Published:Updated:

வீட்டுக்குள் செருப்பு அணியலாமா?

வீட்டுக்குள் செருப்பு அணியலாமா?

##~##

பாரம்பரியப் பழக்கவழக்கங்கள் அனைத்துமே, நாம் நோயின்றி வாழ்வதற்காகவே காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தவைதான்.  ஆனால், இன்றைய நவீன உலகில், பாரம்பரிய விஷயங்களைப் புறந்தள்ளிவிட்டு ஆடம்பர விஷயத்திற்கு அடிமையாகிவிட்டதன் விளைவு, அத்தனை வியாதிகளும் வரிசை கட்டி வரத் தொடங்கிவிட்டன. 

உதாரணத்துக்கு, அந்தக் காலத்தில் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழையும்போதே, கால்களை நன்றாகக் கழுவிவிட்டு உள்ளே நுழையும் வழக்கம் இருந்தது. ஆனால், இன்றோ வீட்டிற்குள் நுழைந்ததும் கால்களைக் கழுவுவது என்பதையே கைகழுவிவிட்டார்கள். சிலரோ வெளியில் கிடத்த வேண்டிய செருப்பையே, வீட்டின் படுக்கை அறை வரை போட்டுக் கொள்கின்றனர். கால்களை அழகுப்படுத்திக்கொள்ளும்போது அதைத் தாங்கி நிற்கும், செருப்பைச் சரிவர சுத்தம் செய்யாமல் விட்டுவிடுகின்றனர்.  செருப்பின் அசுத்தத்தால், எந்த அளவுக்கு ஆபத்து ஏற்படும்?

வீட்டுக்குள் செருப்பு அணியலாமா?

சென்னை தோல் மருத்துவர் ரவிசந்திரன் தெள்ளத் தெளிவாக விளக்கினார்.

'பெரும்பாலான நோய்களுக்கு மூலக்காரணமே வெறும் காலில் நடப்பதுதான். வீட்டிற்குள் ஒன்று, வெளியே ஒன்று எனத் தனித்தனி செருப்புகளை உபயோகிப்பது நல்ல பழக்கம்தான்.  அதே நேரம், வெளியே சென்று வரப் பயன்படுத்தும் செருப்பை வீட்டில் பயன்படுத்துவதுதான் பெரும் ஆபத்து. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இனம் தெரியாத பல நோய்கள் படையெடுப்பதற்கும் இதுவே காரணம். காலில் ஆணி, மரு, பித்தவெடிப்பு போன்றவை இருந்தால் அது இன்னும் பெரியதாகி, பிரச்னையை ஏற்படுத்தும். வைரஸ் தொற்று, காலில் நகச்சுத்தி போன்றவை ஏற்படும்.  

அதிலும், குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்குக் கால்

வீட்டுக்குள் செருப்பு அணியலாமா?

பராமரிப்புதான் முக்கியம். காலில் காயம் ஏற்பட்டால், சீக்கிரத்தில் ஆறாது. அவர்கள் வீட்டில் பயன்படுத்துவதற்கு என்று, பிரத்யேகமாக விற்கக்கூடிய வி.சி.ஜி மற்றும் வி.சி.ஸி போன்ற செருப்புகளைத்தான் உபயோகிக்க வேண்டும். தப்பித் தவறி அசுத்தமான செருப்புகளுடனோ அல்லது வெறும் காலுடனோ நடந்தால் தேவை இல்லாத பிரச்னைகளைச் சந்திப்பதோடு, சில சமயங்களில் காலை எடுக்கக்கூடிய அபாய நிலையும் ஏற்படலாம். வீட்டு வாசலில் தொடங்கி, தோட்டம் வரை வீட்டின் ஒவ்வோர் அறைக்கும் தனித்தனி மிதியடிகளை உபயோகிப்பதன் மூலம், செருப்பில் இருக்கும் தூசுகள் மிதியடிகளில் படிந்து எளிதில் சுத்தம் செய்ய ஏதுவாக இருக்கும். வெளியில் சென்றுவிட்டு வந்தவுடன், வீட்டிற்கு வெளியிலேயே செருப்பைக் கழற்றிவிடவேண்டும். கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமி செருப்பில் ஒட்டி இருக்கலாம்.  இதுவே, உடலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். செருப்பை அதற்கு உரிய இடத்தில் வைத்து கை, காலினை நன்றாகக் கழுவ வேண்டும்.

