அக்கம் பக்கம்

சூப்பர் சிரிஞ்ச்

செல்களுக்குள் ஊடுருவிச் சென்று மருந்தைச் செலுத்தக்கூடிய நானோ ஊசியை உருவாக்கியுள்ளனர் நார்வேயைச் சேர்ந்த இயற்பியலாளர் பாவெல் சிகோர்ஸ்கியும் அவரது குழுவினரும். மருத்துவ ஆய்வுகளிலேயே மிகவும் முக்கியமான நிகழ்வு இது என்று வியக்கிறது மருத்துவ உலகம். மருந்துகளையே ஏற்காமல் நிராகரிக்கும் தன்மைகொண்ட செல்களாக இருந்தாலும், இந்த நானோ நீடில்கள் மிகவும் எளிதாக செல்களுக்குள் கொண்டு போய் மருந்துகளை செலுத்தக் கூடிய திறமைகொண்டவை. நுண்ணோக்கி மூலம் இதைச் செய்து காட்டிய பாவெல், தற்போது இந்த ஆராய்ச்சியை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறார். 'நானோ நீடில்களின் நுனியில் மருந்தை வைத்து விட்டு, சாதாரணமாக ஊசி போடுவது போல் நம் உடலில் இதை செலுத்தலாம்’ என்கிறார் பாவெல். செல்களுக்குள் மருந்து களைச் செலுத்துவதில் உள்ள சிரமங்களைப் போக்கும் வகையில் இந்த ஊசி உருவாக்கப்பட்டுள்ளது!
சமத்து சமந்தா!

சமீபத்தில் கர்ப்ப வாய்ப் புற்றுநோய்க்கான இறுதிக்கட்ட தடுப்பூசியை எடுத்துக்கொண்ட நடிகை சமந்தா, புற்றுநோய் வராமல் தடுக்கும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில், 'என்னுடைய கடைசிக் கட்ட தடுப்பூசியை எடுத்துக்கொண்டேன். பெண்களே நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் தடுப்பூசியை எடுத்துக் கொண்டீர்களா... என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார். இந்தியாவில் ஆண்டுதோறும் 80 ஆயிரம் பெண்கள் கர்ப்ப வாய் புற்றுநோயால் உயிரிழக்கும் நிலையில், சமந்தா, விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.
புற்றுநோயைப் போக்கும் நானோ பட்ஸ்

மருத்துவ உலகமே புற்று நோய்க்கான தீர்வைத் தேடிப் போராடிவரும் நிலையில், சமீபத்தில் நானோ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டு இருக்கும் 'நானோ பட்ஸ்’ என்ற நானோ ரோபோ, புற்று நோய்க்கு மட்டுமின்றி; மேலும் பல நோய்களுக்கும் நிரந்தரத் தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அற்புத நானோ ரோபோ, ரத்த அணுக்கள் வரைச் சென்று நோய்க்கான காரணிகளை அழித்து, அணுக்களை மீண்டும் பழையபடி செயல்படச் செய்கிறது என்கிறார்கள். தற்போது புற்று நோய்க்கான மருத்துவமாக பின்பற்றப்பட்டுவரும் கீமோதெரபி, புற்று நோய்க்கான செல்களை மட்டுமின்றி, ஆரோக்கியமான செல்களையும் சேர்த்தே அழித்துவிடும். ஆனால் நானோ ரோபோ மூலம் இந்தக் குறையைச் சரிசெய்து விட முடியும். இது புற்று நோய்க்கான அணுக் களை மட்டுமின்றி; மற்ற அணுக்களின் ஆரோக்கியமற்ற செயல்களையும் சரிசெய் கிறது. வருங்காலத்தில் இந்தத் தொழில் நுட்பத்தால் ஊசி மூலம் நானோ ரோபோக்களை மனித உடம்புக்குள் செலுத்தி புற்று நோயை நிரந்தரமாகச் சரிசெய்து விட முடியும். கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்தால், அதை மாற்றாமலேயே, நானோ ரோபோ மூலம் அதனை சீர் செய்துவிட முடியும். எனவே வருங்காலத்தில் உடல் தானமே தேவையற்றதாகிவிடும். இதே போல மனித சமூதாயத்துக்கே சவாலாக இருக்கும் எய்ட்ஸ் நோயையும் வருங்காலத்தில் குணப்படுத்திவிட முடியும் என்றும் நம்புகிறார்கள்.
இதய வால்வு 'இட’மாற்று சிகிச்சை!

இந்தியாவிலேயே முதன்முறையாக, சென்னை ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வலதுபுற இதயம் உள்ள நோயாளி ஒருவருக்கு இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனைப் படைத்துள்ளது. 12 ஆயிரத்தில் ஒருவருக்கு மிக அபூர்வமாக பிறவியிலேயே இடபுறம் இருக்க வேண்டிய இதயம் வலப்புறம் அமைந்திருக்கும். இவர்களில் ஐந்தாயிரம் பேரில் ஒருவருக்குத்தான் ஒட்டுமொத்த வயிற்று உறுப்புகளும் இடம் மாறிய நிலையில் இருக்கும். அப்படித்தான் இந்த நோயாளிக்கு இதயம், கல்லீரல் மற்றும் பித்தப்பை என உடல் உள் உறுப்புக்கள் இடம் மாறியிருந்தன. இவருக்கு ஈ.சி.ஜி. எடுக்க வேண்டும் என்றால் வழக்கமாக செய்யும் நிலையில் இல்லாமல், 'லீடு'களை எதிர்மாறான நிலையில் வைக்க வேண்டும். இதுபோன்று ஏராளமான சிக்கல்கள். இந்த அறுவை சிகிச்சையின்போது இதய நுரையீரல் பைபாஸ் செய்வது எல்லாம் மிகச் சிக்கலானது என்றாலும், மருத்துவர்கள் போராடி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். தற்போது அவர் ஆரோக்கியமாக இருக்கிறார்!
வந்தாச்சு டெங்கு!

