காதலின் வலி உனக்கும் தெரியாதா சங்கீதா?
##~## |
சில ஆண்டுகளுக்கு முன்பு 21 வயது இளம் பெண், தன் கணவருடன் வந்திருந்தார். அவர் கணவருக்கு 27 வயது. அவர் பேசியதை அப்படியே சொல்கிறேன்.
'என் பெயர் சங்கீதா. நான் 10-ம் வகுப்பு படிக்கிறப்ப, இவர் என்னை எங்கோ பார்த்திருக்கார். உடனே என் மீது காதல்வயப்பட, நேராக வந்து என்னிடம் காதலைச் சொன்னார். நான் மறுத்துவிட்டேன். அப்போது எனக்கு 15 வயதுதான்.
நான் காதலை மறுத்ததும், வேதனையில் வீட்டுக்கு சென்று எலி மருந்தைக் குடிச்சிருக்கார். வீட்ல இருந்தவங்க அவரை மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாத்தியிருக்காங்க. இவரோட ஃப்ரெண்ட்ஸ், 'உனக்காகத்தான் அவன் மருந்து குடிச்சிட்டான். அவன் உன்னை உயிருக்கு உயிராக் காதலிக்கிறான்’னு என்கிட்ட சொன்னாங்க. இவர் நான் போற இடத்துக்கெல்லாம் தொடர்ந்து வந்து, காதலிக்கும்படி வற்புறுத்தினார். சிகரெட்டால் கையைச் சுட்டுக்கிறதும், கையில் என் பெயரை பச்சை குத்திக்கிறதையும் பார்த்திட்டு, 'சே... இவ்வளவு பாசத்தைக் காட்டுறாரே, இவரைவிட நம்மளை யார் நல்லாப் பார்த்துக்கப்போறா’னு நினைச்சு, நானும் காதலிக்க ஆரம்பிச்சேன்.

இந்த பிரச்னை என் வீட்டுக்குத் தெரிஞ்சுபோய், அப்பா அம்மா என்னை அடிச்சுக் கண்டிச்சாங்க. ஆனா, இவர் என்னைக் கூட்டிட்டுபோய் கல்யாணம் செய்துக்கிட்டார். அஞ்சு வருஷம் ஓடிருச்சு. இப்ப, எங்களுக்கு இரண்டு குழந்தைங்க’ என்றார்.
அந்த பெண் இதெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அந்த கணவர், 'உஷ், புஷ்’ என பெருமூச்சு விடுவதும், விட்டத்தை வெறித்துப் பார்ப்பதும், டேபிள் மீது தலைவைத்துப் படுப்பதுமாக ரெஸ்ட்லெஸ் ஆக இருந்தார்.
தொடர்ந்து அந்தப் பெண், 'இப்போ இவருக்கு 27 வயசாயிடுச்சு. வேற ஒரு பெண்கிட்ட இவருக்குக்

காதல் வந்திருக்கு. அந்த பெண்ணை எனக்குக் கட்டி வைனு தினமும் சண்டை போடுறார். இவர் எது நினைச்சாலும் அது நடக்கணும். இல்லைன்னா, கலாட்டா பண்ணிடுவார். கல்யாணத்துக்கு முன்னால, இவங்க அப்பா அம்மா, இவர் பேச்சை கேட்கலைனு ஓடுற பேன் உள்ள கை விட்டுருக்காராம்.
'உங்களை நம்பித்தானே வந்திருக்கேன். இப்படி வேற ஒரு பெண்ணை காதலிக்கிறதா சொன்னா எப்படி?’னு கேட்டேன். உடனே, கம்பியை பழுக்கக் காய்ச்சி, பச்சை குத்தியிருந்த என் பெயரை அழிச்சிட்டார். விஷம் குடிச்சு தானும் அந்தப் பெண்ணும் செத்துப்போயிடுவோம்னு மிரட்டுறார்’ என்றார் அழுதபடி.
'சரிம்மா அந்த பெண்ணைக் கல்யாணம் செய்துக்கிட்டா, உன் நிலை என்னாகும்னு கேட்டியா?’ என்றேன். அதற்கு அந்தப் பெண், 'உன்னை உயிருக்கு உயிராக் காதலிக்கிறேன். உன்னை எவ்வளவு காதலிக்கிறேனோ, அதே அளவுக்கு அவளையும் காதலிக்கிறேன்’னு டயலாக் விடுறார். அம்மா அப்பாவை உதறிவிட்டுட்டு வந்தேன், இவர் இப்படிப் பண்றாரே’ என்று அழுதார் சங்கீதா.
அப்போது, திடீரென சங்கீதாவின் கணவர் எழுந்து, மனைவியைப் பார்த்து 'இவருக்கு என்ன தெரியும்? ஏன் சங்கீதா, காதலோட வலி உனக்குமாத் தெரியாது?’ என்றபடியே தலையில் அடித்துக்கொண்டு அழுதவர் என்னிடம் திரும்பி, 'சார் என் பொண்டாடிக்கிட்ட சொல்லி அந்த பெண்ணை எனக்குக் கல்யாணம் செய்துவைச்சிடுங்க. பிரச்னை எல்லாம் தீர்ந்துடும்' என்றார்.
வாசகர்களே... இன்று பள்ளிக்கூடக் காதல்கள், ஒருதலைக் காதல், இருமுறைக் காதல்கள் பெருகிவிட்டன. எங்கே தவறு நடக்கிறது. என்ன செய்தால் இதுபோன்று பிரச்னைகள் தவிர்க்கலாம்? உங்கள் கருத்து என்ன?
