும்.

வீட்டுப் பெரியவர்கள் குழந்தையை எந்த நிலையில் ஏந்திப் பாலூட்ட வேண்டும் என்பதைச் சொல்லித்தர வேண்டும்.

முதலில் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை குழந்தைக்குப் பால் தர வேண்டும். அதற்குப் பசி எடுக்கும்போதெல்லாம் தர வேண்டும். குழந்தை தூங்கும்போது தாயும் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும்.

தாய் 5-ல் இருந்து 6 வாரங்கள் வரை குழந்தைக்கு முழுக்க முழுக்கத் தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். தனியாகத் தண்ணீரோ வேறு எந்தப் பாலோ தர வேண்டியது இல்லை.

குழந்தை நோய்நொடி இல்லாமல் இருக்க ஒரு வருடம் வரை தாய்ப்பால் தருவது முக்கியம். இது வாழ்நாள் முழுவதும் அந்தக் குழந்தைக்கு நோயற்ற வாழ்க்கை கிடைக்க உதவும். இதுவே தாய் தன் குழந்தைக்கு தரும் மிகப் பெரிய சொத்து.

வேலைக்குச் செல்லும் பெண்கள் முடிந்தவரை விடுமுறை எடுக்கலாம். கட்டாயம் 3-லிருந்து 6 மாதங்கள் வரை குழந்தையை அருகில் இருந்து கவனிக்கவேண்டியது அவசியம்.

பயிற்சி

நார்மல் டெலிவரிக்கு 2 வாரங்கள் கழித்தும், சிசேரியன் என்றால் 4-ல் இருந்து 6 வாரங்கள் கழித்தும் உடற்பயிற்சியை ஆரம்பிக்கலாம். பயிற்சி செய்வதன் மூலம் தளர்வான வயிறு இயல்பான நிலைக்கு வந்துவிடும்.

ஒரு குழந்தையின் பிறப்பு தாய்க்கும் மறுபிறப்பைப் போன்றதுதான். தன்னையும் பேணி தன் வாரிசையும் பேணி வாழையடி வாழையாய் வம்சங்கள் தளைக்கட்டும்!

இனி, சுகப் பிரசவ பிராப்திரஸ்து!

நிறைவடைந்தது.

தொகுப்பு: உமா ஷக்தி

 பிரசவ நேரம்  நெருங்கும்பொழுது...

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 08

குழந்தையின் தலை கீழே திரும்பி, இடுப்பு எலும்புக் கூட்டுக்குள் இறங்கி விடுகிறது. அவ்வாறு இறங்கினால்தான், இயற்கையான முறையில் பிரசவம் ஆகும்.

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 08

 தகுந்த நீர்ச் சத்து குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. அது குறையும்பொழுது குழந்தையின் உயிர்த்துடிப்புக்கே ஆபத்தாகிறது.

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 08

 தாயின் ரத்த அழுத்தம் இந்தச் சமயத்தில் சீராக 120/80ல் இருக்க வேண்டும். சிலருக்கு 38 வது வாரம் நெருங்கும்போதுதான் கை, கால், முகத்தில் வீக்கம், உப்புச் சத்து அதிகரித்தல், ரத்த அழுத்தம் அதிகரித்தல், மூச்சுத் திணறல், அளவுக்கதிகமான வியர்வை, இதயப் படபடப்பு, தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் உண்டாகும். கர்ப்பகாலப் பராமரிப்பு ஒவ்வொரு கருவுற்ற தாய்க்கும் மிகவும் இன்றியமையாததாகும்.