முன்னோடிகள்

##~## |
மயக்க மருந்து நிபுணர்கள்... 'குளோரோஃபார்ம் டாக்டர்’களைத் தெரியும். அந்த மருந்தைக் கண்டுபிடித்தவரைத் தெரியுமா? ஜேம்ஸ் யங் சிம்சன் (James Young Simpson). இவர் 1811-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி ஸ்காட்லாண்டைச் சேர்ந்த ஒரு பேக்கரிக் கடைக்காரருக்கு ஏழாவது மகனாகப் பிறந்தார். தன் 21-வது வயதில் மருத்துவப் பட்டம் பெற்றார். மருத்துவம் படிக்கும்போதே, 'அழற்சியால் ஏற்படும் இறப்பு’ (Death on inflammation) என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்த இவரின் திறமையைக் கண்டு, நோய்க் குறியியல் பேராசிரியர் ஜான் தாம்சன், சிம்சனைத் தனது உதவியாளராக நியமித்துக்கொண்டார். 1830-களில் மகப்பேறு மருத்துவம் பற்றி தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்திய சிம்சனுக்கு, 1840-ம் ஆண்டு மகப்பேறு மருத்துவப் பேராசிரியர் பதவி கிடைத்தது.
1846-ம் ஆண்டு 'ஈதர்’ எனும் திரவத்தைப் பயன்படுத்தி அறுவைசிகிச்சை செய்வதைப் பார்த்த சிம்சன், அதை அறுவை சிகிச்சைகளுக்கு மட்டும் அல்லாமல், கர்ப்பிணிப் பெண்களுக்கு வலி இல்லாமல் சுகப்பிரசவம் செய்வதற்கும் பயன்படுத்தினார். அதன் மூலம் 'வலியில்லாப் பிரசவம்’ அறிமுகப்படுத்திய முதல் மனிதர் எனும் பெருமையை சிம்சன் பெற்றார்.

தனது நண்பர்கள் கெய்த் மற்றும் டங்கன் ஆகியோருடன் அடிக்கடி மயக்க மருந்துகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட ஆரம்பித்த சிம்சன், பல மருந்துகளைத் தனக்குத்தானே கொடுத்துப் பரிசோதித்துக்கொண்டார். இப்படித்தான், 1847-ம் ஆண்டு நவம்பர் 4-ம் நாள் 'குளோரோஃபார்ம்’ திரவத்தை மூவரும் நுகர்ந்தனர். அதனால், அதிகப் பரவசம் ஏற்பட்டதால் மேலும் மேலும் குளோரோஃபார்மை நுகர்ந்து மூவரும் அப்படியே மயங்கி விழுந்தனர். வெகுநேரம் கழித்து கண் விழித்த அவர்கள், மீண்டும் அதை சிம்சனின் உறவினரான 'பெட்ரி’ என்ற பெண்ணை நுகரச்செய்து, குளோரோஃபார்ம் மருந்தின் மயக்கும் தன்மையை உறுதி செய்தனர்.
இதில் ஒரு ரிஸ்க் இருந்தது. சிம்சன் மட்டும், சிறிது அதிகமாக குளோரோஃபார்மை நுகர்ந்திருந்தாலும்

உயிரிழப்பு ஏற்பட்டு குளோரோபார்ம் என்பதே ஒரு விஷப் பொருளாகக் கருதப்பட்டிருக்கும். அதே பயம் காரணமாக மிகவும் சிறிதளவு நுகர்ந்திருந்தால், அம்மருந்தில் இருக்கும் மயக்கும்தன்மை தெரியாமல் போயிருக்கும். இதனாலேயே தன்னையே பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார் சிம்சன்.
தனது கண்டுபிடிப்பான குளோரோஃபார்மை அனைத்து அறுவை சிகிச்சைகளுக்கும் பயன்படுத்திவந்த சிம்சன், 1847-ம் ஆண்டு விக்டோரியா மகாராணியின் மருத்துவராகவும், 1850-ம் ஆண்டு பிரபல ராயல் கல்லூரியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். வலியில்லா சுகப் பிரசவத்திற்காக, சிம்சன் குளோரோஃபார்மைப் பயன்படுத்திவந்தபோது, மதகுருமார்களும், சில மருத்துவர்களுமே கடுமையாக எதிர்த்தனர். ஆனாலும், மனம் தளராத சிம்சன், தனது சேவையைத் தொடர்ந்து செய்துவந்தார். 1853-ம் ஆண்டு விக்டோரியா மகாராணிக்கு, இளவரசர் 'லியோபால்ட்’ பிறந்தபோது, குளோரோஃபார்ம் பயன்படுத்தி வலியில்லாப் பிரசவத்தை சிம்சன் செய்தார். இப்படி குளோரோஃபார்முக்கு உலகளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தார்.
மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம் என்பது தனித் துறையாக வருவதற்கு அந்நாளிலேயே வித்திட்டார் சிம்சன். பிரசவத்தின்போது குழந்தையை ஆயுதம் மூலம் வெளியே எடுக்க உதவும் பிரத்யேகக் கருவியை வடிவமைத்தார். பேறுகாலத்தில் ஏற்படும் தொற்று நோய்களான, 'பியூர்பெரல்’, 'செப்சிஸ்’ பற்றி விரிவான ஆராய்ச்சி செய்தார். 1844-ல் தனது இல்லத்தில், மகளிருக்கான ஒரு பிரத்யேக கிளினிக் தொடங்கி, மூன்றே ஆண்டுகளில் 7,617 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். அவரது தொடர் சேவைகளால், உயரிய விருதான, 'நைட்’ விருதை 1866-ம் ஆண்டு பெற்றார். அந்த விருதைப் பெற்ற முதல் மருத்துவர் இவர். அதே ஆண்டிலேயே அதனிலும் உயரிய இங்கிலாந்து விருதான BARONET விருதையும் விக்டோரியா மகாராணி கைகளால் பெற்றார்.
1870-ம் ஆண்டு, மே மாதம் 6-ம் நாள் எடின்பரோ நகரில் சிம்சன் மறைந்தபோது, அந்த நகரிலும், ஸ்காட்லாந்து நாட்டிலும் அன்றைய நாள் பொது விடுமுறையாக அனுசரிக்கப்பட்டது. 1,700 பிரபலங்களும் ஒரு லட்சத்திற்கும் மேலான மக்களும் பங்கேற்ற சிம்சனின் இறுதி ஊர்வலம், ஒரு மருத்துவருக்குச் செலுத்தப்பட்ட மிக உயர்ந்த கௌரவம்.
- திரும்பிப் பார்ப்போம்...