லூயிஸ் பாஸ்டியர்
'நாய்க்கடியைவிடவும் நடு வயிற்று ஊசிக்குப் பயந்தவர்கள் பலர்; பாதிப்பில் இருந்து விடுபட தொடர்ந்து ஊசி போட்டுக்கொண்டவர் சிலர். இப்படிப்பட்ட வெறிநாய்க்கடி தடுப்பு ஊசிக்கு அடித்தளம் இட்டவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் பாஸ்டியர் (Louis Pasteur).

1822-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி, ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த பாஸ்டியர், பள்ளிப் படிப்பில்

பின்தங்கியே இருந்தார். 1840-ம் ஆண்டு பி.ஏ. பட்டப்படிப்பையும், 1842ம் ஆண்டில் பி.எஸ்.சி., பட்டப்படிப்பையும் முடித்தார். இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றியபோது மேரி லாரண்ட் என்பவரை 1849-ம் ஆண்டில் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டார். இவர்களுக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளில் மூன்று குழந்தைகள், சிறுவயதிலேயே 'டைஃபாய்ட்’ நோய்க்குப் பலியாகினர். பின்னாளில் பாஸ்டியர் நோய்க்கிருமிகள் மீதான ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு இதுவும் ஒரு காரணம்.
பாக்டீரியா கிருமிகள் வளர்வதால்தான் நொதித்தல் ஏற்படுகிறது என்றும், அந்தக் கிருமிகள் தானாக வளர்வதில்லை, வெளியில் இருந்துதான் கிருமிகளின் தாக்கம் ஏற்படுகிறது என்றும் அதைத் தடுக்கலாம் என்பதையும் பல ஆராய்ச்சிகளின் மூலம் பாஸ்டியர் உணர்த்தினார். இதன் மூலம் நுண்ணுயிரிக் கொள்கையை (Germ Theory) உலகிற்கு அறிமுகப்படுத்திய பாஸ்டியர், 'நுண்ணுயிரியியலின் தந்தை’ எனப் போற்றப்பட்டார். பால், ஒயின், பீர் முதலியவற்றைக் கெடுப்பது நுண்ணுயிரிகள்தான் என்றும், பாலைக் கொதிக்கவைத்துப் பதப்படுத்துவதன் மூலம் இந்த நுண்ணுயிரிகளை அழிக்கலாம் என்ற பாஸ்டியர் கண்டுபிடித்த முறை இன்றளவும் Pasteurisationஎன்றே அழைக்கப்படுகிறது. இதே நுண்ணுயிரிகள் மனிதனுக்கும் நோயை வரவழைப்பதால், இதைத் தடுத்தால் நோயைத் தடுக்கலாம் என்பது பாஸ்டியரின் கொள்கை. ஆக்சிஜன் மற்றும் தண்ணீர் இல்லாமலும் நோய்க் கிருமிகள் 'அனரோபியாசிஸ்’ என்ற முறையில் வளரும் என்று பாஸ்டியர் அறிவித்த கொள்கை 'பாஸ்டியர் விளைவு’ என்றழைக்கப்படுகிறது. கால்நடைகளைத் தாக்கும் ஆந்த்ராக்ஸ் நோய்க்கும், வெறிநாய்க் கடியால் வரும் 'ரேபீஸ்’ நோய்க்கும் தடுப்பு ஊசிகளைக் கண்டுபிடித்தார் பாஸ்டியர். ஜுலை 6-ம் தேதி 1885-ம் ஆண்டு வெறிநாயால் கடிபட்ட ஜோசப் மெஸ்டர் என்ற ஒன்பது வயதுச் சிறுவனுக்கு முதன்முதலாக அந்தத் தடுப்பு ஊசியை செலுத்தினார். அப்போது அவர் அரசு உரிமம் பெற்ற ஒரு மருத்துவராக இல்லாமல் இருந்தாலும் சட்டவிரோதமாகத் துணிச்சலோடு அந்தத் ஊசியைச் செலுத்தினார். ஊசி மிக நன்றாக வேலைசெய்து அனைவருக்கும் பயன் தந்ததால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
1887- ல் நுண்ணுயிர் ஆராய்ச்சிக்காக அவரால், 'பாஸ்டியர் இன்ஸ்டிடியூட்’ துவங்கப்பட்டது. ஒரே வருடத்தில், நுண்ணுயிரிகள் பற்றிய படிப்பினை (மைக்ரோபயாலஜி) உலகிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தினார்.
நுண்ணுயிரிகளின் ஆராய்ச்சிக்காக 'டட்ச்’ விருது, 'நைட்’ விருது (knight), லீவன் ஹாக் பதக்கம், அரேபிய சுல்தானின் பதக்கம் மற்றும் பத்தாயிரம் அரேபிய லிராஸ் போன்றவை பாஸ்டியர் தன் சாதனைகளுக்காக பெற்ற விருதுகளாகும். பிரான்ஸ், அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளில் பல தெருக்களுக்கும் பாஸ்டியர் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. அமெரிக்கா, பிரான்ஸில் பாஸ்டியரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் பாஸ்டியர் இன்ஸ்டிடியூட், தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது.
- திரும்பிப் பார்ப்போம்...
ரிஸ்க் எடுத்த பாஸ்டியர்!
எட்வர்ட் ஜென்னர், இயற்கையான முறையில் வாக்சின் தயாரிப்பில் முன்னோடியாக இருந்தாலும், பாஸ்டியரின் ஆராய்ச்சியில் செயற்கை முறையில் வாக்சின் தயாரிக்கப்பட்டதால், நோய்த் தாக்கத்தின் அளவு குறைவாக இருந்தது. மருத்துவராக இல்லாதபோதே துணிச்சலோடு தடுப்பு ஊசி செலுத்திய பாஸ்டியர், ஆராய்ச்சி என்றாலே பல விஷப் பரீட்சைகளிலும் ஈடுபட்டார். 'ரேபீஸ்’ வைரஸ் அதிகம் இருக்கும் வெறிநாய்களின் உமிழ்நீரைப் பிரித்தெடுப்பதற்காக, கட்டப்பட்ட ஒரு நாயின் வாயில் ஒரு கண்ணாடிக் குழாயை வைத்து மறுமுனையில் தனது வாயை வைத்து உறிஞ்சினார். மருந்தால் அழிக்க முடியாத ரேபீஸ் வைரஸ், உமிழ்நீரின் மூலம் வேகமாகப் பரவும் என்று அறிந்த பின்னும் பாஸ்டியர் ரிஸ்க் எடுத்து செய்த முறை ஆச்சரியமானதுதான்!