Published:Updated:

குட் நைட்

குட் நைட்

குட் நைட்
##~##

'ஒரு உணவு சுவையாக இருக்க, என்ன செய்ய வேண்டும்?’

 'சுவையாக சமைக்க வேண்டும்.’

ஆனால், 'சுவையாக’ சமைப்பது எப்படி?  

படுக்கையறைக்கும், அடுப்பங்கறைக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? தேவையான பொருட்களைக்கொண்டு ஒரு உணவை சமைப்பதற்கு இணையானதுதான் ஒரு பெண்ணை ஓர் ஆண் கலவிக்குத் தயார்ப்படுத்துவதும்... அந்தப் பெண் தயாராவதும்.

எந்த ஒரு செயலிலும் 'எடுத்தேன்... கவிழ்த்தேன்...’ என்று செயல்படக் கூடாது என்பார்கள். அதுபோல், செக்ஸ் நடவடிக்கையிலும் முறையாக செயல்பட்டால்தான் இல்லறக் கரை முழுதும்... சந்தோஷ அலை புரளும்.

அப்படி எல்லாருக்கும், எல்லாமும், எப்போதும் அமைந்துவிடுகிறதா என்ன?

சில பெண்கள் உடல்ரீதியில்ஆரோக்கியமும் அழகும் ததும்புபவர்களாக இருப்பார்கள். மனதில்  ஆர்வக் கொடியையும் பறக்கவிடலாம். ஆண் தொட்டதும் உணர்ச்சிகள் ஜிவ்வென்று தங்க விமானத்தில் பயணிக்கலாம். ஆனால்... அவர்களுக்கே தெரியாத ஒரு குறைபாடு அந்த நிமிஷத்தை சந்தோஷமற்றதாக்கிவிடும்.

குட் நைட்

பொதுவாக எல்லா பெண்களுக்கும் உடல் உறவு சமயத்தில் பெண் பிறப்புறுப்பில் நீர் ஊறிவரும். இயல்பான, எளிதான, உராய்வற்ற உடல் உறவுக்காக இயற்கையின் ஏற்பாடுதான் இந்தப் பிறப்புறுப்பில் நீர் சுரப்பு.

வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையாக... சில பெண்களுக்கு பெண் உறுப்பில் நீர் ஊறாமல் (Lack of lubrication)இருக்கும் நிலையை செக்ஸ் மருத்துவம்... 'இன்ஹிபிடெட் ஃபீமெல் செக்ஸுவல் எக்ஸைட்மென்ட்’ என்றழைக்கிறது.

பெண் பிறப்புறுப்பின் முன்பாக இருக்கும் ஆர்கஸ்மிக் பிளாட்ஃபார்ம் என்கிற பகுதி உடல் உறவு சமயத்தில் உணர்ச்சிவசப்படுவதால் சிறிது உப்பலாகும். இந்த நிலை எல்லாப் பெண்களுக்கும் உடல் உறவு சமயத்தில் நிகழும். ஆனால், பிரச்னை உள்ள பெண்களுக்கு உடல் உறவு சமயத்தில் நீர் சுரப்பு இல்லாமல் போவதுடன், ஆர்கஸ்மிக் பிளாட்ஃபார்மின் முன் பகுதி உப்பவும் செய்யாது.

இயல்பான உராய்வுத் தன்மை ஏற்படாமல் பிறப்புறுப்பில் எரிச்சலும் வலியும் ஏற்படும். இது மாதிரியான குறைபாடு ஏற்படுவதற்கு உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ, அல்லது இரண்டும் சேர்ந்த காரணமாகவோ இருக்கலாம்.

 உடல்ரீதியான காரணங்கள்:

 பெண்கள் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜனில் குறைபாடு இருந்தால் இப்படி ஓர் சிக்கல் ஏற்படும்.

 பொதுவாக ஈஸ்ட்ரோஜனில் குறைபாடு - மெனோபாஸ் கோளாறுகளினாலோ, கருமுட்டைப் பை(ஓவரி)யை ஆபரேஷன் செய்து எடுத்துவிட்டாலோ, அடிவயிற்றுப் பகுதியில் பெரிய அறுவைசிகிச்சை செய்திருந்தாலோ ஏற்படலாம்.

 தைராய்டு ஹார்மோன் குறைபாடு, வைட்டமின் குறைபாடு காரணங்களாலும் இந்தச் சிக்கல் ஏற்படலாம்.

 நரம்பு மண்டலத்தில் குறைபாடுகள் இருந்தாலும் பெண்ணின் பிறப்புறுப்பில் நீர் சுரப்பு இல்லாமல் போகலாம். நரம்பு மண்டலக் குறைபாடு - தலையில் அடிபட்டதனால், வலிப்பு நோய், மூளையில் கட்டியால் ஏற்படலாம்.

 கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வது, சளி பிடிக்காமல் இருக்க சாப்பிடும் (Anti histamine)  மருந்துகள், அலர்ஜிக்காக சாப்பிடும் மருந்துகளாலும் இந்தப் பிரச்னை ஏற்படலாம்.

 மனரீதியான காரணங்கள்:

  சில பெண்கள் சின்ன வயது முதல் 'செக்ஸ் என்பது ஒரு பாவ காரியம்’ என்று நம்பிக்கொண்டிருப்பார்கள். இன்னும் சில பெண்கள் செக்ஸ் என்பது குழந்தை பெற்றுக்கொள்வதற்காக மட்டும் இயற்கை ஏற்படுத்திய ஏற்பாடாகும். சுகம் அனுபவிப்பதற்காக அல்ல என்று மனசுக்குள் பதிய வைத்திருப்பார்கள். இதுபோன்ற தவறான மனநிலையே நீர் சுரப்பு வராமல் செய்துவிடலாம்.

 சிறு வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்குப் பின்னாளில் இப்படி இயற்கைத் தடை ஏற்படலாம்.

 உடல் உறவு கொள்ளும்போது வலிக்கும். இதனால் சுகம் கிடைக்காமல் போய்விடும் என்கிற பயத்தினாலும் ஏற்படலாம்.

 தம்பதிக்கு இடையே இல்லற சச்சரவு காரணமாக குடும்ப உறவில் நல்லிணக்கம் இல்லாமல்போவதனால் உண்டாகலாம்.

 கணவனுக்கு விந்து முந்துதல் (Primature ejaculation) என்கிற குறைபாடு இருப்பதினாலும் இப்படி ஏற்படலாம். படுக்கையறையில் போதுமான செக்ஸ் முன்விளையாட்டுக்களில் ஈடுபடாமை ஒரு காரணமே.

சிகிச்சைகள்: இந்த விநோதமான பாதிப்புக்குத்  தரப்படும் சிகிச்சையானது... காரணம் உடல்ரீதியிலானதா, மனரீதியாலானதா... என்பதைப் பொறுத்து ஆளுக்கு ஆள் மாறுபடும். காரணம் மனரீதியானது என்றால்... கவுன்சிலிங், செக்ஸ்தெரபி, சப்போர்ட்டிவ் சைக்கோதெரபி தரப்பட வேண்டும். தம்பதிகளுக்கு இடையே ஆன சச்சரவு காரணம் என்றால் தம்பதிக்கு மேரிட்டல் தெரபி கொடுக்க வேண்டியிருக்கும். இந்தப் பிரச்னை உள்ள சிலருக்கு ஒன்றுக்கும் மேலான சிகிச்சை முறைகள் தேவைப்படலாம்.  இந்தப் பிரச்னை எந்தப் பெண்ணுக்கும் எந்த வயதிலும் வரலாம்.

- இடைவேளை....