Published:Updated:

முன்னோடிகள்

முன்னோடிகள்

முன்னோடிகள்
##~##

பிறந்த குழந்தைக்குத் தடுப்பு ஊசி போடுவதற்கு, ஒரு கையில் கால அட்டவணையையும், மறு கையில் குழந்தையைத் தோளில் சாய்த்தபடியும் மருத்துவமனையில், தாய்மார்கள் வரிசையில் காத்துக்கிடப்பது வழக்கமான காட்சி. 

இப்படிப்பட்ட முக்கியமான தடுப்பு ஊசி முறையைக் கண்டுபிடித்த மருத்துவ முன்னோடி எட்வர்ட் ஜென்னர், 1749-ம் ஆண்டு மே மாதம் 17-ம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். குடும்பத்தில் எட்டாவது பிள்ளையாகப் பிறந்த இவர்தான் மருத்துவ உலகில் யாரும் எட்டாத சிகரத்தை எட்டிப்பிடித்தவர்.

பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பலிவாங்கிய பெரியம்மை நோய் (Small Pox), அந்தக் காலத்தில் குணமாக்க இயலாத கொடிய வியாதியாகக் கோரத் தாண்டவம் ஆடியது. இந்தக் கொடிய நோய் சற்று விசித்திரமானது.

முன்னோடிகள்

பெரியம்மை நோயை உருவாக்கும் 'வேரியோலா’ என்ற வைரஸை தோலில் செலுத்தினால் நோய்த்தடுப்பு ஏற்படும் என்று உணர்ந்த மருத்துவர்கள் அதுபற்றி அரச குடும்பத்துக்கு எடுத்துச் சொன்னார்கள். ஆங்கிலத்தில் 'இனோகுலேஷன்’ என்றழைக்கப்படும் இந்த சிகிச்சை, அப்போது பள்ளிச் சிறுவனாக இருந்த எட்வர்ட் ஜென்னருக்கும் அளிக்கப்பட்டது. இதனால் அவருக்கு ஏற்பட்ட உடல் உபாதைகள் ஏராளம். இந்த அனுபவமே, ஜென்னருக்கு, பின்னாளில் ஒரு பாதுகாப்பான மாற்று வழியைக் கண்டுபிடிக்கத் தூண்டுகோலாக இருந்திருக்கலாம்.

இளம்வயதில் பறவைகள், வயல்வெளிகள், இயற்கை எழில்பற்றி ஆராய்ச்சிசெய்துவந்த ஜென்னர், 14 வயதில் ஓர் அறுவை சிகிச்சை நிபுணரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். 21 வயதில் தனது மருத்துவப் படிப்பை ஜான் ஹண்டர் என்ற புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரிடம் படித்தார். 23 வயதில் தனது சொந்த ஊரான பெர்க்லியில் மருத்துவச் சேவையினைத் தொடங்கிய ஜென்னர், அங்குதான் முதன்முறையாகப் பொதுமக்களுக்கு பெரியம்மை தடுப்பு ஊசியை 'இனோகுலேஷன்’ முறையில் செலுத்தினார்.

வைரஸ் நோயினால் பசுக்களின் மடிக் காம்புகளில் கொப்பளங்கள் ஏற்படுவது உண்டு. பெரியம்மை போலவே 'கௌ பாக்ஸ்’ என்று அழைக்கப்படும் இந்தக் கொப்பளங்களால் பசுக்களுக்கு அதிகப் பாதிப்பு ஏற்படாது. ஆனால், இந்த நோய் பால் கறக்கும் பெண்களின் விரல்களில் பரவினாலும், அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தாமல், குணமாகியது. மேலும் இந்த 'கௌ பாக்ஸ்’ நோய் வந்தவர்களுக்குப் பெரியம்மை நோய் ஏற்படவில்லை. இந்தப் பேச்சுவழக்குச் செய்தியை அறிவியல்ரீதியாக ஜென்னர் ஆராயத் தொடங்கினார். 'கௌ பாக்ஸ்’ மற்றும் பெரியம்மை குறித்து சில அறிவியல் உண்மைகளை உலகுக்கு உணர்த்தினார்.

 ஒருவருக்கு 'கௌ பாக்ஸ்’ நோய் தாக்கப்பட்டு, உடலில் அதற்கேற்ற நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிய பின் அவருக்கு பெரியம்மை நோய் தாக்குவது இல்லை.

 பெரியம்மையைத் தடுக்கும் வைரஸைச் செலுத்துவதற்குப் பதிலாக, 'கௌ பாக்ஸ்’ வைரஸைச் செலுத்தினாலும், பெரியம்மை நோய் தடுக்கப்படும். இந்தத் தடுப்பு முறைக்கு 'வேக்சினேஷன்’ எனப் பெயரிட்டார் ஜென்னர்.

எட்வர்ட் ஜென்னரைக் கௌரவப்படுத்தும் வகையில், அனைத்து நோய்த் தடுப்பு ஊசிகளும் இன்று வரை 'வாக்சினேஷன்’ என்றே அழைக்கப்படுகின்றன. 1803-ம் ஆண்டு 'ஜென்னர் நிலையம்’ என்ற பெயரில் ஆராய்ச்சிக்கூடத்தைத் தொடங்கினார்.

1823 ஜனவரி 26-ம் தேதி ஜென்னர் மறைந்த பிறகு, அவர் வாழ்ந்த வீடு அருங்காட்சியமாகவும், அவர் முதன்முறையாக தடுப்பு ஊசி மருந்து எடுத்த பசுவின் கொம்புகளும் (அந்தப் பசுவின் பெயர் பிளாஸம்) இன்றும் பாதுகாக்கப்படுகின்றன.

பெரியம்மை தடுப்பு ஊசியால் 1979-ம் ஆண்டு பெரியம்மை நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

'தடுப்பு மருத்துவத்தின் தந்தை’ என்று அழைக்கப்படும் எட்வர்ட் ஜென்னர், வியாபாரநோக்கில் தனது கண்டுபிடிப்பிற்குக் காப்புரிமை கோராமல், அனைவருக்கும் மருந்தை இலவசமாக வழங்கியதால் மனிதப் பண்புகளின் உச்சமாகவும் மதிக்கப்படுகிறார்.

- திரும்பிப் பார்ப்போம்...

 பாதுகாப்பும் பயங்கரமும்

உலகில் முற்றிலும் அழிக்கப்பட்ட பெரியம்மை வைரஸ்(Variola virus) அமெரிக்க நாட்டின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டா நோய்த்தடுப்பு மையத்திலும், ரஷ்யாவில் உள்ள ஒரு வைரஸ் ஆராய்ச்சி மையத்திலும் இந்தக் கொடிய வைரஸ் உச்சகட்டப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. பாதுகாப்பை மீறி இந்த வைரஸை தீவிரவாதிகள் கைப்பற்றினால், பயோடெரரிசம் எனப்படும் ஒருவகை தீவிரவாதம் நிகழ்த்தப்படலாம் என்பது உலக மக்களின் அச்சம்.