Published:Updated:

முன்னோடிகள்

முன்னோடிகள்

முன்னோடிகள்
##~##

ருமுறை நோபல் பரிசு பெற்றாலே உச்சி முகர்ந்து மெச்சும் உலகம். அதுவே, இருமுறை நோபல் பரிசு பெற்றால், ஆகாய அளவில் அந்தஸ்து கூடுவது சகஜம்தானே! அத்தகைய அந்தஸ்துக்கு உரியவர்தான் மேரி கியூரி. இரு வெவ்வேறு துறைகளில் நோபல் பரிசுகளைப் பெற்றவர்.

 1867-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி, போலந்து நாட்டின் பார்சா பகுதியில் பிறந்தவர் மேரி கியூரி. பெற்றோருக்கு ஐந்தாவது பிள்ளையாகவும், கடைக்குட்டியாகவும் பிறந்த மேரி கியூரி, தன் இளமைக் காலத்தில் சந்தித்த துன்பங்கள் ஏராளம். 1883-ம் ஆண்டு தங்கப் பதக்கம் பெற்றுப் பட்டப் படிப்பு முடித்தார். ஆனால், பெண்கள் மேற்படிப்புப் படிக்கத் தடைபோட்டது ரஷ்ய அரசு. எனவே கியூரி, போலந்து நாட்டினரால் 'பறக்கும் பல்கலைக்கழகம்’ என அழைக்கப்படும் பள்ளிகளில் திருட்டுத்தனமாகப் படித்தார்.

காலையில் படிக்கச் செல்வது, மாலையில் டியூஷன் மூலம் சம்பாதிப்பது எனத் தனது வாழ்க்கையைக் கடத்திய கியூரி, 1893-ம் ஆண்டு இயற்பியலில் பட்டம் பெற்றார். பிறகு தொழில் ஆராய்ச்சிக்கூடம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டே 1894-ம் ஆண்டு இரண்டாவது பட்டமும் பெற்றார்.

இயற்பியல் மற்றும் வேதியியல் விரிவுரையாளராகப் பணிபுரிந்த பியரி என்பவர் மேரி கியூரியின் ஆராய்ச்சியில் துணையாக ஈடுபட வந்தார்; பிறகு கியூரியின் வாழ்க்கைத் துணையாகவும் ஆனார்.

முன்னோடிகள்

தனது ஆராய்ச்சிகளின் மூலம் 'யுரேனியக் கதிர்கள் மூலக்கூறுகள் மாற்றத்தால் நிகழ்வதில்லை; அது அணுவிலிருந்து புறப்படுகிறது’ என்று மெய்ப்பித்தார். அணுவைப் பிளக்க முடியாது என்று அதுவரை நிலவி வந்த அறிவியல் கருத்தைப் பொய் என்று 'பிளந்த’வர் மேரி கியூரி.

தனது தொடர் ஆராய்ச்சிகளின் மூலம் யுரேனியத் தாதுவைக் காட்டிலும் 'தோரியம்’ என்ற தாது அதிகக் கதிரியக்க சக்திகொண்டது என்பதைக் கண்டறிந்தார். மேலும் ஆராய்ச்சிகள் செய்து, இரு கதிரியக்கத் தாதுக்களை மேரி கியூரி கண்டறிந்தார். ஒரு தாதுவிற்குப் 'பொலேனியம்’ என்றும், கதிரியக்க ஆற்றல் அதிகம் கொண்ட மற்ற தாதுவிற்கு 'ரேடியம்’ என்றும் பெயரிட்டார் கியூரி.

ரேடியத்தைத் தனி உலோகமாகப் பிரித்தெடுப்பது என்பது மிகவும் சிரமமான காரியமாக இருந்தது. தனது கணவருடன் இணைந்து 'கிரிஸ்டலைசேஷன்’ எனும் முறையில் 1910-ம் ஆண்டு ரேடியத்தைத் தனியாகக் கண்டெடுத்தது கியூரியின் இமாலய சாதனை. ஆனால், கடைசி வரை பொலேனியத்தை தனியாகப் பிரிக்க அவரால் முடியவில்லை.

கதிரியக்கத்தில் சிறந்த ஆராய்ச்சி செய்ததற்காக மேரி கியூரி, பியரி கியூரி, ஹென்றி பெக்கரெல் மூவருக்கும் கூட்டாக இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை மேரி கியூரி பெற்றார்.

1906-ம் ஆண்டு சாலை விபத்தில் பியரி இறந்துவிட அவர் வகித்து வந்த இயற்பியல் பேராசிரியர் பதவி மேரி கியூரிக்கு வழங்கப்பட்டது. அதன் மூலம் உலகின் முதல் பெண் பேராசிரியராக உருவெடுத்தார்.

1911-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசைத் தனியாக மீண்டும் பெற்றார் கியூரி. ரேடியம், பொலேனியம் உலோகங்களைக் கண்டறிந்ததற்காகவும் ரேடியம் உலோகத்தைத் தனியாகப் பிரித்து எடுத்ததற்காவும் இந்த விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் உலகில் இரு நோபல் பரிசு வென்ற முதல் மனிதரானார் கியூரி. மேலும் இரு வேறு துறைகளில் (இயற்பியல், வேதியியல்) நோபல் பரிசு பெற்ற இருவரில் ஒருவரானார். (பின்னாளில் லினஸ் பாலிங் என்பவருக்கு அமைதி, வேதியியல் என்ற இரு துறைகளில் நோபல் பரிசு வழங்கப்பட்டது).

இவ்வளவு பெருமைகளுக்கு உரியவரான மேரி கியூரி, தனது கதிரியக்க ஆராய்ச்சிகளாலேயே உயிரை இழந்தார் என்பது ஜீரணிக்க முடியாத ஒன்று. 1934-ம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி  ரத்தப் புற்றுநோயால் தனது உயிரைப் பறிகொடுத்தார் கியூரி. இந்நாளில் இருப்பதுபோல தற்காப்புக் கவசங்கள் பயன்படுத்தாமல் சாதாரணமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டதால், கியூரிக்கு இந்நிலை ஏற்பட்டது.

ஆராய்ச்சிக்காகவே தன் உயிரைத் தந்த மேரி கியூரியின் அர்ப்பணிப்பு உணர்வு என்றென்றுமே நம்மை மெய்சிலிர்க்கவைக்கும்.

- திரும்பிப் பார்ப்போம்...

 காரியம்... காரீயம்!

1890-ம் ஆண்டுகளில் மேரி கியூரி எழுதிவைத்த குறிப்புகள் உள்ள காகிதங்கள், கதிரியக்க அபாயங்கள் விளைவிக்கக்கூடியதாகக் கருதப்பட்டு, இன்றும் காரீயப் பெட்டிகளில் வைக்கப்பட்டு உள்ளன. அதில் இருந்து குறிப்பெடுக்க விரும்புவர்கள் காரீய உடைய அணிந்து சென்றுதான் குறிப்பெடுக்க வேண்டும்.