தமிழகத்தில் மீண்டும் டெங்குக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பெய்துவரும் தென்மேற்குப் பருவ மழை காரணமாகவும், அதிகரித்துவரும் சுகாதாரமற்ற நீர் நிலைகளாலும், மீண்டும் 'டெங்கு’ காய்ச்சல் பரவிக் வருகிறது. இதற்கு முன்பு தமிழ்நாட்டில், கடந்த ஆண்டு ஜூன், ஜூலை, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் டெங்குக் காய்ச்சல் பரவியதால், தமிழகம் முழுவதும் பலர் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு, தற்போது தமிழகத்தில் மீண்டும் டெங்குக் காய்ச்சல் பரவத் தொடங்கியிருப்பது வருந்தத்தக்கது!
குணமடைந்துவிட்டார் கொய்ராலா.

புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த பிரபல பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலா, குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். 42 வயதான மனீஷா கொய்ராலா, நியூயார்க்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்ற பிறகு, தற்போது முழுவதுமாக குணமடைந்துவிட்டார். 'புற்று நோயிலிருந்து மீண்டு வந்துவிட்டேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கு. விரைவில் படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளேன்’ என்று கூறியிருக்கிறார் மனீஷா!
'பய’ மெசேஜ்!

ஆஸ்திரேலியாவில் 10 இளைஞர்களில் ஒன்பது பேருக்கு, மொபைல் போன் தொலைந்துபோவதாக நினைத்து வரும் 'நோமோபோபியா’ எனும் ஒரு வகை பய நோய் இருக்கிறது என்று ஆஸ்திரேலியா சிஸ்கோ நிறுவனம் நடத்தியக் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்த நிறுவனம், ஆஸ்திரேலியாவில் 30 வயதுக்குட்பட்ட 3,800 நபர்களிடம் நோமோபோபியா குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியிருக்கிறது. ஆஸ்திரேலிய
இளைஞர்கள், ஒவ்வொரு 10 நிமிடத்திற்கு ஒரு முறை, தங்களுக்கு மெசேஜ் அல்லது மெயில் வந்துள்ளதா என பார்த்துக்கொள்வதாகவும், ஒருநாளில் சராசரியாக 96 முறை தங்கள் போனை சரிபார்த்துக்கொள்வதாகவும் கருத்துக் கணிப்பின் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது!
அரசின் அசத்தல் அறிவிப்பு!

பள்ளிகளில் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில், அரசுப் பெண்கள் பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பெண்கள் பள்ளிகளில், இனி, அனைத்து பணியிடங்களிலும் பெண் ஆசிரியைகள் மட்டுமே நியமனம் செய்யப்படுவர் என தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அதேபோல, ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்றும் இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறைக்குப் பிறப்பித்துள்ளது. இனிமேல், ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்யும்போதோ, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தும்போதோ, புதிய உத்தரவையே அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே, ஏற்கெனவே பணிபுரிந்துவரும் ஆசிரியர்களுக்கு இந்த அறிவிப்பால் எந்த பாதிப்பும் வராது.
'முடி’வில்லாப் பிரச்னைக்கு முடிவு
கடந்த நான்கு வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட, அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி சுகன்யா, ஏசியன் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரது வயிறை ஸ்கேன் செய்து பார்த்தபோது 'ரபுன்செல் சிண்ட்ரோம்’ என்ற அரிய வகை நோய் இருந்ததைக் கண்டுபிடித்தனர். 'ரபுன்செல் சிண்ட்ரோம்’ என்பது தலைமுடியை விழுங்குவதால் சிறு வயதினருக்கு வரும் அரிய குடல் வியாதி. இவர் வயிற்றுப் பகுதியில் குடல் பகுதியைத் தாண்டி மலக்குடல் வரை 1.5 மீ. நீளத்துக்கு முடி அடைத்துக்கொண்டிருந்தது தெரியவந்தது. அறுவை சிகிச்சைச் செய்து வயிற்றில் இருந்த முடிப் பந்து நீக்கப்பட்டது. ஆபத்தானக் கட்டத்தைத் தாண்டிய சுகன்யா, கொஞ்சம் தாமதமாக வந்திருந்தால், முடியானது குடல் சுவரில் துளையை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை விளை வித்திருக்கக்கூடும் என்கிறார் மூத்த அறுவை சிகிச்சை நிபுணரான பரபல் ராய் உலகிலேயே இதுவரை 30 பேர் இந்த நோய்க்கானச் சிகிச்சைப் பெற்றுள்ளனர். அதில் மூன்று பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாம்!
கச்சித ஆடை நோய்க்கு விடை...
பெண்கள் தவறான அளவுகளில் உள்ளாடை அணிவதால் உடல்நிலையில் பல மோசமான விளைவுகளைச் சந்திப்பதாக பிரித்தானிய ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
பெண்கள் அணியும் உள்ளாடைகளில், முக்கியமாக தவறான அளவைக்கொண்ட மார்பு கச்சைகளை அணிவதால் தோலில் தடிப்பு, தசைநாண் அழற்சி போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், பொதுவாக உலக அளவில் 80 சதவிகித பெண்களுக்கு தங்களுடைய சரியான அளவில் உள்ளாடையை தேர்ந்தெடுக்கத் தெரிவதில்லை. சரியான மார்பு கச்சையை அணிவதால் அழகாக தெரிவது மட்டுமின்றி, உடல்நலத்துக்கு அதுதான் ஆரோக்கியம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.