பாத்ரூமிற்கு என்று தனியாக செருப்பைப் பயன்படுத்துவது நல்லது. இதையும் பாத்ரூம் அருகிலேயே தனியாக வைத்துவிடுங்கள். அதனை மற்ற அறைகளுக்குள் கொண்டு போவதால், அலர்ஜி, ஆஸ்துமா, இடைவிடாத தும்மல் போன்றவை வந்து பாடாய்ப்படுத்தும். மேலும், அலர்ஜியால் வாந்தி, பேதி, காய்ச்சல் எனத் தேவை இல்லாத நோய்களும் வர வாய்ப்பு உண்டு.'' என்கிறார் டாக்டர் ரவிசந்திரன்.  

- க.பிரபாகரன்

 டிப்ஸ்... டிப்ஸ்...

வீட்டுக்குள் செருப்பு அணியலாமா?

•  என்னதான் தலை போகும் காரியமாக இருந்தாலும், செருப்பு அல்லது ஷூ-வை துடைத்து, உள்ளே ஏதாவது இருக்கிறதா என ஆராய்ந்த பார்த்த பின்னரே அணிய வேண்டும்.

•  வாரம் ஒரு முறை சுடுநீரில் டெட்டால் விட்டு காலனியை ஊறவைத்து சுத்தப்படுத்துவது அவசியம்.

•  சர்க்கரை நோயாளிகள் ஃபீடிங் பன்வர் பொருத்திய காலணிகள் அணியலாம். எதன் மீது மோதினாலும், காலில் அடிபடாமல் காக்கும்.

•  பிஸியோதெரபி, அக்குபஞ்சர் சிகிச்சையில் உள்ளவர்களின் பாதங்களுக்கு அழுத்தம் கொடுக்கவும், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் பாலிமர் கவர் ஷீட் பொருந்திய காலணிகள் நல்லது.

•  செருப்பு, ஷூ-வை அடிக்கடி பாலிஷ் செய்ய வேண்டும்.

•  பளபளவென்று பாலிஷ் போடும் போது, செருப்பில் இருக்கும் ஈரத் தன்மையும் நீங்கி நடக்கும்போது நல்ல கிரிப் கிடைக்கும்.

•  ஆண்களைவிட பெண்களின் பாதம் மிக மென்மையாக இருக்கும். அதனால், வயதான பெண்கள், வாதநோய் பிரச்னை உள்ளவர்கள், குளிரான இடங்களிலும், ஈரத்தன்மை உள்ள இடங்களிலும், செருப்பு அணியாமல் நடக்கக் கூடாது.

•  ஒருபோதும் இறுக்கமான செருப்புகளையோ, ஷூக்களையோ அணியக் கூடாது. அப்படி அணிந்தால், ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மயக்கம் உண்டாகவும் வாய்ப்புகள் அதிகம்.

•  பிளாஸ்டிக் செருப்புகளைவிட, தோல் செருப்புகளும், ஷூக்களுமே சிறந்தவை. பாதத்தில் அதிகமாக வியர்வை வழிதல், கால்களில் நோய் உள்ளவர்கள், உடல் பலம் குறைந்தவர்கள் பிளாஸ்டிக் செருப்பை பயன்படுத்தும்போது, உடலில் அதிக உஷ்ணம் ஏறி எளிதில் சோர்வினை உண்டாக்கிவிடும். இதனைத் தவிர்க்க தோல் செருப்பு அணிவதே சிறந்தது.