முன்னோடிகள்

##~## |
மருத்துவ உலகின் மாபெரும் அதிசயங்களில் ஒன்றான எக்ஸ்-ரேவுக்கு அடித்தளம் இட்டவர் வில்ஹெம் கான்ராட் ரான்ட்ஜென் (Wilhelm Conrad Rontgen).
ஜெர்மனி நாட்டின் 'லென்னப்’ (Lennep) எனும் ஊரில் 1845-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி ரான்ட்ஜென் பிறந்தார். பள்ளிப் படிப்பின்போது அவரும் விளையாட்டுப் பிள்ளைதான். படிப்பதைக் காட்டிலும் மலைகள், காடுகளைச் சுற்றி இயற்கையை ரசிப்பதற்கே பெரிதும் விரும்பினார்.
1865-ம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் சேர்ந்து பட்டப் படிப்பை முடித்து, 1869-ல் பிஹெச்.டி ஆராய்ச்சிப் பட்டம் பெற்றார். படிப்பிலும் வேலையிலும் ஓர் இடத்தில் நிலையாக இருக்கவில்லை. 1874-ல் விரிவுரையாளர், 1875-ல் விவசாயத் துறைப் பேராசிரியர், 1876-ல் இயற்பியல் பேராசிரியர் என வெவ்வேறு தளங்களில் பணியாற்றினார் ரான்ட்ஜென்.
இவரது முதல் ஆராய்ச்சி, வெப்பத்தினால் வாயுக்களின் நிலையில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றியதுதான். பிறகு கிறிஸ்டல்கள் வெப்பத்தைக் கடத்துவதுபற்றியும் அவற்றின் மின்சாரத்தன்மைபற்றியும் ஆராய்ச்சி செய்தார்.

வெவ்வேறு ஆராய்ச்சிகளில் ரான்ட்ஜென் ஈடுபட்டு இருந்தாலும், அவர் உலகப் புகழ்பெற்றது எக்ஸ்-ரேயைக் கண்டுபிடித்த பிறகுதான்.
1895-ல், குறைந்த அழுத்தத்தில் உள்ள வாயுவின் ஊடாக மின்சாரத்தை செலுத்தினால் ஏற்படும் மாற்றங்கள் பற்றி ஆய்வு செய்தார். அதே ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, இருட்டறையில் தனது ஆய்வுகளை மேற்கொண்ட ரான்ட்ஜென், 'பேரியம் பிளாட்டினோ சயனைடு’ எனும் வேதிப் பொருள் தடவப்பட்ட திரையைவைத்து ஆராய்ச்சி செய்தார். அப்போது இரண்டு மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு பென்சிலின் நிழல் ஒளிர்வதைக் கண்டார். உடனே பல்வேறு தடிமன்களில் பொருட்களை வைத்து அந்தக் கதிர்களை ஆராய்ச்சி செய்து, ஒவ்வொரு தடிமனும் ஒவ்வொரு நிழலை (பிம்பத்தை) உருவாக்குகின்றன என்பதைக் கண்டறிந்தார்.
இதற்கு எக்ஸ்-ரே என ரான்ட்ஜென் பெயரிட்ட காரணம் விசித்திரமானது. பொதுவாக, கணிதத்தில் தெரியாத ஒரு எண்ணை 'X’ என வைத்துகொள்வது போல, இந்தக் கதிர்களின் பண்புகளை உடனடியாக அறிந்திராத நிலையில் ரான்ட்ஜென் 'எக்ஸ்-ரே’ எனப் பெயரிட்டார். பிற்காலத்தில் இந்தக் கதிர்களின் பண்புகளை உணர்ந்த அறிவியல் நிபுணர்கள் ரான்ட்ஜெனைக் கௌரவிக்கும்பொருட்டு 'ரான்ட்ஜென் கதிர்கள்’ எனப் பெயரிட்டனர். ஆனாலும், இன்றுவரை அதற்கு 'எக்ஸ்-ரே’ என்ற பெயர்தான் நிலைத்து நிற்கிறது.
'மருத்துவ கதிரியக்கத்தின் தந்தை’ எனப் போற்றப்படும் ரான்ட்ஜென், 1901-ம் ஆண்டு நோபல் பரிசும் பெற்று, இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற உலகின் முதல் மனிதர் எனும் பெருமையும் பெற்றார். எக்ஸ்-ரே பற்றி மூன்று கட்டுரைகள் வெளியிட்ட ரான்ட்ஜென், ரம்ஃபோர்டு பதக்கம், எலியட் கிரசன் பதக்கம் போன்ற பல விருதுகளைப் பெற்றிருந்தாலும், இயற்பியல் மற்றும் வேதியியலுக்கான உலகக் கூட்டமைப்பு தனிமம் எண் 111-ஐ ரான்ட்ஜனீயம் என்று பெயரிட்டது அவருக்குக் கிடைத்த மாபெரும் கௌரவம்.
இவ்வளவு புகழ்பெற்ற ரான்ட்ஜன், காரீயத்தைப் பயன்படுத்தினால் எக்ஸ் கதிர்கள் ஊடுருவ வாய்ப்பு இல்லை என்பதையும் கண்டறிந்தார். இன்றளவும் எக்ஸ்ரே எடுக்கும் பணியாளர்களும் டாக்டர்களும் காரிய உறையைத்தான் பயன்படுத்திவருகிறார்கள்.
1923-ம் ஆண்டு குடல் புற்றுநோய் காரணமாக ரான்ட்ஜென் மரணம் அடைந்தார். இப்புற்றுநோய் கதிரியகத்தின் பக்க விளைவுகளால் ஏற்படவில்லை. ஏனெனில் மிகக் குறுகிய காலமே இந்த ஆராய்ச்சியில் ரான்ட்ஜன் ஈடுபட்டு இருந்தார். அவர் காரீயத் தடுப்புகளையும் பயன்படுத்தினார். (மேரி கியூரி காரீயத் தடுப்புகள் பயன்படுத்தாததால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவரது ஆராய்ச்சிக் காலமும் அதிகம்).
தனது அரிய கண்டுபிடிப்பால் மருத்துவ உலகின் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ரான்ட்ஜென், தனது கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை கோரவில்லை. 'எக்ஸ்-ரே ஏழை மக்களுக்குப் பயன்பட வேண்டும். அதற்கு காப்புரிமைத் தேவையில்லை. அதை ரான்ட்ஜென் கதிர்கள் என்று அழைக்க வேண்டிய அவசியமும் இல்லை’ என பெருந்தன்மை காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
- திரும்பிப் பார்ப்போம்...