Published:Updated:

குட் நைட்

குட் நைட்

குட் நைட்
##~##

'கண்ணுக்குள் நூறு நிலவா... இது ஒரு கனவா..?’ என்ற பாடலைக் கூர்ந்து கேட்டிருக்கிறீர்களா? அதில், குறிப்பாக 'ஆணின் துடிப்பு அடங்கிவிடும்... பெண்ணின் தவிப்போ தொடங்கிவிடும்’ என்ற ஒரு வரி வரும். ஆனால், எல்லா ஆண்களுக்கும் இது பொருந்தாது; 

உலகம் முழுவதும் குறிப்பிட்ட சதவிகித ஆண்கள், 'அந்த’ விஷயத்தில் அவசரக்காரர்களாகத்தான் இருக்கிறார்கள். அதனை வழிமொழிகிற பாடல்தான் இது.

இந்த இதழில் ஒரு சில பெண்களுக்கு ஏற்படும் உச்சக்கட்ட செக்ஸ் பிரச்னைக் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

சில பெண்களுக்கு மனதில் ஆர்வ அலை அடிக்கும், காமத்தின் விரல்கள் வயலின் வாசிக்கும், உறுப்புகளின் உரசல் உணர்வுகளைத் தூண்ட, 'அந்த’ தருணம் பெண் உறுப்பில் இருந்து நீரும் ஊறும். ஆ...னா...ல் எவ்வளவு நேரம் உறவில் ஈடுபட்டாலும் அந்தப் பெண் உச்ச நிலையை அடையவே மாட்டார். இத்தகைய செக்ஸ் பிரச்னைக்கு Female orgasmic dysfunction என்று பெயர். எப்போதேனும் இதுபோன்ற நிலை இருந்தால் பரவாயில்லை.  எப்போது கூடினாலும் இதே நிலைமைதான் என்றால் அது கலங்கடிக்கும் நிலவரம்தானே?

குட் நைட்

இந்தச் சிக்கல் இருக்கும் பெண்களில் பலர் இதுபற்றி, தங்கள் கணவனிடம்கூட வெளிப்படையாகச் சொல்வது இல்லை என்பதுதான் இதில் இருக்கும் உலகியல் தொல்லை.

இதில் இன்னொரு ரகப் பெண்களுக்கு, செக்ஸில் எது உச்சக்கட்டம் என்றே தெரியாது. தெரிந்தால்தானே தனக்கு உள்ள சிக்கலை அறிவதற்கு?

இப்படி ஒரு செக்ஸ் பாதிப்பு, தனக்கு இருப்பதை, செக்ஸ் உறவின்போது ஏதோ ஒன்று தனக்குள் மிஸ் ஆவதைப் போல உணருவார்கள். மனசுக்குள் எப்போதும் விரக்தி, எரிச்சல், கோபம் எட்டிப்பார்க்கும். சின்னச் சின்னப் பிரச்னைகளுக்குக்கூட சுற்றி இருப்பவர்களிடம் கோபத்தைக் காட்டுவார்கள். இதுவே தொடர்கதையானால்... நாளடைவில் மனசுக்குள் தங்கிவிட்ட எரிச்சல் காரணமாகவும் செக்ஸ் மீதே வெறுப்பு வந்துவிடும். இதனால், கணவன் ஆசையோடு அழைத்தால்கூட ஏதேனும் காரணம் கூறி செக்ஸ் உறவையே தவிர்க்கிற நிலைக்கு வந்துவிடுவார்கள்.

பெண்கள் உச்ச நிலையை அடைய முடியாததற்கு உடல் மற்றும் மனரீதியான காரணங்கள் இருக்கலாம்.

