Published:Updated:

கேள்வி பதில்

கேள்வி பதில்

கேள்வி பதில்

பல்லியால் பயம்!

 சத்தியராஜன், தஞ்சாவூர்

சமைத்த உணவுகள் எதையுமே மூடி வைக்கும் பழக்கம் என் மனைவிக்கு இல்லை.  இதனால், பல்லி விழுந்திருக்குமோ என்ற பயம் அடிக்கடி எனக்கு ஏற்படுகிறது. உணவில் பல்லி விழுந்தால் என்ன ஆகும்?

டி. ரவிகுமார், மூத்த பேராசிரியர், கோவை அரசுப் பொதுமருத்துவமனை மருத்துவக்கல்லூரி

பல்லி விஷப் பிராணியே இல்லை. சமைத்து வைத்த உணவில் பல்லி விழுந்தால், விழுந்த வேகத்தில், அது சிறுநீர், எச்சம் கழித்துவிடும். அதில் உள்ள கிருமிகளால் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படக்கூடும். உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.  

கொதிக்கும் உணவில் பல்லி விழும்போது, அது நன்றாக வெந்து, கிருமிகள் எல்லாம் அழிந்து போயிருக்கும். அந்த உணவை தெரியாமல் சாப்பிட்டுவிட்டாலும் ஒன்றும் ஆகாது. பல்லி விழுவதை கண்ணால் பார்த்த அருவருப்பு, பயம் காரணமாகதான் தலை சுற்றல், குமட்டல் ஏற்படுகிறது. வேறு ஒன்றும் ஆகாது. உணவுப் பண்டங்களை திறந்துவைப்பதால் உணவே விஷமாக மாறிவிடும். அதேபோல், பயமே... வியாதிக்கான வித்துதான். மனைவியிடம் அதட்டி புரியவைக்காமல், அக்கறையுடன் எடுத்துச் சொல்லுங்கள்.

தேமல் போக்க ஆவல்!

புண்ணியமூர்த்தி, கோவில்பட்டி.

எனக்கு 35 வயது. என் தோலில் ஆங்காங்கே  சிறு சிறு வட்டங்களாக தேமல் போல் இருக்கிறது.  ஆனால், வலியோ நமைச்சலோ இல்லை. இதைப் போக்க என்ன வழி?

டாக்டர் சம்பத். தோல் சிகிச்சைப் பிரிவு, சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை.

தேமல், மலாஸெஸியா குளோபோசா (malassezia globosa) என்ற பூஞ்சையினால் ஏற்படுகிறது. ஈஸ்ட் வகையைச் சேர்ந்த இந்த பூஞ்சை அதிக அளவில் பெருகும்போது சில சமயங்களில் தேமலாக மாறும். எண்ணெய் சருமத்தினர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், மிக அதிகமாக வியர்ப்பவர்களுக்கும் தேமல் வரும் வாய்ப்புகள் அதிகம். முதுகு, தோள்பட்டை மற்றும் நெஞ்சுப் பகுதியில் அதிகம் தோன்றும். சிலருக்கு முகத்திலும் வரலாம்.  கோடையில் இதன் தாக்கம் அதிகம் இருக்கும்.

செலேனியம் சல்ஃபைட், மைகோனஸோல், குளோட்ரிமோஸோல் போன்ற மருந்துகள் அடங்கிய களிம்புகள், மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பயன்படுத்தலாம்.  ஒரு முறை தேமல் குணமானால் மீண்டும் வரலாம். துணிகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள் போன்றவற்றை உலர்வாக வைத்திருக்க வேண்டும்.

எம்.ஜெயராணி, வேலூர்

'ஒரு வருஷத்திற்கு முன்பு என் கணவருக்கு மஞ்சள் காமாலை வந்தது. அந்த நேரத்தில் பத்திய உணவு சாப்பிட்டுவந்தார்.  தற்போது முற்றிலும் குணமாகிவிட்டாலும், அவருக்கு என்ன மாதிரியான உணவு கொடுக்க வேண்டும் என்பதில் குழப்பமாக இருக்கிறது?  சேர்க்கவேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் பற்றி கூறுங்கள்.'

கேள்வி பதில்

டாக்டர் மைக்கேல் ஜெயராஜ், சித்த மருத்துவர், திருநெல்வேலி

'மஞ்சள் காமாலை நோய் வந்து சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் எண்ணெய் மற்றும் கொழுப்பு அதிகம் இருக்கும் உணவுப் பொருட்கள், மசாலா வகைகளை சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. மாவுச்சத்து,  தானியங்கள், முளைக்கட்டிய பயிறு வகைகள் உடல் நலத்துக்கு நன்மை விளைவிக்கும். கீழாநெல்லி உள்ளிட்ட எந்த பச்சிலையாக இருந்தாலும் அதனை உணவுக்காக எடுத்துக் கொண்டால் கூட, பத்தியமாக இருக்க வேண்டும் என்கிற தவறான எண்ணம் மக்களிடம் இருக்கிறது. நோய்க்குத்தான் பத்தியமே தவிர பச்சிலைக்கு அல்ல. அதனால், உணவில் அடிக்கடி கீழாநெல்லி சேர்த்துக்கொள்வது நல்லது.

மஞ்சள் காமாலை வந்து, ஓராண்டை கடந்து விட்டதால், அசைவ பிரியராக இருந்தால், மீன், எப்போதாவது வெள்ளாட்டு கறி சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், மீண்டும் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து நோயின் தற்போதைய தன்மையை அறிந்த பிறகு, அவர் பரிந்துரைத்தால் மட்டுமே அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.'