உடல்ரீதியான காரணங்கள்:

பிறவியிலேயே பிறப்பு உறுப்பில் குறைபாடு இருப்பது, முதுகுத் தண்டில் குறைபாடுகள், டெஸ்டோஸ்டீரோன் என்ற ஹார்மோன் சரிசமமற்று இருப்பது, பிட்யூட்டரி, தைராய்டு, அட்ரினல், ஓவரி... போன்ற சுரப்பிகள் சரியாக வேலை செய்யாததினால் ஏற்படுகிற ஹார்மோன் குறைபாடுகள். மேலும், மனநலக் குறைபாடு, வலிப்பு நோய், இதய நோய் போன்றவற்றுக்குச் சாப்பிடுகிற சில குறிப்பிட்ட மருந்துகளின் பக்க விளைவுகளாலும் இப்படி ஏற்படலாம்.

போதை பழக்கத்துக்கு அடிமையான பெண்கள் செக்ஸில் உச்சக் கட்டத்தை அடையாமல் போகலாம்.

மனரீதியான காரணங்கள்:

சிறு வயதில்... பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தப்பட்டு பாதிப்பு அடைந்த பெண்கள், பெரியவர்களாகி திருமணம் ஆன பின்பு செக்ஸ் உறவில் பிரச்னை ஏற்படலாம்.

தனக்கு செக்ஸில் திருப்தி கிடைக்குமா? தன் கணவனுக்கு முழுமையான இன்பத்தை தர முடியுமா? என்கிற பயம், தொடர் மன அழுத்தம் போன்றவற்றால்கூட செக்ஸில் உச்சக்கட்ட நிலைக்குப் போகமுடியாமல் போகலாம். மேலும், கணவன் - மனைவி இடையே தொடரும் சண்டை சச்சரவுகள் காரணமாகவும் இந்த நிலை தோன்றலாம். பெரும்பாலும், எதையும் மனம்விட்டுப் பேசிக்கொள்ளாத தம்பதிகளில்... மனைவிக்கு மட்டும் இப்படி ஒரு நிலைமை ஏற்படும்.

செக்ஸ் என்பது குழந்தை பெற்றுக்கொள்ள மட்டும்தான் என்று கருதுகிற பெண்ணும் உச்ச நிலையை அடைவது இல்லை.

40 அல்லது 45 வயது அடைந்த பெண்களில் சிலர், 'குழந்தைகள் வளர்ந்துவிட்டனர்... இன்னமே இதெல்லாம் எதற்கு..?’ என்று செக்ஸில் ஆர்வம் காட்டுவதில்லை.  இத்தகைய மனவோட்டம் உள்ள பெண்களும் செக்ஸில் உச்ச நிலையை அடைய மாட்டார்கள்.

- இடைவேளை...

 இந்தப் பிரச்னைக்கு என்ன சிகிச்சை?

காரணங்களைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும். உடல்ரீதியான காரணங்கள் எனில், மருந்து, மாத்திரை, ஹார்மோன்தெரபி போன்றவை தர வேண்டும். சிலருக்குப் பாலுறுப்பில் பிறவிக் குறைபாடு என்றால் அறுவைசிகிச்சை தேவைப்படும். மனரீதியான காரணங்கள் என்றால், கவுன்சிலிங், செக்ஸ்தெரபி, சப்போர்ட்டிவ் சைக்கோதெரபி போன்ற செக்ஸ் தொடர்பான உளவியல் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். கணவன் - மனைவிக்கு இடையே தொடர்ந்து இருக்கிற சச்சரவுதான் என்றால் மேரிட்டல்தெரபி அளிக்கப்பட வேண்டும்.

ஆண்களுக்கு ஆலோசனை..

செக்ஸ் உறவில், மனைவிக்குத் தன்னால் இன்பம் கிடைத்ததா என்பதைத் தெரிந்துகொள்ளவும், தான் இன்பம் பெற்றதையோ அல்லது பெறாததையோ புரிய வைக்கவும், ஏதேனும் பிரச்னையா என்பதை வார்த்தை பரிமாற்றம் மூலம் அறிந்து, புரிந்து அதற்கேற்ப செயல்படவேண்டும். செக்ஸில் உச்ச நிலையை அடையாத பெண்ணுக்கு முதல் மருந்து, ஆறுதல், சிகிச்சை எல்லாமே கணவன் மனைவியைப் புரிந்துகொள்வதில் இருந்துதான் தொடங்குகிறது!